திருப்பலி முன்னுரை
(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;
கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க உறவுகளே! இன்று வருடத்தின் இறுதி நாள். 2023ம் ஆண்டிற்கு நாம் விடைகொடுத்துவிட்டு, 2024 என்கின்ற புதிய ஆண்டிற்குள் கால்பதிக்க இருக்கின்றோம். எம்மை கடந்து சென்ற நாட்கள், இனி எம் நினைவுகளே. நிகழ்வுகள், அனுபவங்கள் அழகானவை. எம் நினைவுகளில் எம்மை தாங்கிச் செல்பவை. நாம் அடைந்த வெற்றிகள், சாதனைகள், எல்லாமே எமக்கு அணிசேர்க்கின்றன. இருப்பினும், எமது தோல்விகளும், இழப்புக்களும் பிரிவுகளும், பிறழ்வுகளும் எமக்கு புதிய பாடத்தையே கற்றுத்தருகின்றன. 2024ம் ஆண்டை பெருமகிழ்வோடு வரவேற்போம். இந்த ஆண்டு எமது புதிய அனுபவமாக இருப்பதாக.
இன்று அன்னையாம் திரு அவை, அன்னை மரியாள் இறைவனின் தாய் எனும் பெருவிழாவைக் கொண்டாடுகின்றாள். புதிய ஆண்டை அன்னையின் பரிந்துரையிலும், பாதுகாவலிலும் ஒப்புக்கொடுத்து மன்றாட அழைக்கின்றாள். இன்று தான் இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்து, பெயர் சூட்டிய நாளாகவும் நற்செய்தியாளர் புனித லூக்கா எமக்கு நினை{ட்டுகின்றார். இயேசுவின் பெயரே அவரது அடையாளமாகின்றது. இப்பெயருக்கே விண்ணுலகோர் மண்ணுலகோர் அனைவரும் மண்டியிடுவர் என்று தந்தையை, இறைவனை இம்மண்ணுலகில் எண்பிக்க பிறக்கின்றார் இயேசு.
எமது வாழ்வுக்கான அர்த்தத்தைத் தேடுவோம். எம்மையே கருவியாகக் கொண்டு எமது புதிய பயணத்திற்கான திறவுகோளை உருவாக்குவோம். ஏழைகளை, ஏழையின் பலமுகங் கொண்டோரை கண்டுகொள்வோம். அன்பினால் மாத்திரமே உலகின் தீமைகளை வெல்லமுடியும் எனும் எடுகோளை கற்றுக்கொள்வோம். எமது இந்த புதிய பயணத்திற்கு, அன்னையின் பரிந்துரை கேட்டு தொடரும் கல்வாரிப் பலியில் கலந்துகொள்வோம்.
வருகைப் பல்லவி: வாழ்க, புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்றும் ஆளும் அரசரைப் பெற்றெடுத்தவர் நீரே.
அல்லது
இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ 'வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை' என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.
காண். எசா 9:1,5; லூக் 1:33
திருக்குழும மன்றாட்டு
இறைவா, புனித மரியாவின் வளமையான கன்னிமையால் மனிதக் குலத்துக்கு நிலையான மீட்பின் பரிசுகளை வழங்கினீரே. அவரது பரிந்துரையை நாங்கள் உணரவும் அவர் வழியாக வாழ்வின் ஊற்றாகிய உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
முதலாம் இறைவாக்கு:
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27
பதிலுரைப் பாடல்
திபா 67: 1-2. 4. 5,7
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
இரண்டாம் இறைவாக்கு :
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி 1: 1-2
பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு:
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்
விசுவாசிகள் மன்றாட்டு
குரு: பிறந்திருக்கின்ற புதிய வருடத்திலே ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிய வேண்டி, எமது தேவைகளை அவர் பாதம் ஒப்புக்கொடுப்போம்.
1. 'நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள'; என்று மொழிந்த இறைவா! இன்றைய உலகில் நற்செய்தி அறிவிக்க என நீர் தேர்ந்துகொண்ட உம் அடியார்களாகிய திருநிலைப் பணியாளர்களையும், பொதுநிலைப் பணியாளர்களையும், உம் கரம் தாங்கி அவர்களை ஆசீர்வதித்து, உமது சித்தப்படி அப்பணியை முழு மனதுடன் நிறைவேற்ற உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் என்ற புனித பவுலின் உரைக்கல்லிற்கு ஒப்ப, அழைக்கப்பட்ட நாம் அனைவரும், முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கவும், தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யவும், பொய்மை மலிந்த உலகிலே உண்மை நிலைநிற்க அதற்காக உழைக்கவும், தமது அர்ப்பணத்தால் திருஅவை வாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்புள்ள ஆண்டவரே! பிறந்திருக்கின்ற புதிய ஆண்டிலே, எமது குடும்பங்கள், உறவுகள், சொந்தங்கள், பிள்ளைகளின் வாழ்வு, மற்றும் அவர்களின் கல்வி, எதிர்கால கனவுகள், தீர்மானங்கள், பெற்றோரின் வாழ்வாதாரங்களை இறைவன் ஆசீர்வதிக்கவும், எமக்கு முன்பே இருக்கின்ற சவால்கள் போராட்டங்கள் மத்தியில் துணிவுடம் பயணிக்கவேண்டிய வலிமையைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின் ஆண்டவரே! எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. அன்பும் வல்லமையும் நிறைந்த ஆண்டவரே! இந்த நவீன உலகிலே கிறிஸ்தவ வாழ்வை சிதைக்கும் பாலியல் வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், கருக்கொலைகள் என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் சீர்கேடுகளை அதிகாரத்தோடும், உரிமையோடும், தட்டிக்கேட்கவும், இதனால் பாதிப்புறும் எம் மக்களின் வாழ்வுக்கு ஒரு விடியல் கிடைத்திடவும் நீர் தேர்ந்தெடுக்கின்ற உமது மக்கள் உண்மையில் நிலைத்திடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: எங்களை எல்லாம் அன்புசெய்து வழிநடத்தும் இறைவா! உமது ஆசீர்வாதத்தால் எமக்கு நீர் தந்திருக்கின்ற இந்த புதிய ஆண்டிற்காய் நன்றி சொல்கின்றோம். எமது மனங்களை மாற்றும், புதிய மாற்றங்களை தாரும், புதிய தீர்மாங்கள் வழியாக எமது வாழ்வின் குறிக்கோளை அடைய உதவியருளும். நாம் கடந்து செல்ல இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உமது திட்டத்தின் படி நடந்தேறுவதாக. எமது விண்ணப்பங்கள் அனைத்தையும் நீர் நிறைவேற்றி உமது அருளை எமக்கு பெற்றுத் தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
இறைவா, நல்லவை அனைத்தையும் கனிவுடன் தொடங்கி நிறைவு காணச் செய்கின்றீர்; உம் புனித அன்னையின் பெருவிழாவில் மகிழ்ச்சி அடைந்துள்ள நாங்கள் உமது அருளின் தொடக்கத்தில் மாட்சி அடைவது போல அதன் நிறைவிலும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி:
எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்.''
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:
ஆண்டவரே, விண்ணக அருளடையாளங்களை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்! என்றும் கன்னியான உம் திருமகனின் தாயும் திரு அவையின் அன்னையுமான மரியாவை அறிக்கையிடுவதில் மகிழ்வுறும் நாங்கள் நிலைவாழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல இவ்வருளடையாளங்கள் எம்மை வழிநடத்துவனவாக. எங்கள்.