அன்னை மரியாள் 23/09/2023



 இறைமக்கள் மன்றாட்டு

குரு: ஆண்டவரை நினைந்து தாய் அன்னையின் உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்தியதே, மீட்பராம் கடவுளை நினைத்து அவள் மனம் பேருவகை கொண்டதே. இந்த சிந்து யாத்திரை அன்னையின் பதியிலே கூடியிருக்கும் அவள் பக்தர்கள் எமக்கு, நமது ஆண்டவர் இயேசுவை நினைந்து போற்றவும், பெருமைப்படுத்தவும் அவள் அழைப்புவிடுக்கின்றாள். எமது விண்ணப்பங்கள், உள்ளத்தின் அபிலாஷைகள் அனைத்தையும் அன்னை வழி, இறை தந்தையிடம் ஒப்புக்கொடுப்போம். 

1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. அன்புள்ள ஆண்டவரே! இன்று அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிற்கும் எமது மறை மாநில ஆயர், அவர்களோடு இணைந்து பலி ஒப்புக்கொடுக்கும் குருக்கள் துறவிகளை உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்புள்ள ஆண்டவரே! உமது தாயின் பதியிலே கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு. என்றுமே கன்னியான மரியாவை இவ்வுலகின் வெளிச்சமாக எமது வாழ்வுக்கான மாதிரியாகவும் தந்த இறைவா! உம்மைப் போற்றுகின்றோம். ஒவ்வொரு ஆன்மாவையும் நேசித்து, நாம் ஒவ்வொருவரும் இறை மாட்சி காணும் ஆர்வத்தை உம் அன்னைக்கு அளித்ததற்காக உமக்கு நன்று கூறுகின்றோம்.  அவளின் பொருவிழாவைக் கொண்டாடும் நாம் அவளை ஏறெடுத்துப் பார்த்து பின்பற்றுகின்ற வரத்தை எங்களுக்கு தாரும். நாம் செல்லும் பாதை வரைய துணிவைத் தாரும், இவ்வாழ்க்கையை புடமிட அவள் பரிந்துரையை பெற்றுத் தாரும். உம்மிடம் ஒப்புக்கொடுத்த  எமது தேவைகளும் மன்றாட்டுக்களும் அர்த்தப் பெறுவனவாக. நாம் விரும்பி கேட்கும் அருளும் ஆசீரும் அவை பெற்றுத்தருவனவாக. இவற்றை எல்லாம் ஏங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மைப் பார்த்து கேட்கின்றோம், ஆமென். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Comments