Thursday, 12 December 2024

கிறிஸ்து பிறப்பு 24/12/2024 திருவிழிப்புத் திருப்பலி மற்றும் இரவில் திருப்பலி

கிறிஸ்து பிறப்பு 24/12/2024




கிறிஸ்துபிறப்பு வழிபாட்டிற்குச் செல்ல முன்: 

ஆண்டவருடைய பிறப்பு நாளில் ஒவ்வோர் அருள்பணியாளரும் மும்முறை தனித்தோ கூட்டுத்திருப்பலியாகவோ திருப்பலி நிறைவேற்றலாம். ஆனால் ஒவ்வொன்றும் அதற்குக் குறிக்கப்பட்ட காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். 

திருவிழிப்புத் திருப்பலி -  24ம் திகதி மாலை ஆறு மணிக்கு பின் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும். (Solemnities are counted among the most important days, whose celebration begins with First Vespers (Evening Prayer I) on the preceding day. Some Solemnities are also endowed with their own Vigil Mass, which is to be used on the evening of the preceding day, if an evening Mass is celebrated: Universal Norms on the Liturgical Year and the Calendar: 11)
எசாயா: 62: 1-5
பதிலுரைப் பாடல் திபா 89
திருத்தூதர் பணிகள் நூல்: 13: 16-17,21-25
மத்தேயு: 1: 1-25

இரவில் திருப்பலி - 24ம் திகதி மாலை நல்லிரவில் அதாவது 24ம் திகதி மாலை பன்னிரண்டு மணிக்கு முன் ஆரம்பமாகி ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும். 
எசாயா:  9: 2-4,6-7
பதிலுரைப் பாடல் திபா 96
தீத்து: 2: 11-14
லூக்கா: 2: 1-14

விடியற்காலைத் திருப்பலி - 25ம் திகதி அதிகாலையில் அல்லது காலையில்  ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும்.
எசாயா: 62: 11-12
பதிலுரைப் பாடல் திபா 97
தீத்து: 3: 4-7
லூக்கா: 2: 15-20

பகலில் திருப்பலி - மதியம் பன்னிரண்டு மணிக்கு முன்னோ அல்லது பின்னோ ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும். 
எசாயா:  52: 7-10
பதிலுரைப் பாடல் திபா 98
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம்: 1: 1-6
யோவான்: 1: 1-18


திருவிழிப்புத் திருப்பலி


திருப்பலி முன்னுரை
விழித்திருந்து காத்திருந்து, வீணான நேரமெல்லாம் களைந்துவிட்டு, வெண்பனி போல் உளத்தூய்மை பெற்று, வாழ்வுப் பாதையில் அருளையும், ஆசீரையும் அதிகமாக பெற, பிறக்கும் அந்த இயேசுவின் பொன்முகம் காண இன்று எத்திசையிலிருந்தும் கூடிவந்திருக்கின்றோம். இக் கிறிஸ்து பிறப்பின் மாலைத் திருப்பலிக்கு நாம் உங்களை அழைத்து நிற்கின்றோம். நாம் காத்திருந்த நேரம் கனிந்துவிட்டது. 
நாம் இன்று கொண்டாடும் கிறிஸ்துவின் பிறப்பு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருந்தாலும், அது மனித வரலாற்றில் ஒரு புனித பாதையை அமைத்துக் கொடுத்தது என்பது கண்கூடு. இவ்வுலகின் பாவம், இறை மகிமையை, அதன் முழுமையை எம்மில் இழக்கச்செய்தாலும், இவ் இறைமகனின் பிறப்பு அதை மீண்டும் புதுப்பித்து விட்டது. இது எமக்கு கிடைத்த பாக்கியமே. அவர் இறைவனாக இருந்தும், மனிதனானார், அவர் படைத்தவராக இருந்தும், தம்மை படைப்புக்குள்ளே கொணர்ந்தார், அவர் உயர்ந்தவராக இருந்தும், தம்மைத் தாழ்த்திக்கொண்டார், அவர் மறைபொருளாய் இருந்தும், தம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார். இதுவே அவர் காட்டும் சிறந்த அன்பு.  
நமது இயேசுவின் பிறப்பு இன்றும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டே! அவரது ஏழ்மை நிறை பிறப்பு எமக்கு ஒரு பாடமே! பணமும், செல்வமும், பட்டங்களும் மனிதனை உயர உயர கொண்டுசென்றாலும், அடிப்படையில் மனிதனின் இதயத்தில் இடம் தரும் மகிழ்ச்சியும், அமைதியும் இயேசுவின் பிறப்பில் இருந்தே ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய எமக்கு இயேசுவின் பிறப்பு ஒரு வரலாறு அல்ல, அது ஒரு வாழ்வு. 
எனவே, இறை முகம் காண, தன்னை இம் மனித இதயத்தில் பொறித்த இயேசுவின் வருகைக்காய் நன்றிசொல்வோம். எம்மைச் சுற்றியிருக்கும் அனைவரிலும் இப் பெருமகிழ்ச்சியை எடுத்துரைப்போம், ஒரு குழந்தையின் பிறப்பில் மகிழும் தாய் போல, கிறிஸ்துவின் பிறப்பில் நாமும் மகிழவேண்டும். எம்மையும் இம்மனுக்குலத்தில் உயர்த்தி, மானுட உறவில் மகிழ்ந்து, மனிதத்திற்கு புதிய வரைவிலக்கணம் தரும் இந்நிகழ்வு எம்மையும் தாங்கிச் செல்வதாக. 
இத்தனை வரங்களையும் நிறைவாகப் பெறவும், இவ்வுலகின் அமைதிக்காகவும், மனித நீதிக்காகவும் எமது செபங்களை உயர்த்தி தொடரும் இப்பலியில் கலந்துகொள்வோம்.  
வருகைப் பல்லவி
காண். விப 16:6-7 இன்று அறிந்து கொள்ளுங்கள்; ஏனெனில் ஆண்டவர் வருவார்; நம்மை மீட்பார். காலையில் நீங்கள் அவருடைய மாட்சியைக் காண்பீர்கள்.
உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :
இறைவா, ஆண்டுதோறும் எங்கள் மீட்பை எதிர்பார்த்திருக்கச் செய்வதனால் எங்களை மகிழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் ஒரே திருமகனை மீட்பராக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கின்ற நாங்கள், நடுவராக வரும் அவரை நம்பிக்கையுடன் சந்திக்கவும் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

"நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

முதல் இறைவாக்கு
ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப் படுவாய்.
ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். ‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர் பெறமாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘என் மகிழ்ச்சி’ என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு ‘மணம் முடித்தவள்’ என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

 பதிலுரைப் பாடல் திபா 89: 3-4. 15-16. 26,28 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

3 நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்;
என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;
உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்’. - பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்;
ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்;
உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி

26 ‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’
என்று அவன் என்னை அழைப்பான்.
28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்;
அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

இரண்டாம் இறைவாக்கு
தாவீதின் மகனான கிறிஸ்து பற்றிப் பவுலின் சான்று.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 16-17,21-25

தொழுகைக் கூடத்தில் பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டை விட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்;
பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். பின்பு கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்’ என்று சான்று பகர்ந்தார்.
தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், ‘மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்’ என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் ‘நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை’ என்று கூறினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நாளை அவனியின் அநீதி அழிவுறும்; உலகின் மீட்பர் நம்மீது அரசாள்வார். அல்லேலூயா.

 நற்செய்தி இறைவாக்கு
தாவீதின் மகனான இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-25

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

அல்லது குறுகிய வாசகம்

மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-25

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
‘இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்’
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

குரு: காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது, என்ற எசாயாவின் குரல் எம்மையும் நம்பிக்கையின் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. இயேசுவின் பிறப்பு எமக்கு ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை எழுதவேண்டும். புனித வாழ்வுக்கான ஏணிப்படியாக அமையவேண்டும். இவரே எமது மீட்பர், இவரே எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து மீட்க பிறந்துள்ளார் எனும் நம்பிக்கையில் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. மகிழ்வின் ஊற்றே இறைவா! உமது பிறப்பின் நற்செய்தியை உலகமெல்லாம் மகிழ்வின் செய்தியாக, மகிமையின் செய்தியாக, அன்பின் செய்தியாக அறிவிக்கும் அனைத்து பணியாளர்களையும் ஆசீர்வதியும். நீர் உலகிற்கு தரும் இவ் உன்னத கொடையை உலகின் கடையெல்லை வரை எடுத்துரைக்கும் இவர்கள் உமக்கு என்றும் சான்றுபகிர அருள்புரிய வேண்டுமென்று, ...

2. மகிழ்வின் ஊற்றே இறைவா! உமது பிறப்பால் மகிழும் இம்மக்களை ஆசீர்வதியும். ஒரு தாயின் தியாகத்தில், அவளின் உதரத்தில், உலகிற்காய் அவள்கொண்ட அன்பில் உதித்த இறைமகனை, நாம் ஒவ்வொருவரும் எமது இதயத்தில் தாங்கி, எமது செயல்களில் உருக்கொடுத்து, எமது அயலவரில் வாழ்ந்துகாட்ட அருள்புரிய வேண்டுமென்று, ...

3. மகிழ்வின் ஊற்றே இறைவா! உமது பிறப்பைக் காணமுடியாமல், அதன் அர்த்தத்தை உணரமுடியாமல், அதன் மகிழ்வில் நிறைவுகாண முடியாமல் தவிக்கும் எம்மில் பலருக்கு, உமது பிறப்பு ஓர் ஏதிர்நோக்கை கொணர்வதாக. நாம் கடந்துசென்ற பாதையை விலக்கிவிட்டு, புதியன தேடும் புதுமை மக்களாக, பாலகன் இயேசு தரும் நல் விழுமியங்களை பகிரும் கருவிகளாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று, ...

4. மகிழ்வின் ஊற்றே இறைவா! அரசியல் சூட்சுமங்களால் முடக்கப்பட்டு, பொருளாதார கெடுபிடிகளால் நசுக்கப்பட்டு, வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் தேடி அலைந்து திரியும் மக்களுக்காக மன்றாடுவோம். அனைத்தையுமே இழந்த மக்கள் இவர்களுக்கு உமது பிறப்பு தரும் மகிழ்வும், அமைதியும், நீதியும் நிரந்தரமாக இவர்களோடு தங்கவேண்டுமென்று, ...

5. மகிழ்வின் ஊற்றே இறைவா! எமது நாட்டில் நீர் எமக்கு அமைத்துத் தந்த இவ்வாழ்வு, அனைத்து சவால்களையும் கடந்து, ஓர் நிறைவை நோக்கி பயணிப்பதாக. புதிய அரசியல் மாற்றங்களாலும், இந்நாட்டின் வளர்ச்சிக்கான புதிய தீர்மானங்களாலும் எமக்கான நன்மைகளும் வளங்களும் எம்மை வந்து சேரவும், இதற்காக உழைக்கும் அனைத்து தலைவர்களும் அசீர்வதிக்கப்படவும் வேண்டுமென்று, ...

குரு. எம்மை அதிகம் அன்பு செய்யும் தந்தையே!  இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், எமது கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியலாக எம்மை தேடிவந்தீரே.  எமக்கும் எமது வாழ்வுக்கும் நிறைவைத் தர வந்தீரே. உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், உம் அன்பை விட்டு பிரியாமல் இருக்கவும், எமது இயலாமையிலும், பலவீனங்களிலும் எமக்கு தோல்கொடுத்து உதவியருளும். நாம் மனமுவந்து கேட்கும் இந்த விண்ணப்பங்கள் உமதண்டை வந்து சேர்வதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: எந்த அளவுக்கு இப்பெரும் கொண்டாட்டங்களைச் சிறப்பான ஊழியத்துடன் எதிர்கொள்கின்றோமோ அந்த அளவுக்கு எங்கள் மீட்பின் தொடக்கம் இவற்றில் அமைந்துள்ளது என்பதை நாங்கள் உணரச் செய்வீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III


திருவிருந்துப் பல்லவி :
காண். எசா 40:5 ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் நம் கடவுளின் மீட்பைக் காண்பர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, இவ்விண்ணக மறைநிகழ்வில் உண்டு, பருகிய நாங்கள் உம் ஒரே திருமகனின் வரவிருக்கும் பிறப்பினால் புத்துயிர் பெற எங்களுக்கு அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.



இரவில் திருப்பலி


வருகைப் பல்லவி
திபா 2:7 ஆண்டவர் என்னிடம் உரைத்தார்: "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்."

அல்லது

நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோம்; ஏனெனில் நம் மீட்பர் உலகில் பிறந்துள்ளார்; இன்று நமக்கு விண்ணகத்திலிருந்து உண்மையான அமைதி இறங்கி வந்தது.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :
இறைவா, உண்மை ஒளியின் சுடரால் இப்புனிதமிக்க இரவை ஒளிரச் செய்தீர்; அதனால் இம்மண்ணகத்தில் அவரது ஒளியின் மறைநிகழ்வுகளை அறிந்திருக்கும் நாங்கள் விண்ணகத்திலும் அவரது மகிழ்ச்சியை அனுபவிக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும் போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

முதல் இறைவாக்கு
ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 96: 1-2a. 2b-3. 11-12. 13 (பல்லவி: லூக் 2: 11)
பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2a ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.- பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்;
மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

 இரண்டாம் இறைவாக்கு
மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 2:10-11
அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா.

 நற்செய்தி இறைவாக்கு
இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
 
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இன்றைய திருநாளின் காணிக்கை உமக்கு உகந்ததாய் அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்புனிதமிக்க உறவுப் பரிமாற்றத்தின் வழியாக கிறிஸ்துவின் சாயலில் நாங்கள் காணப்படவும் எங்கள் இயல்பு அவரில் உம்மோடு இணையவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவருடைய பிறப்பு
தொடக்கவுரை : ஒளியாம் கிறிஸ்து.
இசையில்லாப் பாடங்கள்: ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை 1,

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
 
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல
இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும்,
நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது,
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்,
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில், வாக்கு மனிதர் ஆனார் என்னும்
மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் பேரொளி எங்கள்
மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது.

எனவே, அவரில் நாங்கள் கடவுளைக் கண்கூடாய்க் காண் கின்றோம்;
அவர் வழியாகவே கண் காணாதவைமீதுள்ள அன்பினால் நாங்கள் ஆட்கொள்ளப்படுகின்றோம்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்,
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி :
யோவா 1:14 வாக்கு மனிதர் ஆனார்; அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே எங்கள் இறைவா, எங்கள் மீட்பரின் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்; இவ்வாறு மேன்மையான உறவுகளால் நாங்கள் அவரது விண்ணகத் தோழமைக்கு வந்து சேரும் தகுதி பெற்றிட எங்களுக்கு அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...