திருவிழிப்புத் திருப்பலி
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5 - ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 16-17,21-25 - தாவீதின் மகனான கிறிஸ்து பற்றிப் பவுலின் சான்று.
நற்செய்தி இறைவாக்கு
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-25 : தாவீதின் மகனான இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.
இரவில் திருப்பலி
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7 : ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14 : மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
நற்செய்தி இறைவாக்கு
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14 : இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.
விடியற்காலைத் திருப்பலி
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 11-12 : இதோ, உன் மீட்பர் வருகின்றார்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-7 : கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.
நற்செய்தி இறைவாக்கு
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20 : இடையர் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.
பகலில் திருப்பலி
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10 : மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இரண்டாம் இறைவாக்கு
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6 : கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.
நற்செய்தி இறைவாக்கு
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18: வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.முன்னுரை (வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)
'ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்'
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறைமக்களே!
விண்ணிலே தோன்றியதோர் விடிவெள்ளி, அற்புத விடிவெள்ளி, மண்ணிலே இறைவனின் அருள் பெற மகிமையின் அடையாளமாய் தோன்றியதே இந்த விடிவெள்ளி, இதோ இன்று தோன்றுகின்றது. ஒரு புதிய சரித்திரம் படைக்க இவ்வுலகில் இறைவன் தோன்றிவிட்டார். படைத்தவர், தன்னை படைப்புக்குள்ளே கொண்டுவந்துவிட்டார், இறைவன் இன்று மனிதனாக பிறந்துவிட்டார். கபிரியேல் தூதர் சொன்ன இறைவனின் வார்த்தை இன்று நிறைவேறுகின்றது. அன்னையின் 'ஆகட்டும்' எனும் வார்த்தையால் மனிதர் அனைவருக்கும் வாழ்வு கிடைத்துவிட்டது, பாவம் உடைக்கப்பட்டுவிட்டது. விண்ணவர் தூதர் அணிகளோடு சேர்ந்து நாமும், 'உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை உண்டாகுக, பூவுலகில் நல் மனம் உடையோருக்கு அமைதியும் ஆகுக' என்று புகழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் பாடுகின்றோம். ஏனெனில் கிறிஸ்து இயேசு எனும் மெசியா தாவின் ஊரில் இன்று பிறந்துள்ளார். இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
இயேசுவின் பிறப்பில் இருந்து அவரது ஒவ்வொரு அசைவும் முன்குறிக்கப்பட்டவை, வரலாற்றில் எழுதப்பட்டவை. அவர் தடம் பதித்துச் சென்றவைகள் வரலாற்றையே விழித்தெழச் செய்தவை. இவரே எமக்கு வழிகாட்டும் விளக்கு, அர்த்தம் தரும் ஆன்ம மருந்து. இவர் பிறப்பில் இருந்து நாம் வாழ்வைக் கற்றுக்கொள்ளவேண்டும். எளிமை வாழ்வில் இறைவன் இருக்கிறார், ஏழைகளில் இறைவன் தெரிகின்றார், உண்மையே இயேசுவின் மறு பெயர். இன்று உலகம் எடுத்துச் சொல்லும் நற்செய்தியை எம் உள்ளங்களில் தருகின்றார். தொலைந்தவர்கள், துவண்டுபோனவர்கள், வறுமையில் இருப்பவர்கள், உறவை இழந்தவர்கள், நொந்துபோனவர்கள், நிலைமாறி போனவர்கள் இவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை தரும் விதையாகின்றார் எம் பாலன் இயேசு.
பாலன் இயேசுவுக்காய் வாழுவோம், பாவம் தொலைத்து அவர் பாதம் வழி செல்வோம். நற்செய்தியை அறிவிப்போம், நல்ல கிறிஸ்தவராக மாறுவோம். இதற்கான வரம் கேட்டு தொடரும் இப்புனிதபலியிலே கலந்துகொள்வோம்.
- 'தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்', ('... மனிதர் ஆனார்' எனச் சொல்லும் போது அனைவரும் முழங்காலிடவும்).
- எல்லாரும் எழுந்து நிற்க, மக்களோடு சேர்ந்து அருள்பணியாளர் நம்பிக்கை அறிக்கையைப் பாடுவார் அல்லது சொல்வார் (காண். எண் 68). 'தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்' எனும் வார்த்தைகளைப் பாடும்போது ஃ சொல்லும்போது அனைவரும் தாழ்ந்து பணிந்து வணங்குவர். ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு, ஆண்டவருடைய பிறப்பு ஆகிய பெருவிழாக்களில் அனைவரும் முழங்காலிடுவர். (உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை: 137)
விசுவாசிகள் மன்றாட்டு
குரு: காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது, என்ற எசாயாவின் குரல் எம்மையும் நம்பிக்கையின் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. இயேசுவின் பிறப்பு எமக்கு ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை எழுதவேண்டும். பரிசுத்த வாழ்வுக்கான ஏணிப்படியாக அமையவேண்டும். இவரே எமது மீட்பர், இவரே எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து மீட்க பிறந்துள்ளார் எனும் நம்பிக்கையில் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. ஆண்டவரே, உமது மகன் இயேசுக்கிறிஸ்துவை இவ்வுலகு அறிந்து அன்புசெய்ய சித்தம் கொண்டீரே, உமக்கு நன்றி சொல்கின்றோம். அத்திருமகனை உலகறிய நற்செய்தியாக எடுத்தியம்பும் திரு அவைப் பணியாளர்களை கரம்பிடித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஆண்டவரே! உமது திரு மகன் இயேசு வழியாக இவ்வுலகு உம்மை யார் என்று கண்டுகொள்ளச் செய்தீரே உமக்கு நன்றிசொல்கின்றோம். ஒன்றிக்கும் ஒரே திரு அவையாக நாம் பயணிக்கும் எமது வாழ்விலும் இயேசு பாலனின் பிறப்பு செய்தி நம்பிக்கையையும், மகிழ்வையும், பிறரோடு உள்ள கூட்டுறவையும் வளர்ப்பதாக. இவ்வுலகம் தரமுடியாத வாழ்வின் விழுமியங்கள், பண்புகள் இயேசுவின் பிறப்பின் கனிகளாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின் ஆண்டவரே! யுத்தத்தினால், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் இவ்வுலகின் மக்கள் அனைவருக்கும் இயேசு பாலனின் பிறப்புச் செய்தி, வெறுமையில் நிறைவைத் தருவதாக. உயர்ந்து போகும் கோபுரங்களை கட்டவல்ல, மாறாக மனித உள்ளத்தை உயர்த்திக் காட்டவும், உயரவே நிற்கும் போதைக் கலாசாரத்தை தாங்கவல்ல, மாறாக அன்பின் வெகுமதியை உணர்த்திக்கொள்ளவும், உண்மையை உடைக்கும் வன்முறைகளை அல்ல மாறாக பாசத்தை எண்பிக்கும் உறைவுகளை தளைத்திடச் செய்யவும் இயேசுவின் பிறப்பு வழிசெய்யவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இன்றைய கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவை அமையச் செய்த தந்தையே இறைவா! ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்கு அடையாளமாய் இருப்பது போல, இயேசுவின் பிறப்பு எமது குடும்பங்களுக்கு அடையாளமாய் இருப்பதாக. அக்குழந்தையின் மகிழ்விலே எம்மிலுள்ள பிரிவினைகள் களைந்து, பிறழ்வுகள் தகர்த்தெறிந்து, கோபமும் கவலையும் விட்டொழிந்து, கண்ணீரும் ஏக்கமும் துடைத்து, புதிய உறவுகள் அமைக்கவும், பாலகனின் ஆசி நிறைவாய் தங்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு. எம்மை அதிகம் அன்பு செய்யும் தந்தையே! இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், எமது கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியலாக எம்மை தேடிவந்தீரே. எமக்கும் எமது வாழ்வுக்கும் நிறைவைத் தர வந்தீரே. நம்மைத் தேடி வந்த விடியல் நீர் தான் இயேசுவே. எமது குறை நீக்க எம்மை தேடிவந்தீரே. உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், உம் அன்பை விட்டு பிரியாமல் இருக்கவும், எமது இயலாமையிலும், பலவீனங்களிலும் எமக்கு தோல்கொடுத்து உதவியருளும். நாம் மனமுவந்து கேட்கும் இந்த விண்ணப்பங்கள் உமதண்டை வந்து சேர்வதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment