இறைமக்கள் மன்றாட்டு
குரு: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என நம்பிய அன்னை மரியாவைப் போல, எமது வாழ்விலும் ஆழமான நம்பிக்கையும், எதிர்நோக்கும் கொண்டவர்களாக எமது விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம்.
1. அன்பின் இறைவா! 'உலகெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள், உலகு முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருப்பேன்' என்ற உமது வார்த்தைக்கு தம்மை அர்ப்பணித்த அனைத்து திரு நிலைப் பணியாளர்கள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவரும், விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்ட ஒளியாக இருப்பார்களாக. தப்பறையான எண்ணங்கள், போதனைகள், கொள்கைகள் அனைத்திலிருந்தும் எமது தாய் திரு அவையை பேணிப் பாதுகாத்திட உழைக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.
2. உயிரின் ஊற்றே இறைவா! பாதைகள் தெளிவற்று, வாழ்க்கையே அர்த்தம் இழந்து, ஆன்மீக வறுமையினாலும், உள நோயினாலும் இன்னலுறும் எமது இளைஞர், யுவதிகள், உமது தாய் எம் அன்னை மரியாவைப்போல் கற்புக்கு வரைவிலக்கணம் கொடுக்கும் கன்னிமையால் உலகம் போற்ற துணிந்து பெற்ற தூய தைரியத்தை கொடுத்து, இத் திரு அவையின் அழகுமிக்க தூண்களாக திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. வல்லமையின் இறைவா! எமது நாட்டிலே ஒரு பகுதி வறுமைக்குள்ளும் மறு பகுதி கடும் மழைக்குள்ளும் அகப்பட்டு, வாழ்வாதாரம் மற்றும் கல்வி இழந்து தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவருக்கும், இயற்கையின் வளங்களைப் பயன்படுத்தும் உக்தியைக் கற்றுக்கொள்ளவும், தாம் விரும்பித் தேடுகின்ற ஓர்; அரசியல் விடுதலை கிடைக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. இன்று பல்வேறு காரணங்களால் புலம்பெயர் நாடுகளிலே வாழுகின்ற எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். அன்பின் ஆண்டவரே! பல வேளைகளிலே, ஆலயம் இழந்து, உறவு இழந்து, உடமைகள் கூட இழந்து, கல்வி இழந்து, திருமண உறவு தடைப்பட்டு சிதறி வாழும் இவர்களை ஒன்று சேர்க்கவும், இவர்களின் பல்வேறு தேவைகளில் நீரே உறுதுணையாக இருந்து வழி நடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: என்றுமுள்ள இறைவா! சிலுவையிலே நீர் தொங்கியபோது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் இடை நிலையாளராக நீர் இருந்து அதை இதயத்திலே தாங்கும் வல்லமையை உம் தாய்க்கு கொடுத்தீரே. அந்த அன்புத் தாயை எமக்கும் தாயாகக் கொடுத்து எம்மை ஆசீர்வதிக்கின்றீர். இன்று அவளுடைய வியாகுலங்களை நினைந்து, செபத்திலும், தவத்திலும், எமது பாவங்களுக்காக பரிகாரம் செய்வதிலும் அவளோடு இணைகின்ற நாங்கள், எமது விண்ணப்பங்களை அவள் விழியாக ஒப்புக்கொடுக்கின்றோம். இவற்றை ஏற்று, உமது கனிவான இதயத்தில் இருந்து வழிந்தோடும் அருள்வளங்களை எமக்கு பொழிந்தாருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம், அமென்.
No comments:
Post a Comment