இறைமக்கள் மன்றாட்டு
குரு: 'இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள், இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை என்று தானது உடலையும் இரத்தத்தையும் ஆன்மீக உணவாக அளித்து தமது சிலுவைப் பலியின் வழியாக அவரே பலியாகவும், பலிப்பொருளாகவும், பலிப்பீடமாகவும் திகழ்ந்த இறைவனிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. நற்கருணை ஆண்டவரே! உமது உடலையும் இரத்தத்தையும் அருட்சாதன முறையில் கொண்டாடும் எம் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். இம்மறை நிகழ்வை எமக்கு நிறைவேற்றித்தருகின்ற மறை பணியாளர்கள் உமது திரு அவையின் தேவை அறிந்தவர்களாய் இதற்காய் தினமும் உழைக்கும் வாஞ்சைகொண்டு வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. நற்கருணை ஆண்டவரே! உமது தாய், அன்னை மரியாள் உம்மை கருத்தாங்கி பெற்றதனால், அவளே நற்கருணைப் பேழையாகி எம் அனைவரையும் சுமக்க அழைப்புப் பெறுகின்றாள். அவள் சந்நிதானம் கூடிவந்திருக்கும் எமக்கு, அவளின் உறவும், உடனிருப்பும், தூய ஆவியின் வழிநடத்தலும், பாதுகாப்பும் பரிந்துரையும் என்றும் இருக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. நற்கருணை ஆண்டவரே! போரும், சினாமி அனர்த்தமும், கொரோணா தொற்று நோயும் தீர்ந்து போன போதும், இன்று நாம் வாழும் இவ்வுலகு போலியான, பொய்யான அநாகரீக கலாசாரத்திற்குள்ளே சிக்குண்டு சிதறிப்போகின்றதே. பிளவுபட்ட குடும்பங்களாக, உடைந்துபோன உறவுகளாக, கைவிடப்பட்ட பிள்ளைகளாக, அடிமைப்பட்ட இளைஞர் யுவதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எம்மைக் கண்நோக்கி பாரும். எமது வாழ்விலே நாம் செல்லும் பாதையை அசீர்வதியும், எமது தீர்மானங்கள் ஞானமும் அறிவும் உடையதாக அமைவதாக, எமது அனுபவங்கள் அனைத்துமே இறைவனை தாங்கிச் செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. நற்கருணை ஆண்டவரே! இன்று எமது குடும்பங்களிலே கண் விழித்து குடும்ப வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் அன்பு பெற்றோரை உமது பாதத்திலே ஒப்புக்கொடுக்கின்றோம். காலையும் மாலையும் இரவுமென உழைத்து குடும்பத்தை கரை சேர்க்க பாடுபடும் இவர்கள் வாழ்விலே மன தைரியத்தையும், வாழ்வுக்கான மன திருப்தியையும், குடும்ப சந்தோசத்தையும் கொடுத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment