இறைமக்கள் மன்றாட்டு
குரு: 'ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்' எனும் எலிசபெத்தின் அருள் மொழி இன்று எமக்கு தைரியத்தையும் இறைவனில் முழு நம்ம்பிக்கையை வளர்க்க உரைக்கல்லாகவும் அமைகின்றது. அவரில் விசுவாசம் கொண்டவர்களாக எமது உள்ளத்தின் தேவைகளை ஆண்டவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
1. எமது திரு அவையின் தலைமை ஆயர் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களுக்காக மன்றாடுவோம்.
வல்லமையை வாரிவழங்கும் இறைவா! தூய ஆவியின் துணைகொண்டு எமது தலைமை ஆயர் பரிசுத்த பாப்பரசர் செல்லும் பாதையை இறைவன் ஆசீர்வதிக்கவும், திரு அவையின் வளர்ச்சிக்காக அவர் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகள், மேற்கொள்ளும் சந்திப்புக்கள், வளமாகும் நாட்டு தலைவர்களுக்கிடையிலான உரிமையுடன் கூடிய உறவுகள், இறை அனுபவத்தையும், அவரில் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் அவரது எழுத்தாக்கங்கள் அனைத்துமே உமது சித்தப்படி அமைவதாக. பல நூறு தடைகளை தாண்டி தெளிவோடும் துணிவோடும் இறை நம்பிக்கையோடும் செல்லவேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமது குருக்கள் துறவறத்தார் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
வல்லமையை வாரிவழங்கும் இறைவா! சமகால சவால்களுக்கு நேரடியாக முகங்கொடுத்து, பல்வேறு தீமைகளை எதிர்த்து போராடக்கூடிய வல்லமையை இவர்களுக்கு அளித்தருளும். எவ்வித தடைகளிலும் தளரா மனங்கொண்டு வாழும் தைரியத்தை அளித்தருளும். தனிமையும், வெறுமையும், இழப்புக்களும், நோய்களும், தீர்ந்திடா பிரட்சனைகளும், இவ்வுலகின் அலட்சிய போக்குகளும், அடங்காத அடாவடித்தனங்களும், நேர்முகங் காணும் அடிமை வாழ்க்கைகளும் அவர்களது குருத்துவ வாழ்வுக்கு இழுக்கையும், விரக்தியையும் தராதிருப்பதாக. தமது ஆழமான செப வாழ்வும், அன்னையின் மேல் கொண்ட அதீத நம்பிக்கையையும், திருப்பலியின் மேல் கொண்ட அன்பும் இவர்கள் வாழ்வை நிலை நிறுத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமது பிள்ளைகளுக்காக மன்றாடுவோம்.
வல்லமையை வாரிவழங்கும் இறைவா! இவ்வுலகிலே ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது, இவ்வுலகை இன்னும் நீர் அன்புசெய்கின்றீர் என்பதை நாங்கள் உணர்ந்துகொள்கின்றோம். அதற்காக நன்றி கூறுகின்றோம். இவ் அரும் பொரும் கொடையினால் இவ்வுலகிற்கு தேவையான அனைத்தையும் நீர் நிறைவேற்றுவீர் எனும் நம்பிக்கையில், இவர்களை உமது பாதம் ஒப்புக்கொடுக்கின்றோம். இவர்கள் எல்லோரையும் அன்புசெய்ய கற்றுக்கொள்ளவும், உண்மை, நீதி நிறைந்த சிறந்த வாழ்வு வாழ கற்றுக்கொள்ளவும், பிறருக்கு கொடுத்து தியாகம் புரியும் உயரிய பண்பைக் கற்றுக்கொள்ளவும், செபிப்பதால் இறைவனின் துணை என்றும் எப்பொழுதும் உண்டு என்பதை நம்பிவாழவும் இவர்கள் தலை திறந்த எதிர்கால திரு அவயின் தூண்களாக மிளிரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. குழந்தை செல்வங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோருக்காக மன்றாடுவோம்.
வல்லமையை வாரிவழங்கும் இறைவா! உமது தாய் உம்மை கருவிலே சுமந்தபோது அவள் கொண்ட மட்டற்ற மகிழ்ச்சி இவ்வுலகின் மகிழ்ச்சியாக மாறியதே. இன்று இவ்வரத்திற்காய் ஏங்கித் தவிக்கும் எமது பெற்றோர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட இவ் அழைத்தலை ஏற்றுக்கொள்வார்களாக. எந்நிலையிலும், எச்சந்தர்ப்பத்திலும் இறைவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: என்றும் வாழும் எல்லம் வல்ல இறைவா! நாம் ஒப்புக்கொடுத்த எமது தேவைகள் உமது மீட்புத் திட்டத்தை அணிசேர்ப்பதாக. நாம் விரும்பிக்கேட்ட இவ்விண்னப்பங்கள் வழியாக நாமும் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழவும் அதன் வழியாக அவர் எமக்கு அருளுகின்ற வரங்கள் எம் வாழ்வுக்கு முழுப்பயன் தருவனவாக. உமது தாய் உம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், நிலையிலும், ஒவ்வொரு அதிசயத்திலும் அற்புதத்திலும் உடன் பயனித்தாள். இதே உடன் பணிக்கும் தாயாக எமது விண்ணப்பங்களில் அவள் பரிந்து பேசுவாளாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment