திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறைமக்களே!
அன்னையாம் திரு அவை இன்றைய நாள் திருவழிபாட்டினூடாக இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்ப விழாவைக் கொண்டாட அழைக்கின்றாள். எமது குடும்பங்களுக்கெல்லாம் வரைவிலக்கணமாய் இருப்பது திருக்குடும்பமே. அன்பினில் இணைந்திருப்பதும், ஒன்றிப்பில் நிலைத்திருப்பதும், உள்ளத்தின் உணர்வுகளில் உறவாடுவதும், புதிய தலைமுறைக்கு சான்றாக இருப்பதுமே குடும்பத்தின் உயரிய பண்புகளும் விழுமியங்களுமாகும். தனது கருவினில் சுமக்கும் முன்பே, இயேசுவை அன்புசெய்யத் தொடங்கியவள் அன்னை மரியாள். இயேசுவின் மீது கொண்ட அன்பு, இவ்வுலகின் மீது கொண்ட அன்புக்கு சான்றாக அமைந்தது. ஆகவே திருக்குடும்பம் இறைவனின் வல்லமையாலும், ஆசீர்வாதத்தாலும் அமையப்பெற்றது. இதனால் தான் தாயும் தந்தையுமான மரியாளும் சூசையும், தங்களுக்காக வாழாது, இயேசுக் கிறிஸ்துவாகிய தங்கள் மகனுக்காகவும் அவரை இவ்வுலகில் கொணர்ந்த இறைதந்தையின் திருவுளத்திற்காகவுமே வாழ்ந்தவர்கள். இதுவே எமது குடும்பங்களின் அடித்தளமாக இருக்கவேண்டும்.
இன்று எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம். பல்வேறு காரணங்களால், காயப்பட்டுபோன, அருள் இழந்துபோன, அன்பை தொலைந்துபோன, உறவுகளை பிரிந்துபோன குடும்பங்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இவைகள் இன்று மாறவேண்டும். ஒரு சமூகம் உருவாக, ஒரு புனிதன் உருவாக, ஒரு குடும்பத்தில் திருக்குடும்பத்தின் சாயல் இருக்கவேண்டும், அன்னை மரியாளினதும் புனித சூசையினதும் பரிந்துரை இருக்கவேண்டும், இயேசுவின் அன்பும், அவர் மறைபொருளைக் கொண்டாடும் வாஞ்சையும் இருக்கவேண்டும். இதற்கான இறைவரம் கேட்டு இவ்வழகான பலியிலே மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
லூக் 2:16 இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
- 'உன்னதங்களிலே' சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு :
இறைவா, எங்களுக்குத் திருக்குடும்பத்தின் சிறந்த எடுத்துக்காட்டை அளிக்கத் திருவுள மான உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: குடும்பப் பண்புகளிலும் அன்பின் பிணைப்புகளிலும் நாங்கள் அதைப் பின்பற்றி, உமது இல்லத்தின் நிலையான பரிசை மகிழ்வுடன் பெறச் செய்வீராக. உம்மோடு. இவ்விழாவை ஞாயிறு அன்று கொண்டாடினால் 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.
முதலாம் இறைவாக்கு: தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3
ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: 'ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.'
அப்பொழுது ஆபிராம், 'என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்' என்றார். அதற்கு மறுமொழியாக, 'இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்' என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 105: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 8ய)
பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்!
அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்!
அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி
3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி
5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்!
அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே!
அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! - பல்லவி
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு : எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8,11-12,17-19
ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்.
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.
ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். 'ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு: லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், 'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். 'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை' என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, 'இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்' என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன் எனும் ஆபிரகாமுக்கு இறைவன் கொடுத்த உறுதியான வாக்கு எமது குடும்பங்களுக்கு ஒளிவிளக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டவர்களாக, எமது தேவைகள் விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்புள்ள ஆண்டவரே! இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிறையாசீர்வேண்டி நின்று, எமது குடும்பங்களுக்காக உழைக்கும் எமது மறை மாநில ஆயர், பங்குதந்தை, மேலும் குருக்கள் துறவிகள் அனைவரையும் உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்புள்ள ஆண்டவரே! இங்கு கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் திருக்குடும்பமாக, எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: எம்மை எல்லாம் வாழ்வித்து வழிநடத்தும் அன்பின் ஆண்டவரே! நீர் எமக்கு அமைத்துத் தந்த அழகிய குடும்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இக்குடும்பத்தில் இணைதிருக்கும் எமது தாய், தந்தை, பிள்ளைகள் உறவுகள் மற்ரும் சொந்தங்கள் அனைவரையும் இன்றைய பலியிலே ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். எம்மை ஆசீர்வதித்து, அரவணைத்து, வழிநடத்திக் காத்தருளும். ஒரே குடும்ப உணர்வோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, நிறைவாழ்வுக்கான ஆசீரைப் பெற்றுத்தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுக்கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் கடவுளின் கன்னித் தாய், புனித யோசேப்பு ஆகியோருடைய பரிந்துரையின் உதவியால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி :
பாரூ 3:38 நம் கடவுள் மண்ணுலகில் தோன்றினார்; மனிதர் நடுவே குடிகொள் ''
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும் அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அதன் நிலையான தோழமையைப் பெறுவார்களாக. எங்கள்.
No comments:
Post a Comment