அன்னை மரியாள் 20/09/2023

  


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்ற அன்னையின் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள்  எங்களுக்கு தைரியம் அளிக்கின்றது. எமது தேவைகள் பலவாயினும், இறை தந்தையிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! உமது பணிக்காக தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து பணியாளர்களும் உமது வல்லமையால் நிரப்பப்பெற்று என்றும் தகுந்த பணி புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. இறை அழைத்தலை பெற்று தம்மை ஆயத்தம் செய்யும் அனைத்து இளைஞர்கள் யுவதிகளுக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! திரு அவையின் பணியை முழுமையாக அறிந்தவர்களாய், அதன் ஆழம், அகலம் தெரிந்தவர்களாய் தமது முழுமையான தெரிவால் தம்மை இறை பணிக்காக அர்ப்பணிக்கும் வாஞ்சை கொண்டவர்களாக திகழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. மாற்றுவலுவுடையோருக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! இவ்வுலகம் நீர் கொடுத்த கொடை, அதன் வளங்கள் அனைத்தும் உமது அருள்வளங்கள். இதனால் இவர்கள் தமது உடலில் ஏற்பட்ட அனைத்து குறைகளால், இவ்வுலகை அனுபவித்து அதன் முழுப்பயன் பெற்றிடவும் முடியாத நிலையில் வருந்தும் இவர்களை வழிநடத்தும். இவர்களின் வாழ்வும் இருப்பும், இவர்களோடு உடன் பயணிக்கும் எமக்கு வாழ்வியல் கேள்விகளுக்கு விடைதருவதாக. என்றுமே இவர்களை கைவிட்டுவிடாது இவர்களின் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எமது பாடசாலை ஆசான்களுக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! கல்வி ஒன்றே வாழ்வின் விடியலின் சிகரம் என்பதை உணர்ந்து தம்மை கற்பித்தல் பணிக்காக அர்ப்பணிக்கும் அனைத்து ஆசிரியர்களை ஆசீர்வதித்தருளும். கல்வி கூடங்களில் சந்திக்கும் பல்வேறு பணிச் சவால்கள் மத்தியில் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்புக்களையும் செவ்வனே நிறைவேற்றவும், கற்பிக்கும் அன்பான பிள்ளைகளுக்கு தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து அவர்களை உருவாக்கவேண்டிய ஆற்றலை அளித்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: என்றும் வாழும் எல்லம் வல்ல இறைவா! நாம் ஒப்புக்கொடுத்த எமது தேவைகள் உமது மீட்புத் திட்டத்தை அணிசேர்ப்பதாக. நாம் விரும்பிக்கேட்ட இவ்விண்னப்பங்கள் வழியாக நாமும் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழவும் அதன் வழியாக அவர் எமக்கு அருளுகின்ற வரங்கள் எம் வாழ்வுக்கு முழுப்பயன் தருவனவாக. உமது தாய் உம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், நிலையிலும், ஒவ்வொரு அதிசயத்திலும் அற்புதத்திலும் உடன் பயனித்தாள். இதே உடன் பணிக்கும் தாயாக எமது விண்ணப்பங்களில் அவள் பரிந்து பேசுவாளாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Comments