இறைமக்கள் மன்றாட்டு
குரு: மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் என்று கூறிய இயேசுவிடம் எமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்போம்
1. வல்லமையின் இறைவா! எமது திரு அவைப் பணியாளர்களை உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். திரு அவையை தமது ஒழுக்கத்தாலும் இறை நம்பிக்கையாலும் அணிசேர்க்கவும், அதை கறையின்றி காக்க, நற்செய்தியின் படி தாம் செய்துகொண்ட வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாய் செயல்படவும், அருட்கொடைகள் நிறைவேற்றுவதில் தீராத ஆர்வம் கொண்டு செயலாற்றவும், தமது செப வாழ்வால் திரு அவையைத் தாங்கும் வாஞ்சை கிடைக்கவும், ஆன்மாக்களை விண்ணகம் கொண்டு சேர்க்கும் விருப்பம் கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வல்லமையின் இறைவா! வெவ்வேறு நாடுகளிலே பணியாற்றும் எமது நாட்டின் சுதேச குருக்கள் துறவிகள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். தமது மொழி, கலை, கலாசாரம் கடந்து பணியாற்றும் இவர்களை ஆசீர்வதிக்க உம்மை வேண்டுகின்றோம். உலகின் கடை எல்லை வரை பணியாற்றும் இவர்கள் தமது தியாகத்தாலும் அர்ப்பணத்தாலும் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிக்கு புதிய அர்த்தம் கொடுத்து வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமது நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். வல்லமையின் இறைவா! மக்களின் நலனே இவர்கள் எண்ணமாகட்டும், சிந்தனையாகட்டும் இவர்கள் செயல்களாகட்டும். அரசியல் சார் தீர்மானங்கள் வழியாக இவர்கள் ஆற்றும் சேவை பொது நலனாக இருப்பதாக. இவர்களை உமது வல்லமையால் நிறைத்து எமது மக்களின் கண்ணீரில் கரங்களாகவும், வறுமையில், தாங்கும் இதயமாகவும், போராட்ங்களில் துணை நிற்கும் விரர்களாகவும் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எமது நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள் உபகாரிகள் அனைவருக்காகவும் மன்றாடுவோம். வல்லமையின் இறைவா! இவர்களின் தாராள மனதை ஆசீர்வதியும். தங்களிடம் இருப்பதை பிறரின் தேவையில் கொடுத்து உதவும் இவர்களின் உள்ளத்தை ஆசீர்வதியும். இவர்களை போல இன்னும் பல நல் உள்ளங்கள் உருவாகவும், கொடுப்பதால் மாத்திரமே வாழ்வடைய முடியும் எனும் உண்மையை உணர்ந்தவர்களாக எம் அனைவரையும் மாற்றியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நாம் அனைவரும் ஒரே குடும்ப உணர்வோடு, ஒன்றித்து பயணிக்கும் கூட்டொருங்கியக்க திரு அவையாக எமை அமைக்கின்றோம், இதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஒன்றிப்பில் உருவாகும் இத் திரு அவை சமூகம் உமக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் செவிசாய்த்தருளும். 'அவர் சொல்வதை செய்யுங்கள்' என்ற அன்னையின் வேண்டுதலுக்கு இணங்கி வரம்பெற்றுக் கொடுத்த நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து, எமக்கு எம் தேவைகளில் துணை நிற்கவேண்டுமென்று, கிறிஸ்து வழியாக உமைப் பார்த்து வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment