இறைமக்கள் மன்றாட்டு
குரு: இறை மகனாகிய கிறிஸ்து தன்னை முதன் முதல் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியது ஞானிகளின் வருகையின் போதே. அவருக்கு உலகம் கொடுத்த காணிக்கை பொருளானது, கடவுள் உலகிற்கு கொடுத்த காணிக்கை அவர் அருளானது. இதே அருள் வளங்கள் கேட்டு நாம் எமது காணிக்கைகளை, விண்ணப்பங்களை சமர்ப்பிப்போம்.
1. கருணையின் இறைவா! உமது தெய்வீகப் பலியை நிறைவேற்றுவதால் என்றும் எப்பொழுதும் நீர் உமது திரு அவையையும் இவ்வுலகையும் பாவக் கறையிலிருந்து புதுப்பித்து புனிதப்படுத்துகின்றீர். உமது தெய்வீகக் கொடையாகிய திருப்பலியிலே எமது விசுவாசத்தைத் பதித்து நாமும் அதன் முழுப்பலனை அடையவேண்டிய வரத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. கருணையின் இறைவா! படித்தவரும் பாமரரும் உமது மகன் இயேசு வழியாக உம்மை அறியச் செய்தீரே. படைப்புக்களை பரிசாகக் கொடுத்து அதில் அவரைக் கண்டு அன்புசெய்யச் செய்தீரே. இன்றும் உமது திரு உடல் திரு இரத்தம் வழியாகக் உம்மை நாளும் பொழுதும் அனுபவிக்க ஆற்றல் தந்தீரே. இதை முழுமையாக அறிந்துகொண்டு என்றுமே உம்மைக் கண்டு பாவிக்கும் வல்லமையை தந்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. கருணையின் இறைவா! இன்று நாம் வாழும் உலகு உண்மை மறந்து, பொய்மை மலிந்து, புனிதம் இழந்து, சுயநல உணர்வுகளும், ஏரிச்சல் கொண்ட உள்ளங்களும், போலியான உறவுகளும் புதிதாய் உருவாகும் கலாசாரங்களும் இன்றைய கிறிஸ்தவ விசுவாசத்திற்கு தடையாகவே இருக்கின்றன. இவற்றை எதிர்த்துப் போராடவும், இறைவார்த்தை தரும் விழுமியங்களின் அடிப்படையில் எமது வாழ்வை அமைத்திட ஆற்றல் தந்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. கருணையின் இறைவா! எமது இலங்கைத் திரு நாடு எமக்கு நீர் தந்த அழகிய அடையாளம் - வளம் கொண்ட நாடாகவும், கலை கலாசார பண்புகள் கொண்டதாகவும், சமய ஒற்றுமை மற்றும் உறவு கொண்ட நாடாகவும் இருக்க வேண்டுகின்றோம். எமது மக்கள் அனைவரும் பிறர் சினேகம் கொண்டு வாழவும், அன்பையும் மதிப்பையும் அணிகலனாகக் கொண்டு வாழவும், பிறர் தேவைகளில் உடன்செயற்படவும், வன்முறைகள் இன்றி, வடுக்கள் அகற்றி, வேறுபாடுகள் தவிர்த்து வாழ உமது அருளையும் வல்லமையையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: என்றும் எம்மோடு இருந்து எமக்கு அருள்பொழியும் இறைவா நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தியதால் உலகம் இழந்த அருளை மீண்டும் பெற்றுக்கொள்ளச் செய்தீரே. எமது வாழ்வுக்கு தேவையான ஆற்றலையும் அருளையும் மீட்புக்கான நுழைவாயிலையும் உமது இரத்தப் பலியால் எமக்கு பெற்றுத்தந்தீரே. இன்று நாம் எமது பலவீனத்தினால், பாவத்தினால் இழந்து தவிக்கும் உமது ஆற்றலை மீண்டும் அனுபவிக்க நாம் கேட்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாயும். நீர் சித்தமானால் அவை என்றும் எம்மோடும் எமது குடும்பங்களோடும் தங்குவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் ஆவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment