Tuesday, 11 June 2024

செப ஆண்டின் முக்கியத்துவத்தை உணர்வோம்

 


செப ஆண்டின் முக்கியத்துவத்தை உணர்வோம் 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! அல்லை-வெண்புரவி நகர் மீதிலே கோவில் கொண்டெழுதருளி வீற்றிருக்கும் எமது பங்கின் பகாவலரும் பதுவை நகர் புனிதருமான புனித அந்தோனியாரின் விழாவைக் கொண்டாட எம்மை ஆயத்தம்செய்யும் முதலாம் நாளில் ஒன்றுகூடியுள்ளோம். இன்று 'செப ஆண்டின் முக்கியத்துவத்தை உணர்வோம்' எனும் கருப்பொருள் இறைவார்த்தையின் வழியில் எம்மை சிந்திக்க அழைக்கின்றது. 

இன்றைய இறைவார்த்தை; 

முதலாம் இறைவார்த்தையாக தோபித்து நூல் எமக்கு கொடுக்கப்படுகின்றது. இந்நூல் அழகிய யூத குடும்பப் பிண்ணனியை எமக்கு சித்தரிக்கின்றது. சாரா தனக்குமேல் சூட்டப்பட்ட இகழ்ச்சியை நீக்கும்படி வேண்டிக்கேட்டுக்கொண்ட செபம் கொடுக்கப்படுகின்றது. புனித லூக்கா எழுதிய நற்செய்தியில் இயேசுவை அலகை சோதித்தது பற்றி குறிப்பிடப்படுகின்றது. 

ஜுபிலி ஆண்டு:

"எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது" எனும் உரோமையருக்கு புனித பவுல் எழுதிய மடலிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வார்த்தைகளைக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் ஓர் அழகிய மடலை எழுதி, 2025ம் ஆண்டை ஜுபிலி ஆண்டாக கொண்டாட அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றார். மாற்றங்களை கொணரும் இவ் ஜுபிலி ஆண்டை முழுமனதுடன் வரவேற்போம்.  இவ்வுலகை அதிகம் அன்புசெய்யவும், எமது பாவங்கள் ஏற்படுத்தியிருக்கும் தழும்புகள் அழிய, இரக்கதின் ஆண்டவர் துணை நிற்கவும் வேண்டி நிற்கின்றார். இவ்வுலகிலே ஏழைகளாய் இருக்கும் அகதிகள், புலம்பெயர்ந்தோர், முதியவர்கள், திருமண உறவை இழந்தவர்கள், நவின உலகிற்கு அடிமையாக்கப்பட்டுள்ளவர்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், யுத்தங்கள் நிறுத்தப்பட்டு, சுயநல அரசியல் அகற்றப்பட்டு, இயற்கை அன்புசெய்யப்பட்டு அமைதி தரும்  புதிய உலகம் உருவாகவேண்டி, செபிப்பதால் மாத்திரமே அதை நிறுபிக்க முடியும் என எங்களை இன்று அழைத்து நிற்கின்றார். 

எனவே, 

நாம் ஆரம்பிக்கும் இப்புதிய பயணம் செபத்தில் எம்மை அழைத்துச் செல்வதாக. இயேசு செபித்ததால் தீமைகளை கண்டுகொண்டு, அதை முறியடித்தார். செபிப்பதால் மாத்திரம் தீமைகளை கண்டுகொண்டு விலகிச் செல்லாலாம். இதயே இன்றைய நாள் சிந்தனைகள் எம்மை அழைத்துச் செல்கின்றன. செபிக்கும் குடும்பங்கள் உருவாகட்டும், செபத்தில் நிலைக்கும் உள்ளங்கள் பெருகட்டும், செபத்தால் தீமைகளை வெல்லமுடியும் எனும் தரியம் உருவாகட்டும். செபிக்கும் உள்ளங்கள் தான் விதைக்கும் நம்பிக்கையாக அமைய இன்றைய திருப்பலியில் வேண்டுவோம். 

முதலாம் இறைவாக்கு: தோபித்து 3:11-16

திருப்பாடல் 28

நற்செய்தி இறைவாக்கு: லூக்: 4:1-13

இறைமக்கள் மன்றாட்டு:

குரு: “ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை" எனும் தோபித்தின் மன்றாட்டு இறைவனை இடைவிடாது போற்றவும், தூய உள்ளத்தோடு அவரிடம் திரும்பிச் செல்லவும் எமை அழைத்து நிற்கின்றன. செபத்தினால் ஒரு புதிய வாழ்வை தொடங்கலாம் எனும் புதிய நற்செய்தி படிப்பினைக்கமைய எமது விண்ணப்பங்களை இறைவனிடம் ஒப்புக்கொடுப்போம். 

1. எமது திரு அவைப் பணியாளர்கள் தமது வாழ்வை அர்ப்பணத்தோடும், தியாகத்தோடும் இறை அரசை இவ்வுலகம் எல்லாம் பரப்ப வேண்டுமென்றும், எச்சூழ்நிலையிலும், எச்சந்தர்ப்பத்திலும், தமது செப வாழ்வை கைவிட்டுவிடாமல் இறைவனோடு ஒன்றித்திருக்கும் வல்லமையை அளித்திட வேண்டுமென்று,... 

2. நாம் எதிர்நோக்கி காத்திருக்கும் ஜுபிலி ஆண்டிலே, இவ்வுலகம் இறை நம்பிக்கையில் அதிகமாக வளரவும், இயேசுவ பின்பற்றும் உள்ளங்கள் பெருகவும், மனிதனின் உள்ளங்களை, உணர்வுகளை மதித்து அன்புசெய்யும் இதயங்கள் வளரவும், இவ்வுலகம் தேடும் அமைதி நிரந்தரமாக கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

3. எமது முதலாவது நவநாள் வழிபாட்டிலே, எமது இதயங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். குற்றங்களை களைந்தருளும், பாவங்களை போக்கியருளும், தீமைகளை நீக்கியருளும், இதனால் நாம் என்றும் தூய உள்ளத்தோடு உம்மைத் தேடும் அருளை எமக்கு தந்தருள வேண்டுமென்று,...

4. . எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: பல்வேறு அக, புறக் காரணங்களால் பிரிந்துபோன குடும்பங்கள், உடைந்துபோன குடும்பங்கள் அன்பை தொலைத்து நிற்கும் குடும்பங்கள், புரிந்துணர்வற்று தீமைகளை விதைகளாக விதைக்கும் குடும்பங்கள் அனைத்தும் செபத்தினால் தம் குடும்பங்கள் ஒன்றித்து நிலைத்திருக்க முடியும் என உறுதியாக நம்பவும், இந்நம்பிக்கை எப்போதும் வீண்போகாமல் இருக்க இறைவன் துணைபுரிய வேண்டுமென்று, ...

5. . இன்று இத்திருப்பலியை சிறப்பிக்கும் மீனவர் சங்கத்தினருக்காக மன்றாடுவோம். தமது குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலை நம்பி இரவுபகலாக உழைக்கும் இக்குடும்ப தலைவர்கள் ஆசீர்வதிக்கப்படவும், நீதியோடும் நேர்மையோடும் தமது வாழ்வின் தெரிவுகளை மேற்கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று,..

குரு: அன்பின் ஆண்டவரே, இக்கிராமத்தின் பாதுகாவலராகிய புனித அந்தோனியாரை எமக்கு தந்ததற்காய் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவரின் பரிந்துரை வழியாக நாம் உம்மிடம் இரஞ்சு கேட்கும் வரங்களை எமக்கு அருள்வீராக. வல்லமையின் ஆண்டவரே! இன்று நாம் ஆரம்பிக்கும் எமது ஆன்மிக பயணம் எமக்கு நிறைவைத் தருவதாக, எம் வாழ்வுக்கு அருளையும் ஆசீரையும் அளிப்பதாக. எமது உள்ளார்ந்த செப வாழ்வின் ஊடாக உம்மை என்றும் அனுபவித்திட அருள்புரிவீராக. எங்கள். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...