திருப்பலி முன்னுரை
புதிய பயணம் ஒன்றில் நாம் புதிய தூதுவர்களாய் இன்று புதிய உலகம் படைக்க கூடிவந்துள்ளோம். கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு உறவுகளே! நவநாட்களின் மூன்றாவது நாளாகிய இன்று 'கர்த்தர் கற்பித்த செபத்தின் ஆழம் காண்போம்' எனும் இறைவார்த்தையின் சிந்தனைப் பகுதி எமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மிக அழகிய இச்செபத்தின் ஆழம் காண எம்மை தயார்படுத்திக் கொள்வோம், தூய ஆவியின் துணைவேண்டுவோம். இன்றைய நாளை சிறப்பிக்கும் ஆறாம் வலய அன்பிய இறைமக்களை இப்பலியில் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். அத்தோடு அமதிகள் பொதுநிலையினருக்காகவும் அவர்களின் பணிவாழ்வுக்காகவும் மன்றாடுவோம்.
இறைவார்த்தை:
சாமுவேல் இரண்டாம் நூல், அரசர் தாவீதின் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. கடவுள் மீது தாவீதின் ஆழமான பற்று, மக்கள் தாவீது மீது கொண்ட நம்பிக்கை என்பன இந்நூலின் வலிமையை விபரிக்கின்றது. தாவீது தவறிழைக்கும் போதெல்லாம், இறைவன், நாத்தான் இறைவாக்கினர் வழியாக தனது உன்னத அன்பையும் பிரமாணிக்கத்தையும் எடுத்தியம்புவதையும் காணலாம். தாவீது கடவுளுக்கு ஓர் அழகிய கோவிலை கட்ட விரும்பியபோது அது நாத்தான் வழியாக ஆசீர்வாதமாக மாறுவதை காணலாம். மத்தேயு நற்செய்தியில் இறைவேண்டல் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கின்றார். எப்படி செபிப்பது, யாரிடம் செபிப்பது, எதற்காக செபிப்பது, செபிக்கும் போது உள்ள மனநிலை என்பன பற்றி மிக தெளிவாக எடுத்தியம்புவதை காணலாம்.
ஜுபிலி ஆண்டு:
திருத்தந்தை எமக்கு தந்துள்ள இந்த ஜுபிலி ஆண்டில், திருப்பயணம் செய்யும் எமது வாழ்வு மிக முக்கியமானது. இத்திருப்பயணத்திலே, காலத்தின் அடையாளங்களை கண்டு பயணிப்பது மிக அவசியமானது என்பதை வலியுறுத்துகின்றார். எம்மைச் சுற்றி நடப்பவைகள் உதாரணமாக, இயற்கை அழிவுகள், யுத்த அனர்த்தங்கள், நாளும் பல்வேறு காரணங்களால் மரணிப்பவர்கள், எமது உதவும் கரங்களுக்காக ஏங்குபவர்கள், ஒருவேளை உணவுக்காக இடைவிடாது உழைப்பவர்கள், நோயாளிகள், துஸ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள், அகதிகள், குடும்ப வன்முறைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள் என அனைத்தும் எமது செபங்களில் தாங்கிச் செல்ல வேண்டியவைகளே. 'உமது ஆட்சி வருக' எனும் வார்த்தை சுயநல அனுபவமாக இருக்கக்கூடாது. மாறாக தன்னல மறுப்பாகவும், பிறர்நல வாழ்வாகவும் அமைய வேண்டும். இதுவே திருத்தந்தையின் கனவாகும்.
எனவே,
இன்று, கடலலை தாலாட்டி, கவிமழை மீட்டி, மண் உயர்ந்து, மனமுயர்ந்து, மீன்கொளிக்கும் இவ்வழகிய புரவிநகரை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். இயற்கை தரும் கொடைகளும், எம்மைச் சுற்றியுள்ள நல்லுள்ளங்கள் தரும் அன்பும், இறைவன் தரும் உன்னத கொடைகளே. 'உமது திருவுளம் மண்ணுலகில் நிறைவேறுக' என்று செபிக்கும் ஒவ்வொரு கனமும் இக்கிராமத்தின் ஆசீர்வாதமே. தாவீதைப் போல, நல்ல எண்ணங்களை, நல்ல செயல்களை இறைவன் இன்று வரவேற்கின்றார். உள்ளத்தால், உறவால் ஒன்றிணைந்தவர்களாய் இன்றைய பலியில் எம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
2 சாமுவேல்: 7:18-29
திருப்பாடல்: 17:1-8
மத்தேயு: 6:9-13
இறைமக்கள் மன்றாட்டு
குரு: "உம்மைப் போன்று வேறு எவரும் இலர்; உம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை" எனும் தாவீதின் நன்றிப்பாடல் இன்று எமக்கு புதிய நம்பிக்கையை தருகின்றது. உள்ளத்தின் நன்றியின் வார்த்தைகள் எமது எண்ணங்களாக, செபங்களாக, வேண்டல்களாக உம்மிடம் எழுவதாக. எமது விண்ணப்பங்களை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. விண்ணுலகின் தந்தையே! உமது அரசை உலகமெங்கும் பரப்ப தமது வாழ்வை உமக்காக அர்ப்பணிக்கும் எமது திரு அவைப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். தமது பணிவாழ்வில் உம்மை மாத்திரம் தமது அர்ப்பணத்தின் முன்மாதிரிகையாக தெரிந்திடவும், கடினமாக பாதைகள் நடுவிலும், உறுதியாக பயணம் செய்யும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று,...
2. விண்ணுலகின் தந்தையே! எமது பங்கிலே பணியாற்றும் பங்குத்தந்தை, மற்றும் இத்திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தை, குருக்கள், துறவிகள், இறைதொண்டுப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். இவர்களின் தாராள மனமும், தளராத உள்ளமும், சோர்ந்திடா உறுதியும், சீரான தீர்மானங்களும் இப்பங்கின் வளர்ச்சிக்கான படிகளே. உமது சிறகில் இவர்களை காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று,...
3. விண்ணுலகின் தந்தையே! எமது பங்கின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைக்கும் ஊதியங்களை அன்பளிப்பாக உவந்தளிக்கும் அனைத்து நன்கொடையாளிகள், நலன்விரும்பிகள் அனைவரையும் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். இறைவா! இவர்களின் அகலவிரிந்த இதயங்களையும், தயங்கமறுக்கும் கரங்களையும் ஆசீர்வதியும். தொடர்ந்தும் இவர்களின் இவ்வழகிய அறச்செயலால் இவ்வுலகம் அழகுபெற அருள்புரிய வேண்டுமென்று,...
4. விண்ணுலகின் தந்தையே! இன்று தமது நவநாளை சிறப்பிக்கும் ஆறாம் வலய அன்பிய இறைமக்களையும், அமதிகளின் பொதுநிலையினர் சபையையும் ஆசீர்வதியும். இறை அரசுப் பணியை தமது வாழ்வாலும், வார்த்தையாலும், அறச்செயல்களாலும் ஆற்றும் இவர்கள் வழியாக எமது பங்கும், மக்களும் அனைத்து உலகும் நிறைவுபெற வேண்டுமென்று,...
குரு. வல்லமையின் இறைவா! ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே உரியன என்று உம்மை நாம் மனதாற வாழ்த்துகின்றோம். இன்று நீர் எமக்கு கற்றுத்தந்த செபத்துக்காகவும், அதன் வலிமையான அர்த்தங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். நாம் தாழ்ச்சியுடன் இன்று உம்மிடம் ஒப்படைக்கும் அனைத்து வேண்டல்களையும் ஏற்றருளும். இவைகள் எமக்கு நிறைவான அருளை பெற்றுத்தருவதாக. எங்கள்.
No comments:
Post a Comment