Saturday, 15 June 2024

திரு அவை ஒரு செபிக்கும் கூட்டம்



திருப்பலி முன்னுரை 

இறைவனின் பலியில் இணைந்து, இதயத்தில் இருக்கும் இயேசுவை இகமதில் வரவேற்று, கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத்திலும், அவரது வார்த்தையிலும் அவரை சுவைக்கவும், அனுபவிக்கவும் இன்று நாம் ஒன்றுகூடிவந்துள்ளோம். இன்றைய திருப்பலி வழியாக இறைவனுக்கு நன்றிசொல்லுவோம், புகழ் பாடுவோம். 'திரு அவை ஒரு செபக்கூட்டம்' எனும் கருப்பொருள் இன்றைய நாளுக்கான சிந்தனையாக தரப்பட்டுள்ளது. இந்நவநாளை சிறப்பிக்கும் அன்னை தெரேசா அன்பியம் மற்றும் ஆரம்ப கால இறைமக்களுக்காக மன்றாடுவோம். மற்றும் மண்கும்பாண் மற்றும் இந்து சமய உறவுகளுக்காகவும் இப்பலியிலே மன்றாடுவோம். 

இறைவார்த்தை: 

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் புனித பவுலின் உள்ளத்தையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது; மக்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் இறைபணியாற்றுகின்றார், போலிப்போதகர்கள் மத்தியில் துணிந்துநின்றார், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராய் இருக்கத் தகுதியற்றவர் எனும்போதேல்லாம் அவர்களுக்காக செபிக்கின்றார். தூய வாழ்வு வாழ துணிந்து அழைப்பதைக் காணலாம். கொரிந்து மக்களை ஒப்புரவு பாதயில் வழிநடத்த புனித பவுல் இம்மடலை தகுந்த முறையில் வழிநடத்துவதைக் காணலாம். லூக்கா நற்செய்தியில், திரு அவையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கின்றார். இயேசுவின் சீடத்துவ வாழ்வு என்ன என்பதன் அடிப்படை தத்துவத்தை துள்ளியமாகவும், சவால்களோடும் எடுத்தியம்புவதைக் காணலாம். 

ஜுபிலி ஆண்டு

திரு அவையின் அடிப்படை உருவாக்கம், கடவுளின் முதற்படைப்பில் கிடைக்கும் ஆசீர்வாதமே. ஆணும் பெண்ணும், கணவனாக மனைவியாக ஒன்றிணைந்து ஏற்படுத்தும் உன்னதவாழ்வே. இவ்வாழ்வு படைப்பிற்கும், படைத்தவருக்கும் திறந்த முறையில் பதிலளிப்பதேயாகும் என திருத்தந்தை கோடிட்டுக் காட்டுகின்றார். கணவன் மனைவிற்கிடையில் உருவாகும் அன்பே அதன் முதல் பணியாகும். இதனால் அவர்கள் புதிய தலைமுறையை தகுதியான முறையில் உருவாக்குகின்றார்கள், செபிக்கும் திரு அவைக்கு வித்திடுகின்றார்கள். புதிய குழந்தைகளை, புதிய உலகை, புதிய திரு அவையை உருவாக்குவது இவர்களின் தார்மீகக் கடமையே. இவர்கள் அன்பை இழந்தால், அனைத்தையும் இழந்துவிடுவார்கள், அனைத்தும் இழந்து போவதற்கு காரணமாகிவிடுவார்கள். 


தூய ஆவியின் வருகைக்காக ஒன்றித்து செபித்தது, திரு அவையாக சேர்ந்து செபித்ததற்கு முதல் உதாரணமாகும். இதனைத் தொடர்ந்தே முதல் கிறிஸ்தவர்களாக, புதிய கிறிஸ்துவைத் தாங்கும் கூட்டமாக இணைந்து செபித்தமை இன்று எமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களே. எனவே, இன்றைய நாளில் திரு அவை சமூகமாக இத்திருப்பலி வழியாக செபிக்க கூடிவந்துள்ளோம், இதற்காக நன்றி கூறுவோம். எமது செபங்கள் திரு அவைக்கு தேவையானதே. எமது செபங்கள் நோயாளிக்கு ஆறுதலாகவும், ஏழையின் கண்ணீருக்கு விடையளிப்பதாகவும், துன்பபடுவோருக்கு துயர்துடைப்பதாகவும், வலிமை இழந்தோருக்கு வாழ்வாகவும், இறந்தவர்களுக்கு நித்திய வாழ்வைக் கொடுப்பதாகவும் அமைகின்றது. சேர்ந்து செபிப்போம், இவ்வுலகை புதிய பாதையில் அமைத்திட முன்வருவோம், இப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.  


முதலாம் இறைவார்த்தை

2கொரிந்தியர் 6:14:18

நற்செய்தி இறைவார்த்தை 

லூக்கா: 14: 25-33


இறைமக்கள்மன்றாட்டு

குரு: "தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது" எனும் இயேசுவின் வார்த்தைகள் எமது கிறிஸ்தவ வாழ்விற்கு தேவையான வலிமையை அளிக்கின்றது. எமது அன்றாட செபங்கள் இவ்வுலகிற்காக எப்பொழுதும் அமைய வேண்டும். இவ் அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று

3. பல்வேறு துன்பங்களால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. இன்றைய நாள் வழிபாட்டை சிறப்பிக்கும் அன்னை தெரேசா அன்பிய இறைமக்கள் மற்றும் இந்து சமய மக்களை அனைவரும் இறை இயேசுவின் ஆசீரையும், அருளையும் வல்லமையையும் நிறைவாக அனுபவிப்பார்களாக. தங்களது வாழ்வில் கிடைக்கும் அனைத்து செல்வங்களும் இறைவன் கொடுத்தது என நம்பவும், உறவோடும், உரிமையோடும் உம்மை அநுதினம் நேசிக்கவும் அன்பு செய்யவும் உமது அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். அன்பியங்களாக இணைது செபிக்கவும், செபத்தால் புதிய பாதை அமைக்கவும் எமக்கு வரம் அருள்வீராக. நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...