திருப்பலி முன்னுரை
'ஆண்டவரையே நம்பியிரு பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.'
கடவுளின் அன்பாலும், அவர் எம்மேல் கொண்ட அளவற்ற பாசத்தாலும், நாம் பாவத்திலுருந்து மீட்கப்பெறவும், அவரின் எல்லையற்ற இரக்கத்தால் நாம் மன்னிப்புப் பெறவும், தம் மகன் வழியாக, அவரின் சிலுவைச் சாவின் வழியாக விடுதலை பெற்றுத்தந்த இயேசுவின் அன்புப் பலியில் கூடிவந்துள்ள என் இறைமக்களே, உங்கள அனைவரையும் இவ் அன்புப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்று பொதுக்காலம் பத்தாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம்.
எம்மைப் படைத்த கடவுளின் அன்பு அளவுகடந்தது. நாம் தவறிழைக்கும் போதெல்லாம், அவரிடமிருந்து தவறிச் செல்லும் போதெல்லாம், எமது கடந்துவந்த பாதையில் நன்றியின் மனநிலையை மறந்த போதெல்லாம், வெற்றியின் உயர்வில் மதிமயங்கிப்போய் இறைவனை மறந்தபோதெல்லாம் இறைவன் எம்மை விட்டுவிலகுவதே இல்லை என்பதையே இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு உணர்த்துகின்றன.
தீமையினால் தீமையை வெல்லமுடியாது - அது வெற்றி என்று கூறவது போலித்தனம். நாம் தீமைகளைக் கண்டு பழகிப்போய்விட்டோம், தீமை செய்வதை நியாயப்படுத்துகின்றோம், அதற்கு உடந்தையாக இருக்கின்றோம். இவைகள் எமது வாழ்வில் பிளவுகளையே ஏற்படுத்துகின்றன. இயேசு இதை, தூய ஆவிக்கு எதிரான பாவங்கள் என்றே எண்பிக்கின்றார்.
இயேசுவை அதிகமாக அன்புசெய்யும் நாம் தீமைகளோடு உடன் பயணிப்பது மிகத் தவறானதே, பொருத்தமற்றதே. திரு அவை வழியாக தமது இறை அரசை உலகமெங்கும் நிலைநிறுத்தும் இயேசுவின் அன்பர்களாக எமை மாற்றுவோம். ஒரு தனி மனிதனால் இவ்வுலகிற்கு மீட்பு கிடைத்தது போல், எம் ஒவ்வொருவரின் தனித்துவமான வாழ்க்கையால் இவ்வுலகில் அன்பை நிலை நிறுத்த முடியும், இவ்வுலகிலே தீமைக்கு எதிராகவும், தீமை செய்வோருக்கு எதிராகவும் போரிட முடியும். இவ்வுலகிலே யுத்தம் செய்வோரின் எண்ணங்கள் கொடூரமானது, இரக்கமற்றது, சுயநலம் நிறைந்தது. இந்த யதார்த்த நிலை மாறவேண்டும். எம் மக்கள் விரும்பும் வாழ்வு விடியவேண்டும். இதற்கான வரங்களை கேட்டு தொடரும் பலியில் பங்கேற்போம்.
வருகைப் பல்லவி
காண். திபா 26:1-2 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யார் முன் நான் அஞ்சி நடுங்க வேண்டும்? என் பகைவர்கள் என்னைப் தாக்கும்போது அவர்களே இடறி விழுந்தார்கள்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, நன்மையானவை அனைத்தும் உம்மிடமிருந்தே வருகின்றன் இவ்வாறு உமது ஏவுதலினால் நாங்கள் சரியானவற்றை உணரவும் உமது வழிநடத்துதலால் அவற்றையே நாங்கள் நிறைவேற்றவும் உம்மை வேண்டுவோருக்குக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13 - 5: 1
நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்.
நற்செய்தி இறைவாக்கு
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-35
பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.
இறைமக்கள் மன்றாட்டு
குரு. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும் எனும் புனித பவுலின் அழகிய எண்ணங்கள் நிறைந்த வார்த்தைகளால் எமது வாழ்வில் அழகிய எண்ணங்கள் மலரவும், அருள் நிறையப்பெறவும் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம்.
தூய ஆவியின் துணைகொண்டு இவ்வுலகெல்லாம் நற்செய்திப் பணியாற்றிவரும் அனைத்து திருநிலையினரும் இறை அருளால் நிறைக்கப்படவும், அவர் வல்லமையால் வழிநடத்தப்படவும் வேண்டுமென்று, ...
எமது திருத்தந்தை, மறைமாநில ஆயர் மற்றும் அனைத்து ஆயர்களும் இவ்வுலகின் சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் முகங்கொடுத்து, தீமைகள் மத்தியில் இயேசுவின் அன்புநிறை நற்செய்தி வாழ்வின் விழுமியங்களை பறசாற்ற வேண்டிய அருளை அளித்திடவேண்டுமென்று, ...
எமது பங்கில் மற்றும் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து துறவற குருக்கள் துறவிகளும் தமது ஏழ்மையான, கீழ்படிவுள்ள, கற்புநிறை வாழ்வால் கிறிஸ்துவுக்கு சான்றுபகரவும், நற்செய்திக்காய் உழைக்கும் இத்துறவற வாழ்வு இன்னும் அதிகமாய் மேலோங்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
எமது பங்கிற்காக, கிராமத்திற்காக, எமது சமூகத்திற்காக பலன்களை எதிர்பாராது உழைக்கும் பல நல் உள்ளங்கள் பெருகவும், வறியோரை, இயலாமையில் இருப்போரை, ஏழைகளை, கல்விக்காக கரம் ஏந்துவோர் அனைவரையும் தாங்கும் உள்ளங்களை இறைவன் இன்னும் அதிகமாக எமக்கு தரவேண்டுமென்று,...
இந்த உலகத்திலே பெருகிவரும் வன்முறையால், மனிதம் முற்றுமுழுதாக அழிந்தும், மனித விழுமியங்கள் அவமதிக்கப்பட்டு, வாழ்வதற்கு உரிமை மறுக்கப்படும் இந்த அந்தரங்க உலகிலே, கிறிஸ்து இவ்வுலகிற்கு தரும் அன்பும் தியாகமும் இன்னும் அதிகமாக வளரவும், மனிதனை மனிதன் மதிக்கும் உள்ளங்கள் பெருகவும் இறைவன் இவ்வுலகை இன்னும் ஆசீர்வதிக்கவும் வேண்டுமென்று,...
குரு. அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளைகள் நாம் இரக்கத்துடன் உம்மிடம் வேண்டும் எமது மன்றாட்டுக்களுக்கு செவிசாயும். நாம் நிறைவுள்ளவராய் வாழவே நீர் விரும்புகின்றீர். இவ்வுலகில் பெருகும் அனைத்து தீமைகளும் எம்மைவிட்டு விலகவும், நாம் என்றும் உமது அன்பின் சிறகில் அடைக்கலம் காண அருள்புரிய வேண்டுமென்று எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இரக்கத்துடன் எங்கள் பணியைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாகி எங்கள் அன்பை வளர்ப்பதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
திபா 17:3 ஆண்டவர் என் கற்பாறை; என் புகலிடம்; என் மீட்பர்; என் கடவுளே எனக்குத் துணைவர்.
அல்லது
1 யோவா 4:16 கடவுள் அன்பாய் இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, நலம் அளிக்கும் உமது செயல் எங்களைத் தீய நாட்டங்களிலிருந்து விடுவிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்களை நேரிய வழியில் நடத்திச் செல்லக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

Comments
Post a Comment