Monday, 17 June 2024

பல கேள்விகளுக்கு விடைகொடுத்து, வாழ்வின் பாதைகளைத் தீர்மானிக்கும் செபம்


திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு இறைமக்களே, பதுவை புனித அன்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் ஆயத்த நாள்களில் ஏழாம் நாளாகிய இன்று நாம் இந்நன்றித் திருப்பலியில் இணைந்து இறைவனுக்கு பலி ஒப்புக்கொடுத்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைய நாளின் கருப்பொருளாக "பல கேள்விகளுக்கு விடைகொடுத்து, வாழ்வின் பாதைகளைத் தீர்மானிக்கும் செபம்" எனும் அழகிய தலைப்பில் சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய நவநாளை சிறப்பிக்கும் ஐந்தாம் வலய அன்பிய இறைமக்களையும், அந்தோனியார் ஆலய அன்பிய சபையினரையும் ஒப்புக்கொடுத்து இப்பலியிலே இவர்களுக்காக மன்றாடுவோம். 

இறைவார்த்தை

எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதலாம் இறைவார்த்தையில் இறைவாக்கினரின் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தின் பின் எரேமியா இறைவாக்கினரின் வாக்கு, ‘இதயத்தில் எழுதப்பட்ட சட்டத்தைக் கொண்ட புதியதோர் இறைக்குலம் தோன்றவிருக்கிறது’ என்னும் நம்பிக்கைப் பேரொளியாக மாறுகின்றது. மக்களின் மனம் மாறவேண்டும். அவர்களின் நம்பிக்கை பெருகவேண்டும், இன்பங்களை அனுபவிப்பதில் மாத்திரம் கடவுளை காண்பதல்ல, துன்பங்களின் போதும் தளைத்திடா நம்பிக்கை வளரவேண்டும் என வலியுறுத்துகின்றார். மத்தேயு நற்செய்தியில் இயேசு வரிசெலுத்துவது பற்றி தனது எண்ணக்கருவை விபரிக்கின்றார். மீனின் வாயில் கிடைக்கும் ஸ்தாத்தேர் நாணயத்தைக் நாணயத்தைக் கொண்டு வரிசெலுத்த முனைவதை நற்செய்தியில் காணலாம். ஸ்தாத்தேர் நாணயம் என்பது நான்கு திராக்மா நாணயத்திற்கு சமனானது, அதாவது நான்கு நாள் கூலிக்குச் சமனானது. இயேசுவின் இப்படிப்பினை மிக அழகான பாடத்தைக் கொடுப்பதைக் காணலாம். 

ஜுபிலி ஆண்டு. 

திருத்தந்தையின் இவ் அழகிய மடலில், முன்வைக்கும் எதிர்பார்ப்புக்கள் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கும்  பத்திலடியே. சிறையிலே கைதிகளாக இருப்போருக்கு மரண தண்டனை எனும் சட்டம் தளர்த்தப்படவேண்டும். நாம் அவர்களோடு ஒன்றித்திருக்கின்றோம் என்பதன் அடையாளமாக சிறைச்சாலையிலேயே 'புனித நுழைவாயிலை' ஆரம்பித்து, இதனூடாக இவர்கள் நுழைகையில் தமது நம்பிக்கையோடு கூடிய எதிர்காலத்தைக் காணவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றார். இவ்வாறே வைத்தியசாலையில் இருப்போர், பலவீனமானோர், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் தமக்கென்றே ஒரு சுதந்திர வாழ்வை தேடி அழைகின்றார்கள். இவர்களுக்கான நம்பிக்கையின் பாதை காட்டப்படவேண்டும் எனும் அழகிய முயற்சி இவ் ஜுபிலி ஆண்டின் சிறப்பாகின்றது. 

எனவே, செபம் பல கேள்விகளுக்கு பதில்கொடுத்திருக்கின்றது, நம்பிக்கையோடு செபிக்கும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த மருந்தாகின்றது. எமது செபத்தால் புதிய வாழ்வை தொடங்கலாம், புதிய பாதை அமைக்கலாம், புதிய கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம். இதுவே எமது நம்பிக்கை. எமக்கு முன் நம்பிக்கை வாழ்வை வாழ்ந்துசென்ற பல நூறு புனிதர்கள் இதற்கு சான்றுபகர்வார்கள். எச்சூழ்நிலையிலும், எல்லாவேளையிலும் இறைவனோடு இருக்கும் அழகிய நேரங்களை வீணாக்காமல், செபிப்போம், ஒன்றிப்போம் ஒரே திரு அவையில் இறைசமுகமாய் உருவாகுவோம். 

இறைமக்கள் மன்றாட்டு


குரு: வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம், ஏனெனில் ஆண்டவர் எமது பாதுகாப்பாக இருக்கின்றார், எமது தேவைகளில் எமக்கு செவிமெடுக்கின்றார், எமது இயலாமையில் எமக்கு துணை நிற்கின்றார். எமது விண்ணப்பங்களை அவரிடம் சமர்ப்பிப்போம். 


1. திரு அவைப் பணியாளர்களுக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! எமது திரு அவையிலே பணியாற்றும் அனைத்து பணியாளர்களும், திரு அவையின் மாண்புக்காக உழைக்கவும், ஒரே, மற்றும் புனித, கத்தோலிக்க திரு அவையின் வாழ்வுக்காக பணியாற்றும் வாஞ்சை கொண்டு வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மான்றாடுகின்றோம். 


2. எமது பங்கு திரு அவைக்காக மான்றாடுவோம். 

அன்பின் இறைவா! விசுவாசத்தின் விளைநிலமாகிய எமது பங்கை வழிநடத்தி அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் எமது பங்கு தந்தை, துறவற உறவுகள் மற்றும் பங்கின் மக்கள் அனைவருக்கும் தேவையான அருள் வளங்களை அளித்தருளும். என்றுமே தமது தியாகத்தாலும், ஆர்வத்தாலும், வாஞ்சையாலும் எமது பங்கிற்கு அணிசேர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


3. இத்திருப்பலியை சிறப்பிப்போருக்காக மன்றாடுவோம் 

அன்பின் இறைவா இன்று இந்நவநாளை சிறப்பிக்கும் ஐந்தாம் அன்பிய இறைமக்களுக்காகவும், அந்தோனியார் ஆலய அன்பிய சபையினருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களின் வாவை ஆசீர்வதியும், தொழில்துறையையும் வாழ்வாதாரத்தையும், பிள்ளைகளின் நல்வாழ்வையும் ஆசீர்வதியும். தொடர்ந்தும் உமது அன்பை விட்டு விலகிடாமல் பயணித்திட வேண்டூமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


4. எமது இளைஞர் யுவதிகளுக்காக மன்றாடுவோம் 

அன்பின் இறைவா! மாறிவரும் கலாசார வேட்கையினாலும், சினிமா மோகத்தினாலும், அதிநவின தொழில்நுட்ப உலகத்தின் தாக்கத்தாலும் கவரப்பட்டு பாதிப்புறும் எமது இளையோர் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பையும், விசுவாசதையும் தொலைத்திடாமல், அவருக்காக இறுதிவரைக்கும் வாழும் உள்ளம் கொண்டு வாழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


குரு: 'அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்', எனும் திருப்பாடல் ஆசிரியரின் வலிமையின் வார்த்தைகளோடு இணைந்து, வாழ்வு எனும் கொடைக்காக நன்றி சொல்லி, ஆவர் எம்மேல் கொண்ட கருணைக்காகவும், பேரிரக்கத்திற்காகவும், பராமரிப்பிற்காகவும் நன்றி கூறுவோம். நாம் வார்த்தைகளில் எடுத்துரைத்த விண்ணப்பங்களுக்கும், எண்ணத்திலும், சிந்தனையிலும், சொல்லமுடியாமல் தவிக்கும் பல விண்ணப்பங்களுக்கும் அவர் செவிசாய்க்கவும், மனமுவந்து ஏற்றுக்கொள்ளவும் வரமருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம், ஆமென். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...