Tuesday, 18 June 2024

செபத்தின் முன்னுதாரணம் நம் மரியன்னை



 செபத்தின் முன்னுதாரணம் நம் மரியன்னை 

அன்னை மரியின் பாதம் படுத்துறங்குவது எத்துனை இனிது, அவள் இனிக்கும் சொல்கொண்ட தூதுரைகள் எத்துனை இனிது; சுகம் தரும் கருணைவிழிகள் எத்துனை இனிது, சுமைகளோடு வரும் எமக்கு துணையாய் இருப்பது எத்துனை இனிது. அம்மா என்றெல்லாம் அசையா நம்பிக்கையில் அரவணைக்க அழைக்கும்போது அருள்தரும் அணையா விளக்காக நீயிருப்பாய் தாயே. 

அன்னையின் பரிந்துரைகொண்ட ஆசீர்களை பெற, இயேசுவின் கல்வாரிப்பலிக்கு இணைந்திருக்கும் அன்பு உறவுகளே! இன்று "செபத்தின் முன்னுதாரணம் நம் மரியன்னை" எனும் அழகிய கருப்பொருள் எமது சிந்தனைக்காக எமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நவநாளை சிறப்பிக்கும் சாட்டி திருத்தல இறைமக்களுக்காகவும், திருத்தல அன்பிய சபையினருக்காகவும் விசேட விதமாக மன்றாடுவோம். 

இறைவார்த்தை

இஸ்ராயேலின் தலைமைத்துவம் மாற்றம்பெற்று, அரசர்களின் ஆட்சியை முன்நிலைப்படுத்தும் அழகிய நூலாக சாமுவேலின் முதல் நூல் எமக்கு கொடுக்கப்படுகின்றது. இருப்பினும், இஸ்ராயேலின் தலைவர் இறைவனே என்பதை எழுதப்படாத சட்டமாக, இதயத்தின் மௌன ஒலியாக ஒலிக்கவேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது. குழந்தைகள் இல்லாத அன்னாவின் செபம் கேட்கப்படும் எனும் ஏலியின் இறைவாக்கு அன்னாவை ஆசீர் நிறைந்த பெண்ணாக மாற்றும் என்று எண்பிக்கின்றார். யோவான் நற்செய்தியில், அன்னை மரியாவின் பெரும் பங்கு காட்டப்படுகின்றது. கானாவூரில் நடைபெற்ற திருமணத்தில் ஒரு பெண்ணின் தலைமைத்துவமும், அவளின் நிபந்தனையற்ற கரிசணையும் தெளிவாகக் காட்டப்படுகின்றது. ஆணாதிக்க சமுகத்தில், அன்னை மரியாளின் இச்செயல் ஒரு சவாளே. அவளின் வேண்டுகோளுக்கு இறைவனின் இதயமும் திறந்துகொடுக்கும் என்பதை இப்புதுமை வழியாக கற்ருக்கொள்ளலாம். 

ஜுபிலி ஆண்டு

அன்னை மரியாள் ஒரு சாட்சியப் பெண்ணே, அவளிடம் நம்பிக்கை என்பது வாழ்வின்  தெளிவான ஒரு யதார்த்தமே. எங்களுக்காக இறை திட்டத்தில் உடன் இருந்தாள், தன் மகன் வழியாக அனைத்தையும் நிறைவேற்றுவதில் அவள் தெளிவாய் இருந்தாள். அன்னை மரியைப் போல் நம்பிக்கையில் தெளிவாய் பயணிக்க திருத்தந்தை அழைப்புவிடுக்கின்றார். மரியன்னையின் உடனிருப்பு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை அளிக்கின்றது, அவளின் பரிந்துரை மிக வல்லமையானது, சக்திமிக்கது. அவளின் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவானது, உறுதியானது, நிரந்தரமானது. 

எனவே, 

எமது கைகளை அகலவிரித்துப் பார்ப்போம், அநுதினம் நாம் சேகரிக்கும் அனைத்துமே நிரந்தரமற்றது; தேவையற்ற பாவ வாழ்வு, புரியாத அநாகரிக பழக்கங்கள், உணர்வுக்கு மிஞ்சிய பிரிவினைகள், கோபங்கள், பலனளிக்காத பண பொருள் ஆசைகள் என எதையுமே எம்மிடம் கொண்டுசெல்ல முடியாது என அன்னையின் ஆளுமை நிறுபித்துவிட்டது. இவ்வுலகத்தில் வாழ்ந்த அன்னை மரியாவிடம் இருந்த மிகப்பெறுமதியான சொத்து அவளின் பரிந்துரைமிக்க செபமே. அன்னை மரியாள் எம்மிடம் செயற்பட அநுமதிப்போம். அவளின் எண்ணங்கள், ஆசைகள், உணர்வுகள் இயேசுவத் தாங்கும் பாக்கியம்பெற்றனவே. இதை நாமும் உணர்ந்து கடைப்பிடித்து வாழ இறைவரம் வேண்டுவோம்.  

இறைமக்கள் மன்றாட்டு 

குரு: 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று மொழிந்த அன்னை மரியின் அன்பு வார்த்தைகள் இயேசுவை குறித்துக் காட்டுகின்றன. அன்னை மரியின் வழி, இயேசுவின் அன்பு வார்த்தைக்கு செவிகொடுக்கும் மக்களாக எமை மாற்றி எமது உள்ளத்தின் உணர்வுகளை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து மன்றாடுவோம். 

1. அன்பின் ஊற்றே இறைவா! அழைத்தலின் ஆழம் உணர்ந்து, தமது வாழ்வே திரு அவைக்கு அணிசேர்க்கும் என்று அர்ப்பணிக்கும் குருத்துவ துறவற பணியாளர்கள் அனைவருக்கும் நிறையாசீர் கிடைக்கவும் அவர்கள் வழி எமது மக்கள் இறை அனுபவம் பெற்று வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. இங்கே கூடியிருக்கும் உமது அன்பர்கள் நாம் உமது வார்த்தைக்கு செவிகொடுக்கின்ற, அதன்படி வாழுகின்ற சீடர்களாக எமை மாற்றியருளும். உமது தாயின் அன்பு இதயத்தை போல் எமக்கு கறுத்தாரும், அவளின் பாச உணர்வுகளுக்கு எம்மை அடிமைகளாக்கும், அவளின் பாவ விடுதலைக்கான போராட்டத்தில் எம்மையும் இணைத்தருளும், கருணைமழை போன்ற அவளின் பரிந்துரையில் எம்மையும் எம குடும்பத்தையும் சேர்த்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. எமது எதிர்கால தலைமுறையான எமது அன்புப் பிள்ளைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். விசுவாசத்தின் வேர்கள் இவர்கள் உள்ளத்தில் ஆழமாக பதிவதாக. எமக்கு எப்பொழுதும் முன்மாதிரியான அன்னை மரியைக் கண்டு பாவிப்பார்களாக, நல் ஒழுக்கங்களை கற்றுக்கொள்வார்களாக, புதிய சிந்தனைகள் வழியாக, இறைவனை என்றும் எங்கும் தம் இதயத்திலும், ஞானத்திலும் தாங்கிச் செல்ல அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

4. இப்பலியை ஒப்புக்கொடுக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். அன்னை மரியை தமது அன்புத் தாயாக கொண்டு, உம்மை அநுதினம் தமது வாழ்வில் சான்றுபகரவும், திருக்குடும்ப வெளிச்சத்தை உலகிற்கு எடுத்தியம்பவும், திரு அவையின் மறைபோதக வாழ்வுக்கு பிரமாணிக்கமாக இருக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பின் இறைவா! கரம் கொடுத்து காப்பவரே உமக்கு நாங்கள் நன்றி சொல்கின்றோம். இன்றைய நாளிலே உமது வார்த்தையை கேட்டு, அதை ஆழ தியானிக்க எமக்கு தந்த இவ் அழகான சந்தர்ப்பத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று நாங்கள் உமது தாயாகிய அன்னை மரியா காட்டிய பாதையிலே நடக்கவும் உம்மை விட்டு விலகிடாத நல்ல கருவியாகவும் எம்மை மாற்றியருள வேண்டுகின்றோம். நீர் எமது தந்தை, நாங்கள் உமது பிள்ளைகள் என்ற உணர்விலே உமது பாதம் சமர்ப்பித்த எமது தேவைக்ளை எல்லாம் நீர் தயவாய் செவிசாய்த்தருளும். உமது அருளால் எமது வாழ்வும் வளம்பெற அருள்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி... 

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...