இரண்டாம் ஆண்டு
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவின் அன்புள்ள இறைமக்களே! இன்று பொதுக்காலத்தின் பன்னிரெண்டாம் வாரத்தினுள் நுழைகின்றோம். காலங்களும் நேரங்களும் எம்மைக் வெகுவாகவே கடந்து சென்றாலும், தொடக்கமும் முடிவுமாக இருக்கும், அகரமும் ணகரமுமாயிருக்கும் கடவுளின் உன்னத வழிநடத்தலும், பராமரிப்பும் எம்முடனே இருக்கின்றது. நாம் ஆரம்பிக்கும் இவ்வாரமும் இதற்குச் சான்றாகும்.
(இன்று திருத்தந்தையின் தினமாகும். "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன் " என்று, அன்றுகொடுத்த உறுதிமொழியை இன்றுவரைக்கும் பாதுகாத்துவரும் எமது திருத்தந்தைக்காக இன்று மன்றாடுவோம். இத்திருப்பலியை சிறப்பிக்கும் .... இவர்களுக்காகவும் இப்பலியிலேஇறைவரம் வேண்டுவோம்.)
இறைவார்த்தை
யோபு நூல், விவிலியத்தில் காணப்படும் ஞான இலக்கியங்களுள் முதன்மையானதே. நாற்பத்தி இரண்டு அதிகாரங்களைக் கொண்ட இந்நூல், நீதிமானாகிய யோபுபடும் துன்பத்திற்கு காரணம் அவரது பாவமா? அல்லது இவ்வுலகத்தின் பாவமா? எனும் விவாதத்திற்கு விடைகூறும் நூலாக இது அமைந்துள்ளது. எது நடந்தாலும், கடவுளின் ஆற்றலே சிறந்தது, அவரது வல்லமையே மேலானது என்று இறுதிவரைக்கும் துணிந்துசெல்லும் யோபு இன்று எமக்கு ஓர் எடுத்துக்காட்டு.
கொரிந்து நகருக்கு புனித பவுல் எழுதிய இரண்டாம் மடலில் போலியான எண்ணக்கருக்களை கொண்டு வாழ்ந்து, இயேசுக் கிறிஸ்துவின் நற்செய்திக்கு தடையாக இருந்த பலருக்கு தனது மடலின் வழியாக ஒப்புரவை ஏற்படுத்த விளைகின்றார் புனித பவுல். இயேசுவின் மேல் உள்ள எமது நம்பிக்கை தளர்வானதாயின் இவரது நம்பிக்கை தரும் வார்த்தைகள் எமது விசுவாசத்திற்கு உரமூட்டுகின்றதே.
மாற்கு நற்செய்தியில் சீடர்களின் நம்பிக்கை தெளிவாக்கப்படுகின்றது. இயேசுவின் உடனிருப்பு என்பது ஒரு மாயை அல்ல, ஒரு சடங்கு அல்ல; மாறாக அது வாழ்வு, மாறாத உண்மை யதார்த்தம், எம்மைவிட்டு விலகிடாத நிலையான புதுமை.
எனவே,
இப்புதிய வாரத்தை ஆரம்பிக்கும் எமக்கு இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு உன்னத பலமாக அமைகின்றன. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் நாளுக்கு நாள் மாறுகின்றபோது, உறவுகளும், நண்பர்களும் நம்பிக்கை இழக்கின்றபோது, அரசியல் வாக்குவாதங்கள் அநாவசியமாகின்றபோது, இயற்கையும் எம்மைவிட்டு தொலைவில் செல்லுகின்றபோது, பிந்தொடரும் பலவகையான யுத்தங்கள் அர்த்தம் இழக்கின்றபோது - நம்பிக்கை இழக்காமல் இயேசுவை பற்றிப்பிடிக்க இன்றைய இறைவார்த்தைகள் எமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. இயேசுவே பலம், அவரே எமக்கு வாழ்வு என்று அவரில் நம்பிக்கை கொண்டவர்களாக இத்திருப்பலியின் பக்தியுடன் இணைந்துகொள்வோம்.
வருகைப் பல்லவி
காண். திபா 27:8-9 ஆண்டவர்தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே மீட்பு தரும் பாதுகாப்பு. ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; என்றென்றும் அவர்களை ஆண்டு நடத்திய ருளும்.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, உம்மையே நம்பி, உம்முடைய அன்பில் நிலைத்திருப்பவர்களை நீர் என்றும் கைவிடுவதில்லை ; இவ்வாறு நாங்கள் உமது திருப்பெயரை எக்காலத்திலும் போற்றவும் உம்மை அன்பு செய்யவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.
முதல் வாசகம்
உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!
யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 8-11
ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:
“கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடிய பொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி ‘இதுவரை வருவாய், இதற்கு மேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!’ என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 107: 23-24. 25-26. 28-29. 30-31 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
23 சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்;
நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.
24 அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்;
ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். -பல்லவி
25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது;
அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.
26 அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்;
பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. -பல்லவி
28 தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்;
அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
29 புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்;
கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. -பல்லவி
30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்;
அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
31 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,
மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு
அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! -பல்லவி
இரண்டாம் வாசகம்
பழையன கழிந்து புதியன புகுந்தன.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.
ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41
ஒரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.
அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.
பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைமக்கள் மன்றாட்டு
குரு. "நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது"எனும் யோபுவின் வார்த்தை எமக்கு ஆருதலைத் தருகின்றது. இறைவனின் பலத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களாக எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அன்பின் இறைவா! உமது திரு அவையை வழிநடத்தும். உமது பாதையில் உம் பிள்ளைகளை இவ்வுலக ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கவும், பாவக்கறைகளில் இருந்து விடுவிக்கவும் உழைக்கும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...
2. வல்லமையின் ஆண்டவரே! எமது திருத்தந்தையை ஆசீர்வதியும். உலகத்தின் அடையாளங்களை உள்ளறிந்து, உறவையும், அன்பையும், மன்னிப்பையும் விளை நிலமாக்க உழைக்கும் எம் திருத்தந்தையின் ஒவ்வொரு முயற்சியையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று, ...
3. அன்பின் இறைவா! எமது பங்குத்தந்தையை ஆசீர்வதியும். தனது பலம், நேரம், விடாமுயற்சி, தனது ஞானம், அனைத்தையும் எமது வளர்ச்சிக்காக காணிக்கையாக்கும் இவரை தொடர்ந்து உமது அருளால் நிறைத்திட வேண்டுமென்று, ...
4. அருளின் வடிவே இறைவா! எமது பெற்றொரை ஆசீர்வதியும். எமக்காகவே வாழும் இவர்களின் உழைப்பையும் வியர்வையையும் தியாகத்தையும் எமது வாழ்வின் வெளிச்சமாக ஏற்று, கற்றுக்கொண்டு வாழ அருள்புரிய வேண்டுமென்று, ...
5. அன்பின் இறைவா! உமது பிள்ளைகளை (பிள்ளைகளாகிய எம்மை) ஆசீர்வதியும். நீர் தந்துள்ள பலம், வீரம், ஆற்றல், ஆக்கும்திறம், ஞானம், என அனைத்தையும் அறிந்து செயற்படற் செய்தருளும். இதனால் உம்மை இவ்வுலகில் தொடர்ந்தும் பிரதிபலிக்கும் கருவியாகிட அருள்புரியவேண்டுமென்று, ...
குரு. அன்பின் ஆண்டவரே! நம்பிக்கையை எமக்கு கற்றுத் தருபவரே. உமது வாழ்வு எமக்கு ஓர் எடுத்துக்காட்டே, அதுவே எமக்கு முன் உதாரணமே. இன்றைய நாளில் எம்து காணிக்கைகளாக உமது பாதம் சமர்ப்பிக்கும் இம்மன்றாட்டுக்களை ஏற்றருளும். நாம் பயணிக்கும் இப் பாதையில் உம்மை விட்டு விலகிடாமல் இருந்திட அருள்புரிய வேண்டுமென்று, எங்கள் ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்புகழ்ச்சிப் பலியை ஏற்றருளும்; அதனால் நாங்கள் தூயோராக்கப்பட்டு, உம்மை மகிழ்விக்கும் எங்கள் மனங்களின் காணிக்கைகளை உமக்கு அளித்திட அருள்வீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
திபா 144:15 ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நம்புகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.
அல்லது
யோவா 10:11,15 நல்ல ஆயன் நானே. என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உம் திருமகனின் உயர்மதிப்புள்ள உடலாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெற்றுப் புதுப்பிக்கப்பட்ட நாங்கள் உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: இறைப்பற்றுடன் நாங்கள் அடிக்கடி நிறைவேற்றும் இப்பலியின் பயனாக எங்கள் மீட்பை உறுதியாய்க் கண்டடையச் செய்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...
No comments:
Post a Comment