திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணைந்திருக்கும் நல் உறவுகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றேன்.
தேனியும் மலரும் இணையும்போது தேன் உருவாவதுபோல்,
காலையும் மாலையும் இணையும்போது நாளின் முழுமை அடைவதுபோல்,
மூங்கிலும் காற்றும் இணையும்போது இசை உருவாவதுபோல்,
மனிதனும் இறைவனும் இணையும்போது இவ் உலகின் புதுமை உருவாகின்றது, மறைபொருள் தெளிவாகின்றது, இறையருள் பெருகுகின்றது. இவ் அதிசயம் தேடி இன்று இப்பலியில் நாம் இணைந்திருக்கின்றோம். பொதுக்காலம் 13ம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கும் எமக்கு, இறைவனின் அருள் நிறைவாகக் கிடைக்க, அவரில் இணைந்து புதுமை படைக்க எம்மை ஆயத்தம் செய்வோம்.
இறைவார்த்தை:
- சாலமோனின் ஞான நூல் இன்றைய முதலாவது இறைவார்த்தையாக தரப்படுகின்றது. ஆண்டவர்மீது அச்சம் கொள்வதும், அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதுமே உண்மையான, உயரிய ஞானம் என்று கோடிட்டுக் காட்டுகின்றார். தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகி இறைவனின் ஆட்சி மண்ணுலகில் மலர கொடுக்கப்படும் முயற்சியாக முதலாவது இறைவார்த்தை அமைகின்றது.
- புனித பவுலின் கொரிந்து நகர் மக்களுக்கு எழுதப்பட்ட இரண்டாவது மடலில், அவர்களுக்கான அழகிய அறிவுரையாக இது அமைகின்றது. கிறிஸ்துவில் நம்பிக்கை இல்லாதவர்கள், அவரில் கொண்ட நம்பிக்கையில் நிலைத்திருக்கத் தவறியவர்கள், பவுலுக்கு எதிராக கலகம் விளைவித்தவர்கள் என அனைவருக்குமான அழகிய மடலாக இது அமைகின்றது.
- மாற்கு நற்செய்தி, புற இனத்தவருக்கு எழுதப்பட்ட நற்செய்தியாக அமைகின்றது. இங்கே, இயேசுவே மெசியா அவரே இறைமகன் என அறிக்கையிட பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படுவதைக் காணலாம். இன்றைய நற்செய்தி, இயேசுவின் மேல் அதிகமான நம்பிக்கைகொள்ள அழைப்பதைக் காணலாம்.
எமது நம்பிக்கை ஆழப்படுத்தப்பட வேண்டும்; வெறுமனே கண்களால் காணும், காதுகளால் கேட்கும் உலகத்தின் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் சான்றுபகரும் நம்பிக்கையற்ற பக்தர்களாக அல்லாமல், உள்ளத்து உணர்வுகளுக்கு செவிசாய்த்து, உயரிய விழுமியங்களுக்கு இடங்கொடுத்து வாழும் இயேசுவின் சீடர்களாக மாறவேண்டும். வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் மக்களாக அல்லாமல், இயேசுவின் பார்வையில் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம்கொடுக்கும் அன்பர்களாக மாறவேண்டும். இவ் அருளை எமக்கும் எமது குடும்பங்களுக்கும், இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழும் அனைவருக்கும் பெற்றுத்தர தொடரும் இப்பலியில் மன்றாடுவோமாக.
வருகைப் பல்லவி
திபா 46:2 மக்கள் அனைவருமே, களிப்புடன் கைகொட்டுங்கள்; மகிழ்ச்சிக் குரலுடன் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உமது அருளால் உம் பிள்ளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நாங்கள் ஒளியின் மக்களாக இருக்க விரும்பினீரே; அதனால் நாங்கள் தவறு எனும் இருளில் சிக்கிக்கொள்ளாமல் உண்மையின் பேரொளியில் என்றும் சிறந்து விளங்க அருள்புரிவீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24
சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.
கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்;
ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;
என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;
சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். -பல்லவி
4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்;
அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;
மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. -பல்லவி
10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;
ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b என் கடவுளாகிய ஆண்டவரே,
உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 7,9,13-15
சகோதரர் சகோதரிகளே,
நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.
மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். “மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை” என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43
அக்காலத்தில்
இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.
அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள்.
ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-24, 35b-43
அக்காலத்தில், இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.
தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” எனும் இயேசுவின் அழகிய வார்த்தைகள் எமது வலுவின்மையில், இயலாமையில், நம்பிக்கையற்ற நிலையில், வல்லமையாக, புதிய சக்தியாக எமக்கு வலுவளிக்கின்றது. அவரது வார்த்தைக்கு செவிமெடுத்தவர்களாக எமது தேவைகளை ஒப்பூக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அன்பின் இறைவா! திரு அவை வழியாக எமக்கு ஆன்மிக ஊட்டத்தையும், வழிகாட்டலையும், நம்பிக்கையில் நிறைவையும் தருகின்றீர். இதற்காக உழைக்கும் அனைத்து கரங்களையும் ஆசீர்வதியும், எமக்காக செபிக்கும் நல் உள்ளங்களை ஆசீர்வதியும், இதனால், திரு அவை பணியாளர்கள் அனைவரும் உம்மை அன்பு செய்வதன் வழியாக எம்மை நேரிய பாதையில் நடத்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
2. அன்பின் இறைவா! இவ் அழகிய நாளுக்காக நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். எமது வாழ்விலே நாம், உமது மகன் இயேசுவில் முழு நம்பிக்கை கொள்ளவும், எமது அழகிய குடும்பங்களில் அவரை வாழ்விக்கவும், நன்மைகள் அதிகம் புரிந்து, சொந்தங்கள் அதிகம் சேர்த்து, பஞ்சமும், வஞ்சகமும் வாழ்வில் தொலைத்து புதிய பாதை அமைத்திட அர்ருள்புரிய வேண்டுமென்று, ...
3. அன்பின் இறைவா! திருத்தந்தையின் வழிகாட்டலில், தொடங்கியிருக்கும் ஜுபிலி ஆண்டிற்கான பயணத்தில், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுகின்றோம். இவ்வுலகின் போக்கில் தடுமாறும் எம் மக்கள், புதிய முயற்சிகளால் தூண்டப்பட்டு, இயேசுவின் கல்வாரி அன்பை விதைத்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
4. அன்பின் இறைவா! பாதுகாபிற்காக, அமைதிக்காக, அன்பிற்காக ஏங்கும் எமது நாட்டு மக்கள் அனைவரும் புதிய அரசியல் நடைமுறைகள் வழியாக, முயற்சிகள் வழியாக புதிய ஆரம்பத்தை கண்டடைவார்களாக. எமது தலைவர்கள் எப்பொழுதும், மக்களை நேரிய பாதையில் வழி நடத்தவும், தியாகத்தாலும், கடின உழைப்பாலும் நல் எதிர்காலத்தை உருவாக்க அருள்புரிய வேண்டுமென்று, ...
குரு. அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளைகள் நாம் உமது சாயலாக பாவனையாக படைக்கப்பட்டு எப்பொழுதும் உம்மை எமது இதயத்திலும், உணர்விலும் சுமந்துகொண்டே இருக்கின்றோம். உம்மில்கொண்ட நம்பிக்கையால் எமது வாழ்வை உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். இவ் நம்பிக்கையால் உம்மிடம் நாம் கொண்டுவந்த அனைத்து தேவைகளுக்கும் செவிசாய்த்து உமது அருளை பொழிந்திடுவீராக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
இறைவா, நீரே அருள்கூர்ந்து ஏற்பாடு செய்யும் உம் மறைநிகழ்வுகள் எங்களுக்கு நற்பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் பணியின் புனிதக் காணிக்கைகள் உமக்கு ஏற்றவையாய் இருப்பனவாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு ! என்னுள் இருப்பதெல்லாம் அவரது திருப்பெயருக்கே!காண். திபா 102:1
அல்லது
தந்தையே, அவர்கள் நம்மில் ஒன்றாய் இருப்பார்களாக என அவர்களுக்காக வேண்டுகிறேன். அதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்புவதாக, என்கிறார் ஆண்டவர். யோவா 17:20-21
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுத்து உணவாக உட்கொண்ட இப்புனிதப் பலிப்பொருள் எங்களுக்கு வாழ்வு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் முடிவில்லா அன்பினால் உம்முடன் ஒன்றிணைக்கப்பட்டு என்றும் நிலைத்திருக்கும் கனி தர அருள்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச். ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
ஆண்டின் பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (ஆ) 30.06.2024
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 1:13-15: 2,23-24
சாலமோனின் ஞானம் என்ற நூல் கிரேக்க செப்துவாஜின்து மொழியில் எழுதப்பட்டபடியால் இதனை எபிரேய விவிலியத்தில் காணமுடியாது. இதனை எபிரேயர்கள் 'ஏற்றுக்கொள்ளப்படாத நூலாகவே' கருகின்றனர். கத்தோலிக்கருக்கு இந்த நூல் இணைத்திருமுறை நூல். ஞான நூல்கள் என்ற பிரிவில் இந்த நூல் இடம் பெறுகிறது. இந்த நூலை மன்னர் சாலமோனுக்கு அர்ப்பணித்தாலும், இதனை அந்த மன்னர்தான் எழுதினார் என்று நிரூபிப்பது கடினமாக இருக்கும். இன்றைய வாசகம் முதலாம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வரிகள் சாவு என்கின்ற மறைபொருளை விளக்க முயற்சிக்கின்றது. ஞானம் பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது என்ற தொனியில் இந்த அதிகாரம் அமைந்துள்ளது. வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் (29) 30
நன்றிப்பாடல்கள் அனேகமான வேளைகளில், செபங்களாக இருப்பதனைக் காணலாம் இதனை இந்த முப்பதாவது திருப்பாடலிலும் காணலாம். அத்தோடு நன்றிப்பாடல்களில் பழைய நிகழ்வுகளையும் நினைவூட்வதனையும் காணலாம். இறுதியாக, வேண்டுதல்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது எனவும், பாடலாசிரியர் தான் எக்காலமும் நன்றி செலுத்துவதாகவும் அமையும். இந்தப் பாடல், தேவை-மீட்பு-நன்றி என்ற தோரணையில் அமைந்துள்ளதனைக் காணலாம். தாவீதின் ஆலய அர்பணப் பாடல் என்று இத் திருப்பாடலின் தலைப்பு தொடங்குகிறது. ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
இண்டாம் வாசகம்: 2கொரிந்தியர் 8:7-15
2கொரிந்தியர் 8ம் அதிகாரம் யூதேயாவிலுள்ள ஏழை கிறிஸ்தவர்களின் நிலையை எடுத்துரைப்பதாகவும், அவர்களுக்கு நன்கொடை திரட்டுவதாகவும் உள்ளது. இந்த அதிகாரத்தின் ஆரம்ப வரிகளில் மசிதோனிய திருச்சபையின் நிலையை விளக்குகிறார், பவுல். மசிதோனிய திருச்சபை ஏழைகளுக்கு நன்கொடை கொடுப்பதில் ஆர்வமாய் இருக்கிறார்கள் என காட்டுகிறார் பவுல். இந்த பணியோடு தீத்துவிற்கு நல்ல தொடர்பு இருக்கிறது என்பதையும் பவுல் எழுதுகிறார். இதன் தொடர்ச்சியாக பவுல் கொரிந்திய திருச்சபையையும் ஏழைகளுக்க உதவி செய்யச் சொல்லி கேட்கிறார். வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நற்செய்தி: மாற்கு 5:2-43
இயேசு இரத்தபோக்குடைய பெண்மணியை குணப்படுத்தலும், யாயீரின் மகளை உயிர்ப்பித்தலுமான நிகழ்வுகள் மூன்று நற்செய்திகளிலும் காணப்படுகின்றன. விவிலிய ஆய்வாளர்களின் கருத்துப்படி, மாற்குதான் இந்த நிகழ்வுகளை எடுத்தியம்புவதில் முன்னோடியாக அல்லது மூலமாக இருந்திருக்க வேண்டும். இயேசுவின் குணப்படுத்தல் நிகழ்வும், மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் நிகழ்வும், இயேசு ஆண்டவருடைய வல்லமையைக் காட்டுகின்றன. இயேசுவிற்கு மரணத்தின் மீது ஆதிக்கம் இருந்தது என்பதைக் காட்டவே இந்த நிகழ்வுகள் முயற்சிக்கின்றன. நம் ஆண்டவர் நம்மை குணப்படுத்துவார், தேவையானது ஒன்றே, அது நம்பிக்கை. கவனமாக நற்செய்தி வரிகளுக்கு செவி கொடுப்போம்.
Fr. M. Jegankumar Coonghe, OMI