Thursday, 6 February 2025

இரங்கல் திருப்பலி


இரங்கல் திருப்பலி 



திருப்பலி முன்னுரை

 “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்." 

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாள் எமக்கும் எம் உறவுகள் அனைவருக்கும் மிகக் கவலையான நாள். ஏனெனில், கடந்த 53 வருடங்கள் எம்மோடு வாழ்ந்து, எம்மோடு தம் உணர்வுகளைப் பகிர்ந்து, எமக்காக தமது தியாகங்களை உயர்ந்த விலையாகக் கொடுத்து இன்று இறைவனின் பிரசன்னத்தில் இணைந்திருக்கும் அமரர்: ... அவர்களின் ஆன்ம இரங்கல் திருப்பலியில் இணைந்திருக்கின்றோம்.  

இறைவன் இவ்வுலகிற்கு ஓர் உயிரைக் கொடுத்தான், அந்த உயிரை எம் குடும்பத்திற்கு உறவாய் கொடுத்தான். 

அந்த உறவில் அன்பை விதைத்து, உயர்த்திக் கொடுத்து, உண்மையில் உம்மைக் காணவும் சொல்லிக்கொடுத்தான்.

இன்று அந்த உறவின் மறைவில் உடைந்துவிட்ட நாம், உயிர்ப்பின் உறைவிடத்திற்கே அவரை அனுப்பிவைக்கின்றோம். 

எம்மை விட்டு பிரிந்திருக்கும் அமரர், ... அவர்களை எம் அனைவருக்கும் நன்குதெரியும். இவர் எமக்குத் தந்த  வாழ்வின் அனைத்து செல்வங்களையும் பிரியாத, விலகாத, தவறிடாத உள்ளத்தின் உணர்வுகளோடு ஏற்றுக்கொண்டு, இவரை இறைவனிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். பிறப்பும் இறப்பும் இயற்கைக்கு அப்பால், எமது அறிவுக்கு அப்பால் சென்று இறைவனின் திட்டத்தில் இடம்பெறும் வாழ்வியல் நிகழ்வுகள் என்பதை ஏற்று, இவருக்காக, இவர் வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறி இப்பலியில் மன்றாடுவோம். நாம் தேடும் மகிழ்ச்சியும், வெற்றியும் உயர்வுகளும் மாத்திரம் அல்ல, நாம் இன்று கண்டிருக்கும் இவ் இழப்பும் எமக்கு வாழ்வை கற்றுத்தருகின்றன என்பதை எம்மை விட்டு மறைந்த சென்ற இவரும் உணர்த்தியிருக்கின்றார். 

எனவே, வாழ்வின் ஊற்றாகிய இறைவனிடம் இவரை ஒப்புக்கொடுத்து இவரின் நித்திய இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம். திருமுழுக்கின் வழியாக இவரை தன் சொந்த பிள்ளையாக்கிக் கொண்ட இறைவன், தமது இரக்கத்தினாலும், கருணையினாலும் இவரின் அனைத்து பிழைகள், பாவங்களை ஏற்று மன்னிப்பளித்து புனிதர்களின் சமூகத்தில் இடமளித்தருள வேண்டுமென்று இப்பலியில் இணைந்து மன்றாடுவோம். இவரது பிரிவாற்றாமையால் மனமுடைந்து துயறுரும் அனைவருக்கும் ஆறுதலையும், அரவணைக்கும் கரங்களையும் அளித்திட மன்றாடுவோம். 

(பெயர்)

இன்று உங்களை இறைவன் தேர்ந்துவிட்டார்; நீங்கள் சென்றுவாருங்கள்

நீங்கள் செல்லும் பாதையில், இறை ஒளியை காண்பீர்கள் என்பது எங்கள் நம்பிக்கை

எங்கள் நினைவுகளில் உங்களைப் போல் இனி யாரும் இடம்பிடிக்க இயலாது

எங்களுக்கு பாதைகள் காட்டினீர்கள், தொடர்ந்தும் அந்த பாதையில் நாம் பயணித்து உங்களுக்காக மன்றாடுவோம். 


இறைமக்கள் மன்றாட்டு

1. உயிர்ப்பின் ஊற்றே இறைவா! எமது திரு அவையின் மாண்பைக் காத்து, அதன் மேன்மைக்காகவும், புனிதத்திற்காகவும் உழைத்து மறைந்த அனைத்து பணியாளர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், உமது பேரின்ப ஒளியைக் காணச் செய்ய வேண்டுமென்று, ...

2. உயிர்ப்பின் ஊற்றே இறைவா! இன்று எம்மை விட்டு பிரிந்துசென்ற அமரர், ... அவருக்காக உருக்கமாக மன்றாடுகின்றோம். விதைகள் மடிந்து மரமாகி, கனிகளாக பலன் தருவதுபோல, இவர்வாழ்வும் இன்று விண்ணகத்தில் உருப்பெற்று உயிர்பெற்று அனைத்து புனிதர்களில் கூட்டத்தில் சேரவும் இறை மாட்ட்சியை காணவும் வரமருள வேண்டுமென்று, ...

3. உயிர்ப்பின் ஊற்றே இறைவா! இன்று இவரது பிரிவாற்றாமையால் துயறுரும் அனைவருக்கும் நீரே அரவணைக்கும் கரங்களாகவும், ஆறுதல் தரும் வார்த்தைகளாகவும் இருந்தருள வேண்டுமென்று, ...

4. உயிர்ப்பின் ஊற்றே இறைவா! இங்கு இவ் இரங்கல் திருப்பலியில் கூடியிருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். நம்பிக்கையோடு இருந்தால் என்றுமே சாகமட்டார் எனும் இயேசுவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பெற்று நாமும் அவரிலே எமது வாழ்வை நிலைத்து நிற்கச்செய்யவும், அவர் ஒருவரே எமது வாழ்வு என்று முழுமையாக நம்பவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

5. உயிர்ப்பின் ஊற்றே இறைவா! பல்வேறு காரணங்களால் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களையும் நினைந்து மன்றாடுகின்றோம். தமது அன்பினால் இவ்வுலகைப் படைத்த இறைவன், அதே அன்பினால் இவர்களை ஏற்றுக்கொண்டு விண்ணகத்தில் இடமளித்தருள வேண்டுமென்று, ... 


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...