Thursday, 13 February 2025

பிரியாவிடை செபம் புனித பேதுரு

 பிரியாவிடை செபம் புனித பேதுரு



அன்பும் தயாபரமும் நிறைந்த புனித பேதுருவே, அடியோர்கள் நாம் உமது பதியிலே அமர்ந்திருந்து, ஈர விழிகளுடன் காத்திருந்து, இறைவனின் அன்புக்காகவும், இரக்கத்திற்காகவும் உமது பரிந்துரை வேண்டி நிற்கின்றோம் புனிதரே. 

அடைக்கலம் தேடுகின்றோமே, ஆதரவு தேடுகின்றோமே, உறவுகள் தேடுகின்றோமே, உரிமையும் தேடுகின்றோமே. நாடு விட்டு நாடு வந்தோம், சொந்தங்கள் விட்டு தூர வந்தோம், உரிமையை தொலைத்துவிட்டு விலகியே வந்தோமே. வேறு வழி தெரியவில்லையே, வெறுமையோடும், விரித்த இரு கரங்களோடு, கண்களில் ஏக்கத்தோடு உள்ளத்தில் நம்பிக்கையோடு சரணடைகின்றோம் எமது காவலரே, புனித பேதுருவே. 

எமது பாதைகள் எப்போதையா இலகுவானதாய் இருந்தது; தோல்களில் எத்தனை சுமைகள், உள்ளத்தில் எத்தனை வடுக்கள், பாதையில் எத்தனை தடைகள், வயிற்றிலே எத்தனை பசிகள். இரவு பகலாக இத்தனை சுமைகளை தாங்கினோம், கடும் குளிரினால் அவதிகளை தாங்கினோம், அவமானங்களைத் தாங்கினோம், இல்லிடமின்றி, தூக்கமின்றி, எம் கண்களில் கண்ணீர் துடைக்க கரங்கள் இன்றி அனைத்தையும் தாங்கியே சென்றோமே. 

இயேசுவுக்காய் அனைத்தையும் துறந்து, மரணம் மட்டும் திரு அவையை காத்து வழிநடத்திய அன்பு மேய்ப்பரே! நீர் நல்ல தலைவராய், எல்லோரையும் அணைப்பவராய், தூய ஆவிக்கு செவிசாய்ப்பவராய் இருந்தீரே. நேரிய பாதையில் எம்மையும் எமது குடும்பங்களையும் இங்குள்ள அனைவரையும் வழிநடத்துவீர் எமது புனிதரே. 

எமது பிள்ளைகளின் வாழ்வைப் பாருமையா. ஞானத்தையும், அறிவையும், இறை அழைத்தலையும் கொடுத்து, உண்மையில் இறைவனை அறிந்துகொண்டு, உள்ளத்தில் அவரை அன்புசெய்து, தமது செயலில் சாட்சியம்தேடிடும் நல்ல விவேகத்தையும் அளித்திட வேண்டிநிற்கின்றோம். 

நாம் பிறந்த எமது நாட்டை ஒப்புக்கொடுக்கின்றோம். இழந்த எம் உறவுகளை திரும்பிப் பார்க்கின்றோம், உடைந்த எம் வீடுகளை திரும்பிப் பார்க்கின்றோம், மறந்த எம் மகிழ்ச்சியையும் திரும்பிப் பார்க்கின்றோம். பொருளாதார கெடுபிடியால், இயற்கை அணர்த்தத்தால், அரசியல் பிறழ்வுகளால் அவதியுறும் எமது மக்கள், நிரந்தர மகிழ்ச்சியை நாள்தோறும் சுவைத்திட அருள்புரியும் எமது புனிதரே.

இறுதியாக, புனித பேதுருவே, உமது சந்நிதானம் விட்டு பிரிய இருப்பதால், உம்மை பணிந்து வணங்குகின்றோம்.  எம்மை எல்லாம் இயேசுவின் பாதம் கொண்டு சேர்ப்பவரே. பல திசைகளிலும் இருந்து பாரங்களோடும் தேவைகளோடும் வந்திருக்கும் உமது அடியவர்கள நாம் உம்மிடம் இரந்து கேட்கும் எமது விண்ணப்பங்களுக்கு செவிசாயும், எமக்காக பரிந்து பேசும், விண்ணக அருளை பொழிந்தருளும். நவின உலகில் நாம் தடுமாறாமலும், குடும்ப உறவில் நிலைகுலையாமலும், தொழில் துறைகளில் எம்மை தொலைக்காமலும், இருக்க வேண்டுகின்றோம்.   'உன் பெயர் பேதுரு, இந்த பாறையின் மேல் என் திரு அவையைக் கட்டுவேன்' என்று விண்ணகத்தின் திறவுகோளை பெற்ற எம் புனிதரே. இம்மண்ணகத்தில் வாழும் எமக்கு இயேசுவின் பணியைக் கற்றுத்தாரும், இயேசுவின் மனநிலையைக் கற்றுத்தாரும், இயேசுவின் வாஞ்சையைக் கற்றுத்தாரும், இயேசுவின் விருப்பங்கள் அனைத்தையும் எமக்குக் கற்றுத்தாரும். நாளும் நாமும் உமது அன்பிலும் வல்லமையிலும் வளர எமக்காய் பரிந்து பேவீர் புனிதரே, ஆமென். 


No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...