நன்றிச் செபம்
அன்பும் பரிவிரக்கமும் உள்ள இறைவா!
படைப்புக்களை நீர் உமது ஞானத்தினாலும் வார்த்தையினாலும் உண்டாக்கி
அவற்றை நீர் நல்லது எனக் கண்டுகொண்டீர், அதை வளப்படுத்த மனிதனை
உண்டாக்கினீர். இன்று அதிலே நாம் உமது வல்லமையையும் அருளையும்
கண்டு உம்மை போற்றுகின்றோம், உமக்கு நன்றி சொல்கின்றோம்.
நீர் அன்புகொண்ட மனித இனத்தை உமது இரத்தத்தால் மீட்டு
நாமும் புனித வாழ்வின் வழியை கண்டுகொள்ளச் செய்தீர்.
இதே மகிமையையும் வல்லமையையும் நீர் எமக்கு அளித்த
எமது ஆற்றல்கள் திறமைகளில் உணருகின்றோம்.
இந்த ஆற்றல்களும் திறமைகளும்
எமது கடின உழைப்பிலும் தியாகத்திலும் அதனால் கிடைத்த வெற்றியிலும் உணர்கின்றோம்.
இந்த வெற்றிக்காக எம்மோடு நீர் செயலாற்றியதற்காக நன்றி கூறுகின்றோம்.
இந்த நன்றியின் உணர்வுகளோடு
எமது பெற்றோரை, ஆசான்களை, நண்பர்களை, உதவி செய்தவர்களை
இன்னும் பல வழிகளில் பாசத்தோடும் அன்போடும்
நெறிப்படுத்தியவர்களை எமக்கு பணிபுரிந்தவர்களை
விசேட விதமாக எமது வெற்றியின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளும்
ஆயர்களை குருக்களை நினைக்கின்றோம்.
இறைவா! இந்த நன்றியின் நேரத்திலே, எமது வாழ்வை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
நாம் கற்றவற்றை, அறிந்தவற்றை முழுமனதுடனே அறிவிக்கும் பணியை இக்காலத்தின்
நற்செய்தி அறிவிப்பு பணியாக மாற்றியருளும். ஆழம் காண முடியாத அந்த முத்தான உமது
வார்த்தை எமது வாழ்வாகட்டும். உமது ஆவியின் வரங்களையும், கொடைகளையும்
நிரம்பப் பெற்று நேர்வழி நடக்க துணைபுரியும். இவற்றை எல்லாம்
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் திருமகன் கிறீஸ்து
வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
No comments:
Post a Comment