பொதுக்காலம் நான்காம் ஞாயிறு வாரம்
ஞாயிறு இறைவார்த்தைகளும் மற்றும் விழாவுக்கான இறைவார்த்தைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணைந்திருக்கும் எம் இனிய உறவுகளே! பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாரமாகிய இன்று நாம் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவைக் கொண்டாடுகின்றோம்.
தனது முதல் தலைப்பேறான குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஓர் அழகிய விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அதிலே, இயேசுவை அர்ப்பணிக்க முன்வரும் அன்னை மரியும் யோசேப்பும் அச் சட்டங்களை நிறைவேற்றுவதில் பிரமாணிக்கமாக இருந்தனர் என்பதையும் குறித்துக் காட்டுகின்றது. அன்னை மரியா இயேசுவை பெற்றெடுத்த பின், யூத சட்டத்திற்கமைய, தன்னையும் தூய்மைப்படுத்திக் கொள்ளும் நாளாகவும் இன்றைய நாள் அமைகின்றது.
நாம் அமைத்துக்கொண்ட வாழ்விலே இன்றைய நாள் ஓர் அழகிய ஆரம்பத்தைக் குறித்துக்காட்டுகின்றது. ஒரு குழந்தைக்கான அனைத்துத் தியாகங்களும் பெற்றோரின் அர்ப்பணமே. அவர்களை இறை ஞானத்திலும், இவ்வுலகோடு போட்டியிட தேவையான அறிவிலும், பல சவால்களைக் கடந்து, போராட்டங்களில் வென்று, வெற்றியில் தொடர்ந்தும் செல்ல விவேகத்திலும் வளர்க்கவேண்டிய கடமை பெற்றோரின் பொறுப்பு என்பதையும் இன்றைய நாளும் வாசகங்களும் எமக்கு நினைவூட்டுகின்றன.
இன்றைய உலகில் வாழும் எமக்கு ஆசீர்வாதங்கள் அதிகமாக தேவைப்படுகின்றன. பாவங்களாலும், பரிகாரம் இன்மையாலும், எமது இறுகிய மனப்பான்மையாலும், எதிர்மறை எண்ணங்களால் குறைசொல்லும் பழக்கத்தாலும் நாமும் இன்னும் இறைவனை இழந்துகொண்டு தான் இருக்கின்றோம். திருக்குடும்பத்தின் இவ் அர்ப்பணம், இவ்வுலகத்திற்கே தேடித்தந்த அருளாக மாறியது. நாமும் இவ்வுலகத்திற்காக அதன் தேவைக்காக வாழவும், எம்மை அர்ப்பணிக்கவும் இன்றைய பலியில் மன்றாடுவோம். குறிப்பாக, இவ்வுலகத்தின் அமைதிக்காகவும், யுத்தங்கள் இன்றி நிம்மதியான வாழ்வுக்காகவும் மன்றாடி இப்பலியில் இணைந்திடுவோம்.
வருகைப் பல்லவி
திபா 105:47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும். அதனால் நாங்கள் உமது திருப்பெயரை அறிக்கையிடுவோம்; உம்மைப் புகழ்வதில் மாட்சியுறுவோம்.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் முழு மனதுடன் உம்மை வழிபட வேண்டுகின்றோம்: அவ்வாறே எல்லா மக்களையும் நேரிய உள்ளத்துடன் அன்பு செய்யவும் அருள்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 4-5.17-19
எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்’.
நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.
அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15,17 (பல்லவி: 15)
பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.
1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்;
ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்;
எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். -பல்லவி
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்;
கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்;
ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4a என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;
ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.
6ab பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்;
தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி
15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்;
உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது.
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;
இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையானவைதான். இருப்பினும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31 - 13: 13
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும் விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம்
நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம்.
ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.
ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரை குறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனான போது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையானவைதான். இருப்பினும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 4-13
சகோதரர் சகோதரிகளே,
அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப் படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம்.
ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.
ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரை குறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனான போது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.
ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 4: 18b-19
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
எலியா, எலிசா போல் இயேசு யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-30
இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.
ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப் படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.
தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இவரே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்று கூறி இயேசுவை இவ்வுலகின் மாட்சிக்காக அர்ப்பணித்தது போல, அவரிடம் முழுமையான நம்பிக்கைக் கொண்டு எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும், எமது மறை மாநில ஆயர், .......... அவர்களுக்காகவும் மன்றாடுவோம். இவ்வுலக வாழ்வுக்காக, நீதிக்காக, உண்மைக்காக உழைக்கும் இவர்கள் இயேசுவின் ஞானத்தையும், அன்பையும் அவர் தரும் அனைத்துப் பெறுபேறுகளையும் நிலைநாட்டும் கருவிகளாக திகழ வரமருள வேண்டுமென்று, ...
2. இயேசுவின் பெயரால் அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகள் இவ்வுலகின் விடியலாக மாறுவார்களாக. புதியன தேடி, புதுமைகள் செய்து, ஒவ்வொரு மாற்றத்திற்காக ஏங்கும் இவர்கள், உலகின் புது ஒளியாக மாறுவார்களாக. இயேசுவை இதயத்தில் தாங்கி, தமது நன்மைகளாலும் நல் ஒழுக்கங்களாலும் அணிசேர்க்க வேண்டுமென்று, ...
3. இறைவா! இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்த விழாவை கொண்டாடும் நாங்கள், திருமுழுக்கின் வழியாக எமது அர்ப்பணத்தை நினைவில்கொள்கின்றோம். நாங்கள் உமக்கு உரியவர்கள் என்பதை எப்பொழுதும் நினைவுகூர்ந்து, உமது வார்த்தையின்படி எங்கள் வாழ்வு மிளிர அருள்புரிய வேண்டுமென்று, ...
4. உலகின் பல்வேறு கோணங்களிலே, விபத்துக்களால், தீயினால், யுத்தத்தால் மேலும் அணர்த்தங்களால் அவதியுறும் மக்களை கண்ணோக்கி, இந்த அர்ப்பண விழாவில் இம்மக்கள் அனைவரும் எதிர்நோக்கை தொலைத்திடாமல் இறை நம்பிக்கையிலும், பராமரிப்பிலும் வாழ்ந்திட அருள்ப்புரிய வேண்டுமென்று, ...
5. குடும்பங்களில் அன்பை தொலைத்திடாமல், பாசத்தை அணைத்திடாமல், நம்பிக்கையில் உயர்ந்து நிற்கும் கோபுரமாக வாழும் அனைத்து பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளில் என்றும் நிறை ஆசீர் கிடைத்திடவும், அனைத்து சந்தர்ப்பத்திலும் இறைவனுக்கு சான்றுபகரும் கருவிகளாகிட வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்கள் பணிகளைக் காணிக்கையாக உமது பீடத்துக்குக் கொண்டுவருகின்றோம்; இவற்றைக் கனிவுடன் ஏற்று எங்களது மீட்பின் அருளடையாளமாக மாற்றுவீராக. எங்கள்.
காண். திபா 30:17-18
திருவிருந்துப் பல்லவி மத் 5:3,5
உமது முகத்தின் ஒளி உம் அடியார் மீது ஒளிர்வதாக! உமது இரக்கத்தால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூவி அழைத்தேன்.
அல்லது
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரிய து ; கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடையால் வலுவூட்டப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் முடிவில்லா மீட்பின் இந்த உதவியால் உண்மையான நம்பிக்கை என்றும் வளர்ச்சியுறச் செய்வீராக. எ ங்கள்.
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா
நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4
கடவுளாகிய ஆண்டவர் கூறுவது:
“இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment