ஓ, அன்னையே! அமல உற்பவியே! லூர்த்து நகர் நாயகியே!
இக்கட்டான எமது வாழ்க்கைப் பயணத்தில் இமைப்பொழுதும் எமை விட்டு விலகாமல் நம்பிக்கையும் பலமுமாய் எம்மோடு கூட இருந்து எம்மை வழி நடத்திவரும் தேவதாயே. கழுமரத்தின் பாடுகளால் வேதனையுற்று துடி துடித்த உமது மகனாகிய எம் ஆண்டவர் இயேசுவின் துன்பக் கணவாயில் தளராத விசுவாசத்தோடு உறுதியாய் நின்ற உம்மிடம் தாயே எமது உலகிற்காகவும் உலக மக்களிற்காகவும் வேண்டி நிற்கின்றோம்.
அகில உலகிற்கு அன்னையான நீரே உம் பிள்ளைகளின் தேவைகளை நன்கறிவீர். கொரோனா எனும் தொற்று நோயால் உலகமே போராடும் இவ்வேளையில் கண்ணின் கருமணி போல எமைக் காத்து எமை வழிநடாத்தி நம்பிக்கையில் திடப்படுத்திய அமல அன்னையே! இந்நோயிலிருந்தும் தாங்க முடியாத வேதனையிலிருந்தும் எமை மீட்டு இழந்துபோன மகிழ்ச்சியையும், வறட்சி நீக்கி உணவையும், உறங்க உறைவிடமும் தந்து எப்போதும் எங்கணமும் எமக்காக உம் திருமகன் இயேசுவிடம் பரிந்து பேசும் அம்மா!
ஓ... இறைவனின் தாயே! லூர்த்து நகர் நாயகியே! உம்மிடம் அடைக்கலம் தேடி வரும் எவரும் கைவிடப்படுவதில்லை என்ற நம்பிக்கையில் உம் திருமகனை ஏந்திய கரங்களால் எம்மையும் தாங்கும் அம்மா. தாயே, நாம் சிறப்பாகக் கொண்டாட இருக்கும் எம் திருத்தல திருவிழாவினூடாக உம்மையே நாடி வரும் மக்களுக்கு அள்ள அள்ளக் குறையாத உம் வரங்களை கொடுத்து அதே அருளால் நிறைத்தருளும் எம் தேவ தாயே, ஆமென்.
No comments:
Post a Comment