Tuesday, 11 February 2025

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு வாரம் - 16/02/2025

 பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை

இயேசுவில் நம்பிக்கை நிறைந்த திருப்பயணிகளாக ஒரு புனித பாதையாம் இப்புதிய ஜுபிலி ஆண்டில், பயணிக்கும் என் அன்பார்ந்த உறவுகளே! பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு வாரத்தில் இன்று நாம் கால்பதிக்கின்றோம். எமது எண்ணங்களும், எமது செயல்களும் இயேசுவில் புதுப்பிக்கப்பெற்று நிறைவுபெற மன்றாடுவோம். 

இன்றைய இறைவார்த்தைகள், படைத்த இறைவனில் முழு நம்பிக்கைக் கொண்டு வாழ அழைக்கின்றது. அதாவது, நம்பிக்கையினால் மனிதர் வாழ்வு அடைவர் எனவும், அந்நம்பிக்கை உயிர்த்த இயேசுவில் நிறைவு காணவேண்டும் எனவும் எம்மை அழைத்து நிற்கின்றன. நற்செய்தியில், அழிந்துபோகும் வாழ்வுக்காக அல்ல மாறாக அழியாத ஆன்மாவுக்காக உழைக்கும் நற் பெறுபேறுகளை ஆர் அழகிய பாடமாக, துன்புறும் இவ்வுலகிற்கான முன் உதாரணமாக இயேசு எடுத்தியம்புகின்றார். 

இன்று நாம் வாழும் இவ்வுலகு, நல்ல மனிதர்களை நசுக்கியும், நல்ல விழுமியங்களை போதிக்க மறுத்தும், உண்மைக்காக நீதிக்காக போராடும் நிலையை எதிர்த்தும், பண்புகள் இல்லாத, பாசமும் அன்பும் இரக்கமும் இல்லா இதயங்களை உருவாக்கியும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றது. இவைகள் இந்நவின காலத்துச் சவால்களே! ஆனால், இத்துன்பங்களை, எதிர்ப்புக்களை, அவமானங்களை தாங்கி, போராடும் நல் உள்ளங்களுக்காக குரல்கொடுக்கும் இயேசுவின் மேன்மையான வார்த்தைகள் எமக்கு ஆறுதலைத் தருகின்றது. 

எனவே, எமது இதயத்தில் விதைக்கப்படும் இயேசுவின் நல்ல விதைகளை இவ்வுலகிற்கு கொண்டுசெல்வோம். மடிந்து தான் பலன் தரும் எனில், நாம் இயேசுவிற்காக இறந்து, வாழ்ந்துகாட்ட் வேண்டிய அருளை, இப்பலி வழியாக இரஞ்சி மன்றாடுவோம். மேலும், தங்களை விதைகளாக்கி பிறரின் வாழ்வுக்காக நாளும் பொழுதும் தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து நல் உள்ளங்களையும் நினைந்து அவர்களுக்காகவும் இப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.  


வருகைப் பல்லவி - 'காண். திபா 30:3-4. 

ஆண்டவரே, நீர் என்னைக் காப்பாற்றுபவராகவும் புகலிடமாகவும் இரும்; அதனால் நீர் என்னை மீட்டீர்; ஏனெனில் நீர் என் காறையாகவும் அடைக்கலமாகவும் உள்ளீர்; உமது பெயரின் பொருட்டு நீர் எனக்குத் தலைவராகவும் இருப்பீர்; எனக்கு உணவு அளிப்பீர்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உண்மையும் நேர்மையும் உள்ள நெஞ்சங்களில் நீர் குடி கொள்வதாக உறுதி அளித்துள்ளீரே; எங்கள் உள்ளங்களில் நீர் தங்குவதற்கு ஏற்றவாறு நாங்கள் வாழ எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-8

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்; பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர்.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 1: 1-2. 3. 4-6 (பல்லவி: 40: 4a)

பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.


1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;

பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;

அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி


3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்;

பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;

தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி


4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;

அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.

6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;

பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீணானதே.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 12,16-20

சகோதரர் சகோதரிகளே,

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?

ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.

ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 6: 23a

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17, 20-26

அக்காலத்தில்

இயேசு திருத்தூதர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந் திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.

இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுது கொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

மானிட மகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று

3. பல்வேறு துன்பங்களால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. இன்றைய பலியை ஒப்புக்கொடுப்போருக்காக மன்றாடுவோம்

இன்றைய நாள் திருப்பலியை சிறப்பிக்கும்  இறைமக்கள் மற்றும்  அனைவரும் இறை இயேசுவின் ஆசீரையும், அருளையும் வல்லமையையும் நிறைவாக அனுபவிப்பார்களாக. தங்களது வாழ்வில் கிடைக்கும் அனைத்து செல்வங்களும் இறைவன் கொடுத்த வரம் என நம்பவும், உறவோடும், உரிமையோடும் உம்மை அநுதினம் நேசிக்கவும் அன்பு செய்யவும் உமது அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இந்தக் காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அது நிலையான பயன் விளைவிப்பதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி - காண். திபா 77:29-30 

அவர்கள் உண்டு முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; ஆண்டவர் அவர்கள் விரும்பியவற்றையே அவர்களுக்கு அளித்தார்; அவர்களது விருப்பம் வீணாகவில்லை.


அல்லது - யோவா 3:16 

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இனிய விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உண்மை வாழ்வை அளிக்கும் உணவின் மீது நாங்கள் என்றும் ஆவல் கொள்ளச் செய்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...