பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! ஒவ்வொரு பொழுதும் இறைவனின் நிறை ஆசீரே என்பதை நினைந்து இறைவனுக்கு நன்றிகூறி இப்புதிய நாளையும், வாரத்தையும் தொடங்குகின்றோம். வழிபாட்டு வாரமாகிய, பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு வாரத்த்திற்க்குள் இன்று நுழைகின்றோம்.
இவ்வுலகத்தின் மெய்யழகை கண்களால் கண்டு வியந்துகொள்ளவும், உணர்வுகளுக்கு இணையான இசையைக் கேட்டு விழித்துக் கொள்ளவும், இவ்வுலகத்தின் வியத்தைகு தரும் வல்லமையான படைப்பை தொட்டுணர்ந்துகொள்ளவும், இவ்வனைத்திற்கும் மேலானவர் இறைவன் என அவர் மேன்மையை புரிந்துகொள்ளவும், உயர்வான படைப்பாக எம்மைப் படைத்து இவ்வுலகிற்கு கையளித்த இறைவனை நினைக்க்கும் போதெல்லாம் மனிதாகிய எமது படைப்பும் எமக்கு ஓர் அதிசயமே. இவரே எமை தேர்ந்தெடுத்து, அர்ச்சித்து, அவரின் சொந்தமாக எமை மாற்றியுள்ளார். இதைத் தான் இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு நினைவூட்டுகின்றன.
எனவே எமக்குள் இருக்கும் அனைத்து அதிசயங்களையும் ஏற்றுக்கொள்வோம். இறைவன் கொடுத்த இவ் ஊண் உடலுக்காக நன்றிசொல்லுவோம். இவ் அழகிய அதிசயத்தின் வழியாக இறைவனை அறிந்து, அவரின் அன்பை உணர்ந்து, வெளிப்படுத்தக்கூடிய அனைத்து வழிமுறைகளை கற்றுக்கொள்வோம். அவரின் உயிர் மூச்சாக எமக்குள் செயலாற்றும் அவரின் ஆன்மாவை கறையின்றி காத்து அவரோடு ஒன்றிக்கும் நாள்வரைக்கும் புனிதமாக வாழ இப் பலி வழியாக இறைவரம் கேட்டு மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
'காண். திபா 95:1,6. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகம் அனைத்துமே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆற்றலும் எழிலும் அவர் திருமுன் உள்ளன; மாட்சியும் புகழ்ச்சியும் அவரது திருத்தலத்தில் உள்ளன.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் செயல்களை உமது திருவுளத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தியருளும்; இவ்வாறு உம் அன்புத் திருமகனின் பெயரால் நாங்கள் மிகுதியான நற்செயல்கள் புரிந்திடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
எஸ்ரா கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார். மக்களும் அதைப் புரிந்துகொண்டனர்.
இறைவாக்கினர் நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 2-4a, 5-6, 8-10
அந்நாள்களில்
ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.
திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின் மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.
மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர். ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6: 63b)
பல்லவி: ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;
அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை;
அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி
9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;
அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி
14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!
என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;
என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-30
சகோதரர் சகோதரிகளே,
உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.
உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. “நான் கை அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? “நான் கண் அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?
உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாய் இருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே. கண் கையைப் பார்த்து, ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்றோ தலை கால்களைப் பார்த்து, ‘நீங்கள் எனக்குத் தேவையில்லை’ என்றோ சொல்ல முடியாது.
மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வோர் உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தார். ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்லசெயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14,27
சகோதரர் சகோதரிகளே,
உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 4: 18-19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-4; 4: 14-21
மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.
அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
அலகையினால் சோதிக்கப்பட்ட பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. அன்பின் ஆண்டவரே! எமது திரு அவைக்காக உம்மிடம் வருகின்றோம். உமது வார்த்தையை உடைத்துக் கொடுக்கவும், உமது பிரசன்னத்தை எம்மில் உணர்த்தவும், செப வாழ்வு வழியாகவும், திருவருட்சாதனங்கள் வழியாகவும், எம்மை புனிதப்படுத்தவும் உமது திரு நிலைப்பணியாளர்கள் தொடர்ந்தும் பணியாற்ற அவர்களுக்கு பலமளித்திட வேண்டுமென்று, ...
2. அன்பின் ஆண்டவரே! இன்றைய உமது அழகிய வார்த்தை எமது திரு அவைக்கு தேவையான புதிய அர்த்தத்தை வழங்குவதாக. மக்கள் அனைவரின் இதயங்களில் இவ்வார்த்தை ஊடுறுவி, அன்பையும் இறை நம்பிக்கையையும் நிறைவாக வழங்க வேண்டுமென்று, ...
3. அன்பின் ஆண்டவரே! நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று, ...
4. துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று, ...
5. அன்பின் ஆண்டவரே! நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம் என்பதன் அர்த்தத்தை உணர்ந்துகொண்டு, இவ்வுலகில் வாழும் அழைத்து மக்களும், யுத்தங்கள் அற்ற, பிரிவினைகள் அற்ற, வேறுபாடுகள் அற்ற ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்க்கி புதுமைகாண அருள் புரிந்திட வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவற்றைப் புனிதப்படுத்தி, இவை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்புரிவீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி காண். திபா 33:6
ஆண்டவரை அணுகிச் செல்லுங்கள், அவரது ஒளியைப் பெறுவீர்கள்; உங்கள் முகங்கள் அவமானத்திற்கு உள்ளாகாது.
அல்லது
யோவா 8:12 உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புத்துயிர் அளிக்கும் உமது அருளைப் பெற்றுள்ள நாங்கள் உமது கொடையை முன்னிட்டு என்றும் பெருமை கொள்வோமாக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment