Thursday, 9 January 2025

பொங்கல் விழா 14/01/2025

 பொங்கல் விழா

நிலத்தின் விளைச்சலைச் சேகரித்த பிறகு


திருப்பலி முன்னுரை:-

என் அன்புள்ள உறவுகளே! இன்று நாம் உலக தமிழ் உறவுகளோடும் உணர்வுகளோடும் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றோம்.  நிலத்தை உழுது, விதைகளை விதைத்து, அதை அறுவடை செய்து அதன் விளைச்சலை பெருமகிழ்வோடு இவ்வுலகிற்கு கொடுக்கும் ஒவ்வொரு உழைப்பாளியும் இறைவனை நினைந்து நன்றி சொல்லும் நாள் இது. ஆகவே தான் இன்றைய நாளை உழவர் தினம் என்றும் அழைக்கின்றோம். நாமும் இறைவனுக்கு நன்றி சொல்லி,  இயற்கையையும் எமது உழைப்பாளியையும் நம்பி எமது புதிய பயணத்தை தொடங்குகின்றோம். நாம் வாழ்வதும், இயங்குவதும், இருப்பதும் அவராலே எனும் உண்மை இன்றைய நாளின் பொருளிலே தெளிவாகின்றது. எம்மை வாழ்விக்கும் இறைவனை இவ்வருடத்தின் தொடக்கத்திலே நினைந்து நன்றிசொல்வது எமது கடமையும் தகுதியுமாகின்றது. 

இயற்கை தந்த விளைச்சலின் முதற்கனியை இறைவனுக்குக் கொடுத்து நன்றி சொல்கின்றோம். நாமும் இறைவனின் முதற்கனிகளே! நாம் எம்மை அர்ப்பணிக்கும் போது, எமது நன்றி உணர்வை இறைவனுக்கும், நாம் பயிரிடும் போது எமக்கு நிறைவாகவே ஈந்தளிக்கும் இயற்கைக்கும், எமக்காக பாடுபடும் எமது எமது உழைப்பாலிகளுக்கும் சமர்ப்பிப்போம். இன்றைய திருப்பலியில் இவர்களுக்காக இணைந்து மன்றாடுவோம். அதேவேளை, இறைவன் இன்னும் எங்களை ஆசீர்வதிக்கவும், எமது வாழ்வுக்கான ஆசீரை நிறைவாக தரவும் மன்றாடுவோம். பசியினால் வாடும் மாந்தரை நினைத்து அவர்களிலும் இறை செயல் மிளிர தொடர்ந்தும் பலியிலே மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

திபா 66:7நானிலம் தன் பலனை ஈந்தது: கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக.


திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, நல்ல தந்தையே, உமது பராமரிப்பினால் மனிதரிடம் நிலத்தை ஒப்படைத்தீரே; நாங்கள் நிலத்திலிருந்து பெற்ற விளைச்சல் வழியாக எங்கள் வாழ்வைப் பேணிக் காக்கச் செய்தருளும். உம்முடைய புகழ்ச்சிக்காகவும் அனைவருடைய நலனுக்காகவும் உமது உதவியால் நாங்கள் என்றும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அருள்வீராக. உம்மோடு.


அல்லது

ஆண்டவரே, மனிதருக்கு நன்மை பயக்கும் நிலத்தின் விளைச்சலுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; இவ்வுலகில் உமது மேலான பராமரிப்பினால் நீர் எங்களுக்குப் போது மான விளைச்சலை அளித்தது போல, எங்கள் உள்ளமாகிய நிலத்தில் நீதி தளிர்விட்டு, அன்பின் நற்கனிகளை விளையச் செய்வீராக. உம்மோடு.


இறைவார்த்தை 

பழைய ஏற்பாட்டிலிருந்து - 1

ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7-18

அந்நாள்களில்

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.

நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும்போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும்போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலை நிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலை நிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.

எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


                                                        பழைய ஏற்பாட்டிலிருந்து - 2

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 21-24, 26-27

நிலமே நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார். காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்; ஏனெனில் பாலை நிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன; மரங்கள் கனி தருகின்றன; அத்தி மரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன.

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்; ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்; முன் போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்; ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும் என்னையன்றி வேறு எவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


புதிய ஏற்பாட்டிலிருந்து - 1

கடவுளே விளையச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10

சகோதரர் சகோதரிகளே,

நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன் மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

                                                                புதிய ஏற்பாட்டிலிருந்து - 2

செல்வர்களாய் இருப்பவர்கள் நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைத்தலாகாது.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 6-11, 17-19

அன்பிற்குரியவரே,

இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்தது இல்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.

செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள் மேல் வருவித்துக்கொள்கிறார்கள்.

கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு.

இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கு என்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்து வைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல்கள் - 1

திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 6)

பல்லவி: நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

அல்லது: (3a): கடவுளே! மக்களினத்தார் அனைவரும் உம்மைப் போற்றுவர்.


1 கடவுளே! எம் மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

உம் திருமுக ஒளியை எம் மீது வீசுவீராக!

2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;

பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். -பல்லவி


4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!

ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்;

உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி


6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள்,

நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!

உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி


                                                            பதிலுரைப் பாடல்கள் - 2

திபா 126: 2b-3. 4-5. 6 (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.


2b "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்”

என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;

அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி


4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல,

எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

} 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி


6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்;

அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 126: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். அல்லேலூயா.


நற்செய்தி இறைவார்த்தை - 1

மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 15-21

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு” எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

                                                            நற்செய்தி இறைவார்த்தை - 2

காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினார்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில்

இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்த போது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்த பொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.  பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1) எம்மைப் படைத்து பராமரிக்கும் பரம்பொருளே! இறைவா! நீர் எங்களுக்கு கொடையாக தந்த இயற்கைக்காகவும், அதன் பலன்களுக்காகவும் நன்றி கூறுகிறோம். இந்த வளமிக்க இயற்கையை நாங்கள் பாதுகாத்து எம்பின்வரும் சந்ததியினரும் அதன் பலன்களை பெறும் வண்ணம் வாழ்ந்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) சேற்றில் பதித்து, வெயில் மழை பாராமல் எப்போதும் விளைநிலங்களில் பணிபுரியும் எமது விவசாய நண்பர்களுக்காக மன்றாடுகிறோம். தங்களின் உடல் உழைப்பின் பலனை நிறைவாகப் பெற்று, பஞ்சம், பசி, கடன், நோய் போன்ற எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெற்று நிறைவோடு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) விவசாய வளமிக்க எம் நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தினருக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுயநலத்தை மறந்து ஏழை, எளிய விவசாய பெருமக்களின் வாழ்வு, வளம் பெற விவசாய தொழில் சிறக்க சட்ட திட்டங்களை இயற்றி செயல்படுத்தும் மனதிடனை அவர்களுக்கு அளித்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) இயற்கை சீற்றம், பொய்த்த பருவமழை, விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உலகமயமான சந்தை பொருளாதாரம் போன்ற தீய சக்திகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகள் உமது அருள் துணையோடு, நியாயமான தொழில் முறைகளை பின்பற்றி உழைக்கவும், அவர்கள் வாழ்வு ஏற்றம் காணவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5) இந்த பொங்கல் விழா வழிபாட்டில் கலந்து கொள்ளும் நாங்கள் அனைவரும் விவசாய மக்களையும், அவர்களின் உழைப்பையும் மதித்து, சுயநல உணர்வோடு உணவு பொருட்களை பதுக்காமல், நல்மனத்தோடு அவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனத்தை எமக்கு தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


நம்பிக்கையாளரின் மன்றாட்டு: நன்றி: அருள்வாக்கு 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, வளமான நிலத்தில் விளைந்த இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; நிலத்தின் விளைச்சலை இவ்வுலகப் பயன்பாட்டுக்காக வழங்கியது போல் எங்கள் உள்ளங்கள் விண்ணக நலன்களால் வளம் பெறச் செய்வீராக. எங்கள். ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை V (பக். 540).


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 103:13-15

ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்; மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலத்தின் கனிகளில் இருந்து சேகரித்தவற்றை உம் திருமுன் கொண்டு வந்து நலம் தரும் இம்மறைநிகழ்வில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; அதனால் எங்களில் செயல்படும் இம்மறைபொருளின் ஆற்றலால் இன்னும் மிகுதியாக நலன்களைப் பெற்றுக்கொள்ளும் தகுதி பெற அருள்புரிவீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...