தைப் பொங்கல் திருப்பலி மறையுரை
எனது மறையுரைக்கு முன் நான் சொல்லும் அழகிய கவிதை
இறைவா! படைப்புக்களை எமக்கு தந்தவரே!
நாம் பார்க்கவும், சுவைக்கவும், வளரவும் வாழவும் இயற்கையை தந்தவரே!
நாம் இன்று நன்றி சொல்லும் அழகிய தருணம் இது.
உமது படைப்புக்கள் அனைத்தின் வழியாக உமது அன்பை நினைத்து நன்றி சொல்கின்றோம்
உண்பதற்கு ஒரு பிடி உணவை தந்து எம்மை உலகம் வாழ வழிதந்தீரே
உமக்கு நாம் இன்று நன்றி சொல்கிறோம்
சேற்றில் யாரோ வைத்த கால், எவரோ வியர்வையில் நனைந்த விளைச்சல்
பல மணி நேரங்கள் களவுகொண்டு, பல இரவு-பகல் நாட்கள் தூக்கம் மறந்து
பாசத்தில், அன்பில் படைத்த உணவு இன்று எமக்கு ஒரு நேர பசிக்கு விருந்தாகின்றதே
இறைவா உமக்கு எமது நன்றிகள், விவசாயிகள் அனைவருக்கும் எமது நன்றிகள், இவ் இயற்கைக்கும், இம்மண்ணிற்கும் எமது நன்றிகள்.
இன்று நாம் ஓர் அழகிய விழாவைக் கொண்டாடுகின்றோம். அது தான் தைப் பொங்கள் விழா 'உழவர் திருநாள்' என்றும் அழைக்கலம். எனவே உங்களுக்கு எனது தை திரு நாள் வாழ்த்துக்கள்.
நாம் படைப்புக்களைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்கின்றோம். எம்மையும் இறைவனையும் எவ்வளவிற்கு பிரிக்க முடியாதோ அவ்வளவிற்கு எம்மையும் இவ் இயற்கையையும் பிரிக்க முடியாது என்பது உண்மை. அதேவேளை, எமது வாழ்விற்காக, எமது வாழ்வாதாரத்திற்காக உழைப்பவர்களையும் மறந்துவிட முடியாது. எனவே தான் நாம் இந்நாளை நன்றியோடு நினைத்து பலி ஒப்புக்கொடுத்து இறை புகழ் பாடுகின்றோம்.
பலர் இவ்விழாவை விமர்சிக்கலாம். இது இந்துக்களின் விழா தானே, கிறிஸ்தவர்கள் ஏன் இதைக் கொண்டாடவேண்டும்? என்னால் கூறக்கூடிய பதில், இது தமிழர்களின் விழா, இது எமது உணர்வுகளோடு சேர்ந்து செல்லும் விழா. எனவே இதை இந்துக்கள் மட்டும் அல்ல இவ்விழாவை யாரும் கொண்டாடலாம்.
இவ்விழா எமது அழகிய பாரம்பரியத்தை நினைவுபடுத்துகின்றது. காலையின் கோலம் போட்டு, எமது வீட்டு முற்றத்தை சுத்தம் செய்து, விளைந்த அரிசியை புதிய பானையில் பொங்கி முழுமுதல் கடவுளுக்கு அர்ப்பணித்து, அதை நன்றியோடு நினைத்து மகிழும் நாள்.
சிறிய வயதில் நாம் பாடசாலையில் கற்றுக்கொண்ட பாடல் ஒன்று ஞாபகம் வருகின்றது:
தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப்பொங்கல்
கூவி அழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம்
பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள்
கோலமிட்டு விளக்கேற்றிக் கும்பிடுவாள் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்குப் பானை வைப்பார் அப்பா
விரும்பிய மா வாழை பலா விதவிதமாய்க் கனிகள்
கரும்பிளனீர் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள்
வெண்ணிறப்பால் பொங்கி வர வெடி சுடுவோம் நாங்கள்
இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்!!! இதன் மகிழ்வு எமக்கு பல நினைவுகளைத் தருகின்றது.
பழைய ஏற்பாட்டு காலங்களில், பலவகையான பலி இடம்பெற்று வந்துள்ளது. இந்தப் லலிகளிலே தானியப் பலியும் ஒன்றாகும். இது இறைவனுக்கு செலுத்தப்பட தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்கள் காய் கறிகளை கொண்டுவந்து பலியாக ஒப்புக்கொடுப்பர். தொடக்க நூலிலே கொடுக்கப்படும் முதல் உதாரணம் காயினின் பலியே. இதைத் தவிர லேவியர் 2ம் அதிகாரத்தில்: 'முதற்பலன்களின் உணவுப் படையலை ஆண்டவருக்கு செலுத்தினால், அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டி உதிர்த்து, உன் முதற்பலன்களின் உணவுப் படையலாகச் செலுத்த வேண்டும்.' (14ம் வசனம்) ஆகவே, தைப்பொங்கள் திருவிழாவும் எமது திருஅவை நம்பிக்கையிலும் இணைந்து செல்கிறது. அதன் அர்த்தம் அதிகமாகின்றது. இவ்விழாவைக் கொண்டாட எமக்கு வலுவூட்டுகின்றது. இது எமது முன்னோர்கள் கொண்டாடிய விழாவே. பழைய ஏற்பாட்டில் கொடுத்த தானியப் பலி, புதிய ஏற்பாட்டில் இறைமகன் இயேசுவே பலியாக பலிப்பொருளாக பலிப்பீடமாக மாறி தன்னையே ஒப்புக்கொடுக்கின்றார். இதனால் அனைத்துப் பலிகளிலும் உயர்வானதாக தனது அன்பை காட்டிச்சென்றார் இயேசு.
ஆகவே, இன்றைய நாளிலே இவ்விழா எமக்கு பல செய்திகளை விட்டுச் செல்கின்றது. இவ்விழாவை நாம் சதாரணமாக கொண்டாடக் கூடாது; இவ்விழா எமக்கு அர்த்தம் தர வேண்டும். எமது வாழ்வுக்கு பல படிப்பினைகளைத் தர வேண்டும். 1. நாம் கொண்டாடும் இத் தைப்பொங்கல் ஒரு நன்றியின் விழாவே! நான் தொடக்கத்திலே கூறியது போல, இறைவனுக்கு கூறும் நன்றி, இயற்கைக்கு கூறும் நன்றி மற்றும் இவ்வுஅவைத் தரும் அனைத்து உழைப்பளிகளுக்கும் கூறும் நன்றியுமாகும். ஆகவே, எமக்காக உழைப்பவர்களை மதிப்போம், அன்பு செய்வோம்.
இந்நாளிலே எமது வாழ்வோடு இணைந்திருக்கும் இயற்கையையும் மறந்துவிட முடியாது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுமடல் 'Laudato Si' எமக்கு ஞாபகம் வருகின்றது. எமது இறையியல் கற்கையிலே இவ் இயற்கையை நினைந்து அதனோடு இணைந்து பயணித்து அதை அன்பு செய்யும் விழுமியத்தை படிப்பினையாக கற்றுக்கொள்ளவேண்டும். இந்நிலம் எமக்கு உணவைத் தருகின்றது; இனியும் இந்நிலம் தருமா என்பது எம்மைச் சுற்றி நடைபெறும் பல இயற்கை வன்முறைகளை நினைத்துப்பார்க்கின்ற போது சந்தேகமாகத் தான் இருக்கின்றது. நாம் மட்டும் வாழ்வதல்ல, எமக்கு அடுத்திருக்கும் தலை முறையை வாழ்விக்க இவ் இயற்கையை பாதுகாப்போம். மேலும் நாம் உட்கொள்ளும் உணவு, வீண் விரயமாக இருப்பதை அதிகம் தவிர்த்துக் கொள்வோம். உணவு வீண்விரயமாதல் என்பது ஒரு பெரிய போராட்டம். இது ஒரு பாவம். எம்மைப் போல் அதிகமான மக்கள் இவ்வுணவிற்காக கண்ணீரோடு ஏங்கும்போது நாம் உண்பதில் அவர்களையும் நினைத்துக் கொள்வோம்.
ஆகவே அன்பான உறவுகளே! இப்பொங்கல் எமது நாவுக்கு இனிய சுவையை தருவது போல், நாமும் மற்றவர்களுக்கு அன்பை, அறிவை, உறவை, பாதுகாப்பைக் கொடுக்கும் கருவிகளாக மாறுவோம். இறைவரம் கேட்டு இப் பலியிலே மன்றாடுவோம்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment