Friday, 20 December 2024

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா - பெருவிழா - 01/01/2025

 இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா - பெருவிழா





திருப்பலி முன்னுரை 

கிறிஸ்துவுக்குள் அன்புமிக்க உறவுகளே! 2024ம் ஆண்டை நாம் ஓடிமுடித்துவிட்டோம். பன்னிரெண்டு மாதங்களுக்குள், 365 நாட்களுக்குள் எத்தனை எத்தனை ஆயிரம் அனுபவங்கள். வெற்றிகள் தோல்விகள், பிறப்புக்கள் சில உறவுகளின் இறப்புக்கள், நாம் சாதித்தவை, நம்மை விட்டு தொலைந்து சென்றவை, நாம் தவறி விழுந்தவைகள், எம்மை எழுந்து நடக்கச் செய்தவைகள்,  எம்மை உழுக்கிய அணர்த்தங்கள், இவ்வுலகை கண்ணீர் சிந்தவைத்த யுத்தங்கள், மாற்றங்கள், பிடிவாதங்கள், அதிஸ்டங்கள், எம்மை முடக்கிய நோய்கள் -  இவ்வாறு இவ்வருடம் எமக்கு விடைகொடுத்துச் செல்கின்றது. ஆனால் பிறக்கும் புதிய வருடம் 2025 எம்மை நோக்கி நகர்த்த இருக்கும் பாதைகள் அதிசயமாகட்டும். 

இன்று திரு அவை தாயானவள் "இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா" வின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றாள். அன்னை மரியாள் இயேசுவின் தாயாக, கடவுளின் தாயாக மாத்திரம் அல்ல; அவள் எமது திரு அவையின் தாயாகவும் இவ்வுலகிற்கான பாதுகாவலியுமாக இருக்கின்றாள். இவ்வுலகு அதன் படைப்பின் தொடக்கத்திலே ஆதிப்பெற்றோரால் காயப்பட்டு பாவநிலையால் அதன் நிலை இழந்திருந்த போதும், இவ்வுலகிலே பிறந்து, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை மரியாவின் தூய்மையால், பிரமாணிக்கத்தால், கீழ்ப்படிவால், அவளின் கற்புநிறை வாழ்வால் இவ்வுலகு இழந்ததை மீண்டும் பெறலாயிற்று. எனவே, நாம் தொடங்கும் இவ்வருடத்தை அவளின் பாதத்திலும் பாதுகாவலிலும் ஒப்புக்கொடுத்து ஆரம்பிப்போம். 

2025ம் ஆண்டு ஒரு ஜுபிலி ஆண்டே. திரு அவை முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும். அது எமக்கு தரும் அனைத்து படிப்பினைகளும் மேலும் எமது நம்பிக்கையை வளர்த்திடச் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் பலனளிக்க மன்றாடுவோம். 

2025ம் ஆண்டு எமக்கும் எமது குடும்பங்களுக்கும் ஓர் ஆசீர்வாதமாக அமைய மன்றாடுவோம்;  

2025ம் ஆண்டு இயேசுவை எனது வாழ்வால் சான்றுபகரும் கருவியாக நான் மாற மன்றாடுவோம்; 

2025ம் ஆண்டு இவ்வுலகம் தேடும் அமைதியின், நீதியின் இல்லிடமாக மாற மன்றாடுவோம். இப்புதிய ஆண்டிலே நாம் தனித்து அல்ல, மாறாக சேர்ந்து பயணிப்போம்; பகைமையை அல்ல, மகிழ்வையும் அன்பையும் கொடுத்து பகிர்ந்திடும் நல் உள்ளங்களாக மாறிடுவோம். இதற்கான வரங்களைக் கேட்டு தொடரும் இக்கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம். 

வருகைப் பல்லவி

வாழ்க, புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்றும் ஆளும் அரசரைப் பெற்றெடுத்தவர் நீரே.

அல்லது

காண். எசா 9:1,5; லூக் 1:33 இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ 'வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை' என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.


"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

இறைவா, புனித மரியாவின் வளமையான கன்னிமையால் மனிதக் குலத்துக்கு நிலையான மீட்பின் பரிசுகளை வழங்கினீரே; அவரது பரிந்துரையை நாங்கள் உணரவும் அவர் வழியாக வாழ்வின் ஊற்றாகிய உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் இறைவாக்கு

இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1ய)

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!


1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!

2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;

பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி


4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!

ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்;

உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி


5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக!

மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!

உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சகோதரர் சகோதரிகளே,

காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: பிறந்திருக்கின்ற புதிய வருடத்திலே ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிய வேண்டி, எமது தேவைகளை அவர் பாதம் ஒப்புக்கொடுப்போம். 


1. 'நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள'; என்று மொழிந்த இறைவா! இன்றைய உலகில் நற்செய்தி அறிவிக்க என நீர் தேர்ந்துகொண்ட உம் அடியார்களாகிய திருநிலைப் பணியாளர்களையும், பொதுநிலைப் பணியாளர்களையும், உம் கரம் தாங்கி அவர்களை ஆசீர்வதித்து, உமது சித்தப்படி அப்பணியை முழு மனதுடன் நிறைவேற்ற உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 2. நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் என்ற புனித பவுலின் உரைக்கல்லிற்கு ஒப்ப, அழைக்கப்பட்ட  நாம் அனைவரும், முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கவும், தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யவும், பொய்மை மலிந்த உலகிலே உண்மை நிலைநிற்க அதற்காக உழைக்கவும், தமது அர்ப்பணத்தால் திருஅவை வாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


3. பிறந்திருக்கும் இப்புதிய உலகை ஆசீர்வதியும். நாம் கால்பதிக்கும் இவ்வருடம் அனைத்து ஆசீர்களையும் எமக்கு தருவதாக. தூய ஆவியின் தூண்டுதலால் நாமும் புதியவற்றையே சிந்தித்து, எமது தீய உணர்வுகளில் மாற்றங்களை காணவும், எமது சமூகத்திற்காக, புதிய தலைமுறையினருக்காக புதிய விடியலாக நம் உருவாகிட அருள்புரிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


4. அன்புள்ள ஆண்டவரே! பிறந்திருக்கின்ற புதிய ஆண்டிலே, எமது குடும்பங்கள், உறவுகள், சொந்தங்கள், பிள்ளைகளின் வாழ்வு, மற்றும் அவர்களின் கல்வி, எதிர்கால கனவுகள், தீர்மானங்கள், பெற்றோரின் வாழ்வாதாரங்களை இறைவன் ஆசீர்வதிக்கவும், எமக்கு முன்பே இருக்கின்ற சவால்கள் போராட்டங்கள் மத்தியில் துணிவுடம் பயணிக்கவேண்டிய வலிமையைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


5. அன்பின் ஆண்டவரே! எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


6. அன்பும் வல்லமையும் நிறைந்த ஆண்டவரே! இந்த நவீன உலகிலே கிறிஸ்தவ வாழ்வை சிதைக்கும் வன்முறைகள்,  துஸ்பிரயோகங்கள், கருக்கொலைகள், யுத்தங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் சீர்கேடுகளை அதிகாரத்தோடும், உரிமையோடும், தட்டிக்கேட்கவும், இதனால் பாதிப்புறும் எம் மக்களின் வாழ்வுக்கு ஒரு விடியல் கிடைத்திடவும் நீர் தேர்ந்தெடுக்கின்ற உமது மக்கள் உண்மையில் நிலைத்திடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


குரு: எங்களை எல்லாம் அன்புசெய்து வழிநடத்தும் இறைவா! உமது ஆசீர்வாதத்தால் எமக்கு நீர் தந்திருக்கின்ற இந்த புதிய ஆண்டிற்காய் நன்றி சொல்கின்றோம். எமது மனங்களை மாற்றும், புதிய மாற்றங்களை தாரும், புதிய தீர்மாங்கள் வழியாக எமது வாழ்வின் குறிக்கோளை அடைய உதவியருளும். நாம் கடந்து செல்ல இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உமது திட்டத்தின் படி நடந்தேறுவதாக. எமது விண்ணப்பங்கள் அனைத்தையும் நீர் நிறைவேற்றி உமது அருளை எமக்கு பெற்றுத் தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நல்லவை அனைத்தையும் கனிவுடன் தொடங்கி நிறைவு காணச் செய்கின்றீர்; உம் புனித அன்னையின் பெருவிழாவில் மகிழ்ச்சி அடைந்துள்ள நாங்கள் உமது அருளின் தொடக்கத்தில் மாட்சி அடைவது போல அதன் நிறைவிலும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பீராக. எங்கள்.


தொடக்கவுரை: புனித கன்னி மரியாவின் தாய்மை: புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை 1

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

ஆண்ட வரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவதும்

எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் தாய்மையின் பெருவிழாவில்

நாங்கள் உம்மைப் போற்றிப் புகழ்ந்து மாட்சிப்படுத்துவதும் மெய்யாகவே தகுதி யும் நீதியும் ஆகும்,

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆ கும்.

தூய ஆவி நிழலிட்டதால், அந்த அன்னை உம்முடைய ஒரே திருமகனைக் கருத்தாங்கி,

தமது கன்னிமையின் மாட்சியில் நிலைத்து நின்று

முடிவில்லா ஒளியான எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உலகுக்கு அளித்தார்.


அவர் வழியாகவே உமது மேன்மையை வானதூதர் புகழ்கின்றனர்;

தலைமை தாங்குவோர் உமமை வழிபடுகின்றனர்;

அதிகாரம் செலுத்துவோர் உம்திருமுன் நடுங்குகின்றனர்;

வானங்களும் அவற்றிலுள்ள ஆற்றல்களும் சேராபீன்களும் ஒன்றுகூடி அக்களித்துக் கொண்டாடுகின்றனர்:

அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு

நாங்கள் உம்மைத் தாழ் மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி : எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணக அருளடையாளங்களை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: என்றும் கன்னியான உம் திருமகனின் தாயும் திரு அவையின் அன்னையுமான மரியாவை அறிக்கையிடுவதில் மகிழ்வுறும் நாங்கள் நிலைவாழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல இவ்வருளடையாளங்கள் எம்மை வழிநடத்துவனவாக. எங்கள்.


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Thursday, 12 December 2024

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் 29/12/2024

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்



திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமுள்ள இறை உறவுகளே! இன்று தாய்த் திரு அவையானவள் திருக்குடும்ப திரு விழாவைக் கொண்டாடுகின்றாள்.  ஆதியிலே இறைவன் ஆதவனாய் தோன்றி, பாரினைப் படைத்து, படைத்ததைக் கொடுத்து, பாசமாய், பண்பாய், தன்னையே தன் உயிர் மூச்சையே தாணமாய் கொடுத்தானே! மனிதனே அம்மாண்பினை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு பெற்று,  குடும்பத்தின் உயர்ச்சியை கொடையாக பெற்றானே. அக் குடும்பத்தின் கொடைக்காக நன்றி கூறும் நாள் இது.. 

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்"  என்று அவ்வுயர்ந்த இறை அன்பை மனிதனின் இதயத்தில் விதைத்து, குடும்பத்தில் பகிர்ந்துகொள்ள, புரிந்துகொள்ள, அதை உணர்ந்துகொள்ள எம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குடும்பத்தைக் கொடுத்து ஆசீர்வதித்ததை நினைந்து நன்றி சொல்லும் நாள். 

அன்னை மரியாவின் வளர்ப்பும், புனித யோசேப்பின் முன்மாதிரியும், இயேசுவை அதிகமாக ஈர்ந்தது,  அவரது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் செல்வாக்கு செலுத்தியது. தந்தை, தாய்க்குரிய பாசமும், பெற்றோர் பிள்ளைகளுக்குரிய அன்புறவுமே இவ்வுலகின் உயர்வுக்கும், நாம் கொள்ளும் இறை-மனித நம்பிக்கைக்கும் அத்திவாரம். குடும்பம் என்பது அர்ப்பணம், தியாகம், சகிப்புத் தன்மை, பொறுமை, பகிர்வு என பல்வேறு குடும்ப விழுமியங்களால் கட்டப்பட்டது. 

இன்று எமது குடும்பங்களுக்காக இன்று மன்றாடுவோம். பல்வேறு காரணங்களால், காயப்பட்டுபோன, அருளை இழந்துபோன, அன்பை தொலைத்துப்போன, உறவுகளை பிரிந்துபோன குடும்பங்களாக மன்றாடுவோம். இவைகள் இன்று மாறவேண்டும். ஒரு சமூகம் உருவாக, ஒரு புனிதன் உருவாக, ஒரு குடும்பத்தில் திருக்குடும்பத்தின் சாயல் இருக்கவேண்டும், அன்னை மரியாளினதும் புனித சூசையினதும் பரிந்துரை இருக்கவேண்டும், இயேசுவின் அன்பும், அவர் மறைபொருளைக் கொண்டாடும் வாஞ்சையும் இருக்கவேண்டும். இதற்கான இறைவரம் கேட்டு இவ்வழகான பலியிலே மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

லூக் 2:16 இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையம் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, எங்களுக்குத் திருக்குடும்பத்தின் சிறந்த எடுத்துக்காட்டை அளிக்கத் திருவுள மான உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: குடும்பப் பண்புகளிலும் அன்பின் பிணைப்புகளிலும் நாங்கள் அதைப் பின்பற்றி, உமது இல்லத்தின் நிலையான பரிசை மகிழ்வுடன் பெறச் செய்வீராக. உம்மோடு. 

முதல் இறைவாக்கு

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 20-22,24-28

உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்” என்று சொல்லி, அவர் அவனுக்குச் ‘சாமுவேல்’ என்று பெயரிட்டார்.

எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், “பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்” என்று சொன்னார்.

அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.” அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 84: 1-2. 4-5. 8-9 (பல்லவி: 4)

பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்.

1 படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;

என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி


4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்;

அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.

5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்;

அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. - பல்லவி


8 படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!

யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்!

9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்!

நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.

யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2,21-24

அன்பார்ந்தவர்களே,

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திப 16: 14 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டுகொள்கின்றனர்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-52

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

 "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

இறைமக்கள் மன்றாட்டு

குரு: அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன் எனும் ஆபிரகாமுக்கு இறைவன் கொடுத்த உறுதியான வாக்கு எமது குடும்பங்களுக்கு ஒளிவிளக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டவர்களாக, எமது தேவைகள் விண்ணப்பங்களை  ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. அன்புள்ள ஆண்டவரே! இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிறையாசீர்வேண்டி நின்று, எமது குடும்பங்களுக்காக உழைக்கும் எமது மறை மாநில ஆயர்,  பங்குதந்தை, மேலும் குருக்கள் துறவிகள் அனைவரையும் உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்புள்ள ஆண்டவரே! இங்கு கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் திருக்குடும்பமாக,  எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: எம்மை எல்லாம் வாழ்வித்து வழிநடத்தும் அன்பின் ஆண்டவரே! நீர் எமக்கு அமைத்துத் தந்த அழகிய குடும்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இக்குடும்பத்தில் இணைதிருக்கும் எமது தாய், தந்தை, பிள்ளைகள் உறவுகள் மற்ரும் சொந்தங்கள் அனைவரையும் இன்றைய பலியிலே ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். எம்மை ஆசீர்வதித்து, அரவணைத்து, வழிநடத்திக் காத்தருளும். ஒரே குடும்ப உணர்வோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, நிறைவாழ்வுக்கான ஆசீரைப் பெற்றுத்தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுக்கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் கடவுளின் கன்னித் தாய், புனித யோசேப்பு ஆகியோருடைய பரிந்துரையின் உதவியால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, II 


திருவிருந்துப் பல்லவி :

பாரூ 3:38 நம் கடவுள் மண்ணுலகில் தோன்றினார்; மனிதர் நடுவே குடிகொள் ""

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும் அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அதன் நிலையான தோழமையைப் பெறுவார்களாக. எங்கள். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

கிறிஸ்து பிறப்பு 25/12/2024 விடியற்காலைத் திருப்பலி மற்றும் பகல் திருப்பலி

 கிறிஸ்து பிறப்பு 25/12/2024




விடியற்காலைத் திருப்பலி

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறைமக்களே! 

விண்ணிலே தோன்றியதோர் விடிவெள்ளி, அற்புத விடிவெள்ளி, மண்ணிலே இறைவனின் அருள் பெற மகிமையின் அடையாளமாய் தோன்றியதே இந்த விடிவெள்ளி, இதோ இன்று தோன்றுகின்றது. ஒரு புதிய சரித்திரம் படைக்க இவ்வுலகில் இறைவன் தோன்றிவிட்டார். படைத்தவர், தன்னை படைப்புக்குள்ளே கொண்டுவந்துவிட்டார், இறைவன் இன்று மனிதனாக பிறந்துவிட்டார். கபிரியேல் தூதர் சொன்ன இறைவனின் வார்த்தை இன்று நிறைவேறுகின்றது. அன்னையின் 'ஆகட்டும்' எனும் வார்த்தையால் மனிதர் அனைவருக்கும் வாழ்வு கிடைத்துவிட்டது, பாவம் உடைக்கப்பட்டுவிட்டது. விண்ணவர் தூதர் அணிகளோடு சேர்ந்து நாமும், 'உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை உண்டாகுக, பூவுலகில் நல் மனம் உடையோருக்கு அமைதியும் ஆகுக' என்று புகழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் பாடுகின்றோம். ஏனெனில் கிறிஸ்து இயேசு எனும் மெசியா தாவின் ஊரில் இன்று பிறந்துள்ளார். இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே. 

இயேசுவின் பிறப்பில் இருந்து அவரது ஒவ்வொரு அசைவும் முன்குறிக்கப்பட்டவை, வரலாற்றில் எழுதப்பட்டவை. அவர் தடம் பதித்துச் சென்றவைகள் வரலாற்றையே விழித்தெழச் செய்தவை. இவரே எமக்கு வழிகாட்டும் விளக்கு, அர்த்தம் தரும் ஆன்ம மருந்து. இவர் பிறப்பில் இருந்து நாம் வாழ்வைக் கற்றுக்கொள்ளவேண்டும். எளிமை வாழ்வில் இறைவன் இருக்கிறார், ஏழைகளில் இறைவன் தெரிகின்றார், உண்மையே இயேசுவின் மறு பெயர். இன்று உலகம் எடுத்துச் சொல்லும் நற்செய்தியை எம் உள்ளங்களில் தருகின்றார். தொலைந்தவர்கள், துவண்டுபோனவர்கள், வறுமையில் இருப்பவர்கள், உறவை இழந்தவர்கள், நொந்துபோனவர்கள், நிலைமாறி போனவர்கள் இவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை தரும் விதையாகின்றார் எம் பாலன் இயேசு.

பாலன் இயேசுவுக்காய் வாழுவோம், பாவம் தொலைத்து அவர் பாதம் வழி செல்வோம். நற்செய்தியை அறிவிப்போம், நல்ல கிறிஸ்தவராக மாறுவோம். 

குறிப்பாக, இவ்வுலகின் அனைத்து தீமைகளால் சூழப்பட்டு, தொலைத்த வாழ்வைத் தேடும் பலரின் கண்ணீருக்கு இப்பிறப்பு ஒரு விடியலாய் அமைவதாக. பலரின் இதயத்திற்கு மகிழ்வை அளிப்பதாக. துன்பங்களுக்கு ஓர் தீர்வாக அமைவதாக.  இதற்கான வரங்களைக் கேட்டு தொடரும் இப்புனித பலியிலே கலந்துகொள்வோம். 


வருகைப் பல்லவி

காண். எசா 9:1,5; லூக் 1:33 இன்று நம்மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ 'வியப்பம் உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை' என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, மனித உடல் எடுத்த உம் வார்த்தையின் புதிய ஒளியால் நிரப்பப்பட்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இது எங்கள் செயலில் சுடர்விட்டு எங்கள் மனதில் நம்பிக்கை வழியாய் ஒளிர்வதாக. உம்மோடு.


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.


முதல் இறைவாக்கு

இதோ, உன் மீட்பர் வருகின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 11-12

உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ, உன் மீட்பு வருகின்றது. அவரது வெற்றிப் பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.” ‘புனித மக்களினம்’ என்றும் ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவள்’ என்றும் இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 97: 1,6. 11-12

பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.


1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;

பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!

6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;

அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி


11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.

12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;

அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-7

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப் பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

இடையர் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20

வானதூதர் இடையர்களை விட்டு விண்ணகம் சென்ற பின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு: காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது, என்ற எசாயாவின் குரல் எம்மையும் நம்பிக்கையின் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. இயேசுவின் பிறப்பு எமக்கு ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை எழுதவேண்டும். பரிசுத்த வாழ்வுக்கான ஏணிப்படியாக அமையவேண்டும். இவரே எமது மீட்பர், இவரே எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து மீட்க பிறந்துள்ளார் எனும் நம்பிக்கையில் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. ஆண்டவரே, உமது மகன் இயேசுக்கிறிஸ்துவை இவ்வுலகு அறிந்து அன்புசெய்ய சித்தம் கொண்டீரே, உமக்கு நன்றி சொல்கின்றோம். அத்திருமகனை உலகறிய நற்செய்தியாக எடுத்தியம்பும் திரு அவைப் பணியாளர்களை கரம்பிடித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. ஆண்டவரே! உமது திரு மகன் இயேசு வழியாக இவ்வுலகு உம்மை யார் என்று கண்டுகொள்ளச் செய்தீரே உமக்கு நன்றிசொல்கின்றோம். ஒன்றிக்கும் ஒரே திரு அவையாக நாம் பயணிக்கும் எமது வாழ்விலும் இயேசு பாலனின் பிறப்பு செய்தி நம்பிக்கையையும், மகிழ்வையும், பிறரோடு உள்ள கூட்டுறவையும் வளர்ப்பதாக. இவ்வுலகம் தரமுடியாத வாழ்வின் விழுமியங்கள், பண்புகள் இயேசுவின் பிறப்பின் கனிகளாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்பின் ஆண்டவரே! பல்வேறு நாடுகளில் யுத்தத்தினால், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் இவ்வுலகின் மக்கள் அனைவருக்கும் இயேசு பாலனின் பிறப்புச் செய்தி, வெறுமையில் நிறைவைத் தருவதாக. உயர்ந்து போகும் கோபுரங்களை கட்டவல்ல, மாறாக மனித உள்ளத்தை உயர்த்திக் காட்டவும்,  உயரவே நிற்கும் போதைக் கலாசாரத்தை தாங்கவல்ல, மாறாக அன்பின் வெகுமதியை உணர்த்திக்கொள்ளவும், உண்மையை உடைக்கும் வன்முறைகளை அல்ல மாறாக பாசத்தை எண்பிக்கும் உறைவுகளை தளைத்திடச் செய்யவும் இயேசுவின் பிறப்பு வழிசெய்யவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இன்றைய கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவை அமையச் செய்த தந்தையே இறைவா! ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்கு அடையாளமாய் இருப்பது போல, இயேசுவின் பிறப்பு எமது குடும்பங்களுக்கு அடையாளமாய் இருப்பதாக. அக்குழந்தையின் மகிழ்விலே எம்மிலுள்ள பிரிவினைகள் களைந்து, பிறழ்வுகள் தகர்த்தெறிந்து, கோபமும் கவலையும் விட்டொழிந்து, கண்ணீரும் ஏக்கமும் துடைத்து, புதிய உறவுகள் அமைக்கவும், பாலகனின் ஆசி நிறைவாய் தங்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு. எம்மை அதிகம் அன்பு செய்யும் தந்தையே!  இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், எமது கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியலாக எம்மை தேடிவந்தீரே.  எமக்கும் எமது வாழ்வுக்கும் நிறைவைத் தர வந்தீரே. உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், உம் அன்பை விட்டு பிரியாமல் இருக்கவும், எமது இயலாமையிலும், பலவீனங்களிலும் எமக்கு தோல்கொடுத்து உதவியருளும். நாம் மனமுவந்து கேட்கும் இந்த விண்ணப்பங்கள் உமதண்டை வந்து சேர்வதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகள் இன்றைய பிறப்பு விழாவின் மறைநிகழ்வுகளுக்கு ஏற்றவையாக அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனிதராகப் பிறந்த அவரே கடவுளாகவும் ஒளிர்வது போல இம்மண்ணகக் கொடைகள் விண்ணகத்துக்கு உரியவற்றை எங்களுக்கு வழங்குவனவாக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III 


திருவிருந்துப் பல்லவி :

காண். செக் 9:9 மகளே சீயோன், மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம், ஆர்ப்பரி; இதோ! உன் அரசர் வருகிறார். அவர் தூயவர்; உலகின் மீட்பர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உம் திருமகனின் பிறப்பினை மகிழ்ச்சி நிறைந்த இறைப்பற்றுடன் நாங்கள் கொண்டாடுகின்றோம்; ஆழமான பொருளுள்ள இம் மறைநிகழ்வுகளை முழு நம்பிக்கையுடன் கண்டுணரவும் மிகுந்த அன்பு ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளவும் அருள்வீராக. எங்கள்.



பகலில் திருப்பலி


வருகைப் பல்லவி

காண். எசா 3:5 ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல்

உள்ளது. அவரது பெயர் மாண்புறு மன்றத்தின் தூதர் என அழைக்கப்படும். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

இறைவா, மனிதத்தன்மையின் மாண்பினை வியத்தகு முறையில் படைத்து, அதனினும் வியத்தகு முறையில் சீர்படுத்தினீர்; எங்களது மனித இயல்பில் பங்குகொள்ள அருள்கூர்ந்த அவரது இறை இயல்பில், நாங்கள் பங்கு பெற அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.


முதல் இறைவாக்கு

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6 (பல்லவி: 3b)

பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.


1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;

ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.

அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி


2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;

பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.

3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி


3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!

மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி


5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;

யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.

6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்றும், “நான் அவருக்குத் தந்தையாய் இருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்” என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, “கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


அல்லது குறுகிய வாசகம்

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-5, 9-14

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இன்றைய பெருவிழாவின் காணிக்கையிலிருந்து வெளிப்படும் உமது மன்னிப்பு, எம்மை உம்மோடு ஒப்புரவாக்கி, முழுமையான இறைவழிபாட்டுக்கு எங்களை இட்டுச் செல்வதாக; எனவே இக்காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் விளங்கச் செய்வீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III 


திருவிருந்துப் பல்லவி : 'காண். திபா 97:3

உலகின் எல்லைகள் அனைத்தும் நம் கடவுளின் மீட்பைக் காணும்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இரக்கமுள்ள இறைவா, இன்று உலகின் மீட்பர் பிறந்துள்ளார்; அதனால் எங்கள் இறைப் பிறப்புக்கு ஊற்றாக அவர் இருப்பது போல எங்களுக்கு அழியா வாழ்வை அளிப்பவராகவும் இருப்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி. 

கிறிஸ்து பிறப்பு 24/12/2024 திருவிழிப்புத் திருப்பலி மற்றும் இரவில் திருப்பலி

கிறிஸ்து பிறப்பு 24/12/2024




கிறிஸ்துபிறப்பு வழிபாட்டிற்குச் செல்ல முன்: 

ஆண்டவருடைய பிறப்பு நாளில் ஒவ்வோர் அருள்பணியாளரும் மும்முறை தனித்தோ கூட்டுத்திருப்பலியாகவோ திருப்பலி நிறைவேற்றலாம். ஆனால் ஒவ்வொன்றும் அதற்குக் குறிக்கப்பட்ட காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். 

திருவிழிப்புத் திருப்பலி -  24ம் திகதி மாலை ஆறு மணிக்கு பின் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும். (Solemnities are counted among the most important days, whose celebration begins with First Vespers (Evening Prayer I) on the preceding day. Some Solemnities are also endowed with their own Vigil Mass, which is to be used on the evening of the preceding day, if an evening Mass is celebrated: Universal Norms on the Liturgical Year and the Calendar: 11)
எசாயா: 62: 1-5
பதிலுரைப் பாடல் திபா 89
திருத்தூதர் பணிகள் நூல்: 13: 16-17,21-25
மத்தேயு: 1: 1-25

இரவில் திருப்பலி - 24ம் திகதி மாலை நல்லிரவில் அதாவது 24ம் திகதி மாலை பன்னிரண்டு மணிக்கு முன் ஆரம்பமாகி ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும். 
எசாயா:  9: 2-4,6-7
பதிலுரைப் பாடல் திபா 96
தீத்து: 2: 11-14
லூக்கா: 2: 1-14

விடியற்காலைத் திருப்பலி - 25ம் திகதி அதிகாலையில் அல்லது காலையில்  ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும்.
எசாயா: 62: 11-12
பதிலுரைப் பாடல் திபா 97
தீத்து: 3: 4-7
லூக்கா: 2: 15-20

பகலில் திருப்பலி - மதியம் பன்னிரண்டு மணிக்கு முன்னோ அல்லது பின்னோ ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியாகும். 
எசாயா:  52: 7-10
பதிலுரைப் பாடல் திபா 98
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம்: 1: 1-6
யோவான்: 1: 1-18


திருவிழிப்புத் திருப்பலி


திருப்பலி முன்னுரை
விழித்திருந்து காத்திருந்து, வீணான நேரமெல்லாம் களைந்துவிட்டு, வெண்பனி போல் உளத்தூய்மை பெற்று, வாழ்வுப் பாதையில் அருளையும், ஆசீரையும் அதிகமாக பெற, பிறக்கும் அந்த இயேசுவின் பொன்முகம் காண இன்று எத்திசையிலிருந்தும் கூடிவந்திருக்கின்றோம். இக் கிறிஸ்து பிறப்பின் மாலைத் திருப்பலிக்கு நாம் உங்களை அழைத்து நிற்கின்றோம். நாம் காத்திருந்த நேரம் கனிந்துவிட்டது. 
நாம் இன்று கொண்டாடும் கிறிஸ்துவின் பிறப்பு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருந்தாலும், அது மனித வரலாற்றில் ஒரு புனித பாதையை அமைத்துக் கொடுத்தது என்பது கண்கூடு. இவ்வுலகின் பாவம், இறை மகிமையை, அதன் முழுமையை எம்மில் இழக்கச்செய்தாலும், இவ் இறைமகனின் பிறப்பு அதை மீண்டும் புதுப்பித்து விட்டது. இது எமக்கு கிடைத்த பாக்கியமே. அவர் இறைவனாக இருந்தும், மனிதனானார், அவர் படைத்தவராக இருந்தும், தம்மை படைப்புக்குள்ளே கொணர்ந்தார், அவர் உயர்ந்தவராக இருந்தும், தம்மைத் தாழ்த்திக்கொண்டார், அவர் மறைபொருளாய் இருந்தும், தம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார். இதுவே அவர் காட்டும் சிறந்த அன்பு.  
நமது இயேசுவின் பிறப்பு இன்றும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டே! அவரது ஏழ்மை நிறை பிறப்பு எமக்கு ஒரு பாடமே! பணமும், செல்வமும், பட்டங்களும் மனிதனை உயர உயர கொண்டுசென்றாலும், அடிப்படையில் மனிதனின் இதயத்தில் இடம் தரும் மகிழ்ச்சியும், அமைதியும் இயேசுவின் பிறப்பில் இருந்தே ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய எமக்கு இயேசுவின் பிறப்பு ஒரு வரலாறு அல்ல, அது ஒரு வாழ்வு. 
எனவே, இறை முகம் காண, தன்னை இம் மனித இதயத்தில் பொறித்த இயேசுவின் வருகைக்காய் நன்றிசொல்வோம். எம்மைச் சுற்றியிருக்கும் அனைவரிலும் இப் பெருமகிழ்ச்சியை எடுத்துரைப்போம், ஒரு குழந்தையின் பிறப்பில் மகிழும் தாய் போல, கிறிஸ்துவின் பிறப்பில் நாமும் மகிழவேண்டும். எம்மையும் இம்மனுக்குலத்தில் உயர்த்தி, மானுட உறவில் மகிழ்ந்து, மனிதத்திற்கு புதிய வரைவிலக்கணம் தரும் இந்நிகழ்வு எம்மையும் தாங்கிச் செல்வதாக. 
இத்தனை வரங்களையும் நிறைவாகப் பெறவும், இவ்வுலகின் அமைதிக்காகவும், மனித நீதிக்காகவும் எமது செபங்களை உயர்த்தி தொடரும் இப்பலியில் கலந்துகொள்வோம்.  
வருகைப் பல்லவி
காண். விப 16:6-7 இன்று அறிந்து கொள்ளுங்கள்; ஏனெனில் ஆண்டவர் வருவார்; நம்மை மீட்பார். காலையில் நீங்கள் அவருடைய மாட்சியைக் காண்பீர்கள்.
உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :
இறைவா, ஆண்டுதோறும் எங்கள் மீட்பை எதிர்பார்த்திருக்கச் செய்வதனால் எங்களை மகிழ்விக்கின்றீர்; இவ்வாறு உம் ஒரே திருமகனை மீட்பராக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கின்ற நாங்கள், நடுவராக வரும் அவரை நம்பிக்கையுடன் சந்திக்கவும் தகுதி பெறுவோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

"நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

முதல் இறைவாக்கு
ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப் படுவாய்.
ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். ‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர் பெறமாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘என் மகிழ்ச்சி’ என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு ‘மணம் முடித்தவள்’ என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

 பதிலுரைப் பாடல் திபா 89: 3-4. 15-16. 26,28 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

3 நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்;
என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;
உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்’. - பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்;
ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்;
உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி

26 ‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’
என்று அவன் என்னை அழைப்பான்.
28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்;
அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

இரண்டாம் இறைவாக்கு
தாவீதின் மகனான கிறிஸ்து பற்றிப் பவுலின் சான்று.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 16-17,21-25

தொழுகைக் கூடத்தில் பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டை விட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்;
பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். பின்பு கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்’ என்று சான்று பகர்ந்தார்.
தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், ‘மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்’ என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் ‘நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை’ என்று கூறினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நாளை அவனியின் அநீதி அழிவுறும்; உலகின் மீட்பர் நம்மீது அரசாள்வார். அல்லேலூயா.

 நற்செய்தி இறைவாக்கு
தாவீதின் மகனான இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-25

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

அல்லது குறுகிய வாசகம்

மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-25

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
‘இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்’
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

குரு: காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது, என்ற எசாயாவின் குரல் எம்மையும் நம்பிக்கையின் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. இயேசுவின் பிறப்பு எமக்கு ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை எழுதவேண்டும். புனித வாழ்வுக்கான ஏணிப்படியாக அமையவேண்டும். இவரே எமது மீட்பர், இவரே எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து மீட்க பிறந்துள்ளார் எனும் நம்பிக்கையில் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. மகிழ்வின் ஊற்றே இறைவா! உமது பிறப்பின் நற்செய்தியை உலகமெல்லாம் மகிழ்வின் செய்தியாக, மகிமையின் செய்தியாக, அன்பின் செய்தியாக அறிவிக்கும் அனைத்து பணியாளர்களையும் ஆசீர்வதியும். நீர் உலகிற்கு தரும் இவ் உன்னத கொடையை உலகின் கடையெல்லை வரை எடுத்துரைக்கும் இவர்கள் உமக்கு என்றும் சான்றுபகிர அருள்புரிய வேண்டுமென்று, ...

2. மகிழ்வின் ஊற்றே இறைவா! உமது பிறப்பால் மகிழும் இம்மக்களை ஆசீர்வதியும். ஒரு தாயின் தியாகத்தில், அவளின் உதரத்தில், உலகிற்காய் அவள்கொண்ட அன்பில் உதித்த இறைமகனை, நாம் ஒவ்வொருவரும் எமது இதயத்தில் தாங்கி, எமது செயல்களில் உருக்கொடுத்து, எமது அயலவரில் வாழ்ந்துகாட்ட அருள்புரிய வேண்டுமென்று, ...

3. மகிழ்வின் ஊற்றே இறைவா! உமது பிறப்பைக் காணமுடியாமல், அதன் அர்த்தத்தை உணரமுடியாமல், அதன் மகிழ்வில் நிறைவுகாண முடியாமல் தவிக்கும் எம்மில் பலருக்கு, உமது பிறப்பு ஓர் ஏதிர்நோக்கை கொணர்வதாக. நாம் கடந்துசென்ற பாதையை விலக்கிவிட்டு, புதியன தேடும் புதுமை மக்களாக, பாலகன் இயேசு தரும் நல் விழுமியங்களை பகிரும் கருவிகளாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று, ...

4. மகிழ்வின் ஊற்றே இறைவா! அரசியல் சூட்சுமங்களால் முடக்கப்பட்டு, பொருளாதார கெடுபிடிகளால் நசுக்கப்பட்டு, வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் தேடி அலைந்து திரியும் மக்களுக்காக மன்றாடுவோம். அனைத்தையுமே இழந்த மக்கள் இவர்களுக்கு உமது பிறப்பு தரும் மகிழ்வும், அமைதியும், நீதியும் நிரந்தரமாக இவர்களோடு தங்கவேண்டுமென்று, ...

5. மகிழ்வின் ஊற்றே இறைவா! எமது நாட்டில் நீர் எமக்கு அமைத்துத் தந்த இவ்வாழ்வு, அனைத்து சவால்களையும் கடந்து, ஓர் நிறைவை நோக்கி பயணிப்பதாக. புதிய அரசியல் மாற்றங்களாலும், இந்நாட்டின் வளர்ச்சிக்கான புதிய தீர்மானங்களாலும் எமக்கான நன்மைகளும் வளங்களும் எம்மை வந்து சேரவும், இதற்காக உழைக்கும் அனைத்து தலைவர்களும் அசீர்வதிக்கப்படவும் வேண்டுமென்று, ...

குரு. எம்மை அதிகம் அன்பு செய்யும் தந்தையே!  இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், எமது கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியலாக எம்மை தேடிவந்தீரே.  எமக்கும் எமது வாழ்வுக்கும் நிறைவைத் தர வந்தீரே. உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், உம் அன்பை விட்டு பிரியாமல் இருக்கவும், எமது இயலாமையிலும், பலவீனங்களிலும் எமக்கு தோல்கொடுத்து உதவியருளும். நாம் மனமுவந்து கேட்கும் இந்த விண்ணப்பங்கள் உமதண்டை வந்து சேர்வதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: எந்த அளவுக்கு இப்பெரும் கொண்டாட்டங்களைச் சிறப்பான ஊழியத்துடன் எதிர்கொள்கின்றோமோ அந்த அளவுக்கு எங்கள் மீட்பின் தொடக்கம் இவற்றில் அமைந்துள்ளது என்பதை நாங்கள் உணரச் செய்வீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III


திருவிருந்துப் பல்லவி :
காண். எசா 40:5 ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் நம் கடவுளின் மீட்பைக் காண்பர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, இவ்விண்ணக மறைநிகழ்வில் உண்டு, பருகிய நாங்கள் உம் ஒரே திருமகனின் வரவிருக்கும் பிறப்பினால் புத்துயிர் பெற எங்களுக்கு அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.



இரவில் திருப்பலி


வருகைப் பல்லவி
திபா 2:7 ஆண்டவர் என்னிடம் உரைத்தார்: "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்."

அல்லது

நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோம்; ஏனெனில் நம் மீட்பர் உலகில் பிறந்துள்ளார்; இன்று நமக்கு விண்ணகத்திலிருந்து உண்மையான அமைதி இறங்கி வந்தது.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :
இறைவா, உண்மை ஒளியின் சுடரால் இப்புனிதமிக்க இரவை ஒளிரச் செய்தீர்; அதனால் இம்மண்ணகத்தில் அவரது ஒளியின் மறைநிகழ்வுகளை அறிந்திருக்கும் நாங்கள் விண்ணகத்திலும் அவரது மகிழ்ச்சியை அனுபவிக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும் போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.

முதல் இறைவாக்கு
ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 96: 1-2a. 2b-3. 11-12. 13 (பல்லவி: லூக் 2: 11)
பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2a ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.- பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்;
மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

 இரண்டாம் இறைவாக்கு
மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 2:10-11
அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா.

 நற்செய்தி இறைவாக்கு
இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
 
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இன்றைய திருநாளின் காணிக்கை உமக்கு உகந்ததாய் அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்புனிதமிக்க உறவுப் பரிமாற்றத்தின் வழியாக கிறிஸ்துவின் சாயலில் நாங்கள் காணப்படவும் எங்கள் இயல்பு அவரில் உம்மோடு இணையவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவருடைய பிறப்பு
தொடக்கவுரை : ஒளியாம் கிறிஸ்து.
இசையில்லாப் பாடங்கள்: ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை 1,

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
 
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல
இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும்,
நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது,
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்,
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஏனெனில், வாக்கு மனிதர் ஆனார் என்னும்
மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் பேரொளி எங்கள்
மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது.

எனவே, அவரில் நாங்கள் கடவுளைக் கண்கூடாய்க் காண் கின்றோம்;
அவர் வழியாகவே கண் காணாதவைமீதுள்ள அன்பினால் நாங்கள் ஆட்கொள்ளப்படுகின்றோம்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்,
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி
முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

திருவிருந்துப் பல்லவி :
யோவா 1:14 வாக்கு மனிதர் ஆனார்; அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே எங்கள் இறைவா, எங்கள் மீட்பரின் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்; இவ்வாறு மேன்மையான உறவுகளால் நாங்கள் அவரது விண்ணகத் தோழமைக்கு வந்து சேரும் தகுதி பெற்றிட எங்களுக்கு அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...