இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்

திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள இறை உறவுகளே! இன்று தாய்த் திரு அவையானவள் திருக்குடும்ப திரு விழாவைக் கொண்டாடுகின்றாள். ஆதியிலே இறைவன் ஆதவனாய் தோன்றி, பாரினைப் படைத்து, படைத்ததைக் கொடுத்து, பாசமாய், பண்பாய், தன்னையே தன் உயிர் மூச்சையே தாணமாய் கொடுத்தானே! மனிதனே அம்மாண்பினை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு பெற்று, குடும்பத்தின் உயர்ச்சியை கொடையாக பெற்றானே. அக் குடும்பத்தின் கொடைக்காக நன்றி கூறும் நாள் இது..
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்" என்று அவ்வுயர்ந்த இறை அன்பை மனிதனின் இதயத்தில் விதைத்து, குடும்பத்தில் பகிர்ந்துகொள்ள, புரிந்துகொள்ள, அதை உணர்ந்துகொள்ள எம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குடும்பத்தைக் கொடுத்து ஆசீர்வதித்ததை நினைந்து நன்றி சொல்லும் நாள்.
அன்னை மரியாவின் வளர்ப்பும், புனித யோசேப்பின் முன்மாதிரியும், இயேசுவை அதிகமாக ஈர்ந்தது, அவரது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் செல்வாக்கு செலுத்தியது. தந்தை, தாய்க்குரிய பாசமும், பெற்றோர் பிள்ளைகளுக்குரிய அன்புறவுமே இவ்வுலகின் உயர்வுக்கும், நாம் கொள்ளும் இறை-மனித நம்பிக்கைக்கும் அத்திவாரம். குடும்பம் என்பது அர்ப்பணம், தியாகம், சகிப்புத் தன்மை, பொறுமை, பகிர்வு என பல்வேறு குடும்ப விழுமியங்களால் கட்டப்பட்டது.
இன்று எமது குடும்பங்களுக்காக இன்று மன்றாடுவோம். பல்வேறு காரணங்களால், காயப்பட்டுபோன, அருளை இழந்துபோன, அன்பை தொலைத்துப்போன, உறவுகளை பிரிந்துபோன குடும்பங்களாக மன்றாடுவோம். இவைகள் இன்று மாறவேண்டும். ஒரு சமூகம் உருவாக, ஒரு புனிதன் உருவாக, ஒரு குடும்பத்தில் திருக்குடும்பத்தின் சாயல் இருக்கவேண்டும், அன்னை மரியாளினதும் புனித சூசையினதும் பரிந்துரை இருக்கவேண்டும், இயேசுவின் அன்பும், அவர் மறைபொருளைக் கொண்டாடும் வாஞ்சையும் இருக்கவேண்டும். இதற்கான இறைவரம் கேட்டு இவ்வழகான பலியிலே மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
லூக் 2:16 இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையம் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு :
இறைவா, எங்களுக்குத் திருக்குடும்பத்தின் சிறந்த எடுத்துக்காட்டை அளிக்கத் திருவுள மான உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: குடும்பப் பண்புகளிலும் அன்பின் பிணைப்புகளிலும் நாங்கள் அதைப் பின்பற்றி, உமது இல்லத்தின் நிலையான பரிசை மகிழ்வுடன் பெறச் செய்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 20-22,24-28
உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்” என்று சொல்லி, அவர் அவனுக்குச் ‘சாமுவேல்’ என்று பெயரிட்டார்.
எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், “பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்” என்று சொன்னார்.
அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.” அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 84: 1-2. 4-5. 8-9 (பல்லவி: 4)
பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்.
1 படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி
4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்;
அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்;
அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. - பல்லவி
8 படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!
யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்!
9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்!
நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.
யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2,21-24
அன்பார்ந்தவர்களே,
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திப 16: 14 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டுகொள்கின்றனர்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-52
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன் எனும் ஆபிரகாமுக்கு இறைவன் கொடுத்த உறுதியான வாக்கு எமது குடும்பங்களுக்கு ஒளிவிளக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டவர்களாக, எமது தேவைகள் விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்புள்ள ஆண்டவரே! இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிறையாசீர்வேண்டி நின்று, எமது குடும்பங்களுக்காக உழைக்கும் எமது மறை மாநில ஆயர், பங்குதந்தை, மேலும் குருக்கள் துறவிகள் அனைவரையும் உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்புள்ள ஆண்டவரே! இங்கு கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் திருக்குடும்பமாக, எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: எம்மை எல்லாம் வாழ்வித்து வழிநடத்தும் அன்பின் ஆண்டவரே! நீர் எமக்கு அமைத்துத் தந்த அழகிய குடும்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இக்குடும்பத்தில் இணைதிருக்கும் எமது தாய், தந்தை, பிள்ளைகள் உறவுகள் மற்ரும் சொந்தங்கள் அனைவரையும் இன்றைய பலியிலே ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். எம்மை ஆசீர்வதித்து, அரவணைத்து, வழிநடத்திக் காத்தருளும். ஒரே குடும்ப உணர்வோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, நிறைவாழ்வுக்கான ஆசீரைப் பெற்றுத்தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுக்கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் கடவுளின் கன்னித் தாய், புனித யோசேப்பு ஆகியோருடைய பரிந்துரையின் உதவியால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக. எங்கள்.
ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, II
திருவிருந்துப் பல்லவி :
பாரூ 3:38 நம் கடவுள் மண்ணுலகில் தோன்றினார்; மனிதர் நடுவே குடிகொள் ""
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும் அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அதன் நிலையான தோழமையைப் பெறுவார்களாக. எங்கள்.
Comments
Post a Comment