Wednesday, 11 December 2024

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு - 22/12/2024

 திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு



திருப்பலி முன்னுரை 

கிறிஸ்து இயேசுவில் அன்பு நிறை உள்ளங்களே! திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்றோம். திருவருகைக் காலத்தின் இறுதி ஞாயிறு வாரமாகிய இவ்வாரம் மரியன்னையின் அழகிய வார்த்தைகளோடு பயணிக்க அழைக்கின்றது. கிறிஸ்து இயேசு இம்மண்ணில் பிறப்பதற்கு முன்பே, அன்னையின் திருவயிற்றில் இருக்கும் குழந்தை யார் என்பதை முன்னறிவித்தவள் எலிசபேத். அத்தோடு அன்னை மரியாவை ஆண்டவரின் தாய் என்று உலகிற்கே எடுத்துரைத்தவள் அவள். 

இம்மண்ணுலகில் இறைமகன் பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் தாய் கொண்டிருந்த மகிழ்ச்சி, அவளின் நம்பிக்கை அனைத்தையும் நாமும் எமது வாழ்வில் கொண்டிருக்க அழைக்கப்படுகின்றோம். அவள் திருவயிற்றில் சுமந்தது இயேசுவை மட்டும் அல்ல, இவ்வுலகம் காத்திருந்த விடுதலையையுமே. இந்த காத்திருப்பு அவள் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையிலும், அவர் கொடுத்த செய்தியை மதித்து,  கீழ்படிந்ததிலுமே முழுமை பெறுகின்றது. 

நாம் எதைக் குறித்து காத்திருக்கின்றோம் என்பதை விட கிறிஸ்துவும் எம்மைக் குறித்து காத்திருக்கின்றார் என்பதை உணர்ந்துகொள்வோம். அவரை எம் இதயத்தில் சுமந்து இவ்வுலகிற்காக ஈன்று கொடுக்க அழைக்கின்றார். அன்னை மரியாள் பகிர்ந்துகொண்ட மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்துகொள்வோம். வாழ்வை இழக்கவோ, வாழ்வை அழிக்கவோ அல்ல, மாறாக வாழ்வை கொடுக்கும் இதயங்களாக மாறுவோம். 

இவ்வுலகிலே பல்வேறு காரணிகளால், நம்பிக்கை இழந்து இருளடந்து போன ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் மீண்டும் உயிர்பெற மன்றாடுவோம். காலையில் தோன்றும் விடிவெள்ளி போன்று, கிறிஸ்துவின் பிறப்பு இவ்வுலகின் அனைத்து மாந்தருக்கும் அர்த்தம் தரவேண்டியும் இப்பலியில் இறைவரம் வேண்டி மன்றாடுவோம்.  


வருகைப் பல்லவி

காண். எசா 45:8 வானங்கள் மேலிருந்து பொழியட்டும்; மேகங்கள் நீதிமானைப் பொழியட்டும்; நிலம் திறக்க மீட்பர் தோன்றட்டும்.

"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

ஆண்டவரே, உமது அருளை எங்கள் மனங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் மனிதர் ஆனதை வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்; அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் உயிர்ப்பின் மாட்சி பெற நீர் எங்களை அழைத்துச் செல்வீராக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


முதல் இறைவாக்கு

இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5ய

ஆண்டவர் கூறுவது இதுவே:

நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.

ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 80: 1யஉ-2b. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.


1யஉ இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்!

கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!

2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி


14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்;

இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!

15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,

உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி


17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக!

உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!

18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்;

எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். - பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 5-10

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது”என்கிறார்.

திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல” என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர், “உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 1: 38

அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில்

மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனித மரியாவின் திருவயிற்றைத் தூய ஆவியார் தமது வல்லமையால் நிரப்பினார்; உமது பீடத்தின்மேல் வைக்கப்பட்டுள்ள இக்காணிக்கையையும் அவரே புனிதப்படுத்துவாராக. எங்கள்.

திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை II 

திருவிருந்துப் பல்லவி :

எசா 7:14 இதோ! கன்னி கருவுறுவார்; ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவர் பெயர் "இம்மானுவேல்" என அழைக்கப்படும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, நிலையான மீட்பின் உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: மீட்பு அளிக்கும் திருநாள் நெருங்கி வரும் இவ்வேளையில் நாங்கள் மேன்மேலும் இறைப்பற்றுடன் உம் திருமகனுடைய பிறப்பின் மறைநிகழ்வைத் தகுதியான முறையில் கொண்டாட முன்னேறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

இறைமக்கள் மன்றாட்டு

1. வார்த்தை மனுவுருவாகி எம்மிலே குடுகொள்ள சித்தம்கொண்ட இறைவா! உமது வார்த்தையையும் வாழ்வையும் உடைத்துக் கொடுக்கும் அனைத்து நற்செய்தி பணியாளர்களையும் அசீர்வதித்து காத்தருள வேண்டுமென்று, ...

2. நம்பிக்கையால் இறைவனை தம் உதரத்தில் தாங்கிய அன்னையைப் போல், ஏழைகளாய், பிணியில் வாடும் நோயாளிகளாய், பாசத்திற்காக தவிக்கும் பிள்ளைகளாய், உறவை இழந்த அநாதைகளாய் தவிப்போருக்கு நாம் ஆறுதலாய், அரவணைக்கும் கரங்களாய் மாறிட அருள்புரிய வேண்டுமென்று, ...

3. இவ்வுலகிற்காக இறை சித்தம் ஏற்ற அன்னை மரியைப் போல், எம்மிலே இறைவனின் சித்தத்தை கண்டுணர்ந்துகொள்வோம். எமது குடும்ப வாழ்விலும், தொழில்துறைகளிலும், கல்வி வாழ்விலும் எமக்கான அழைப்பை ஏற்று அதில் பிரமாணிக்கமாகவும், பொறுப்புள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் வாழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

4. இன்று இப்பலியை நிறைவேற்றும் அனைவருக்காகவும் மன்றாடுவோம். அன்னை மரியா கொண்டிருந்த மகிழ்வை அயலவரோடு பகிர்ந்து, இறை மகிமையை வெளிப்படுத்த சித்தம்கொண்டது போல, நாமும் எமது மகிழ்ச்சியை நிறைவுள்ளதாக்கும், உண்மை வாழ்வு வாழவும், அன்புசெய்வதிலும் பகிர்ந்து கொடுப்பதிலும் நாம் எம்மை முழுமையாக அர்ப்பணிக்கவும் வரம் தனை அருளவேண்டுமென்று, ...

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...