திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறு - 08/12/2024
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணைந்து, அவர் அருளில் நனைந்து, அவரின் பாதம் நாடி வந்திருக்கும் எம் இனிய இறைமக்களே! உங்கள் அனைவரையும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு, இயேசுவின் வருகைக்கான ஆயத்தத்தை நினைவுபடுத்தி அழைத்து நிற்கின்றது.
பாரூக் இறைவாக்கினரின் எழுகுரல் ஒவ்வொரு மனிதனின் இதயத்தின் ஆழத்தை தொட்டுச் சென்று, தெளிவற்ற வாழ்வுக்கு, தீர்வற்ற துன்பங்களுக்கு, ஒளியற்ற உலகிற்கு புதிய நம்பிக்கையை கொடுக்கின்றார். ‘நீதியில் ஊன்றிய அமைதி’, ‘இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’ என்னும் பெயர்களால் கடவுள் எங்களை என்றென்றும் அழைப்பார் எனும் இந்நம்பிக்கை எமக்கான தெளிவை தருகின்றது. புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், எமது செயல்களும், பணியும் இறைவனுக்குரியதாக அமைகின்றது, அதுவே எமக்கான புதிய அர்த்தத்தையும் தருகின்றது என்று எடுத்தியம்புகின்றார். புனித லூக்கா எழுதிய நற்செய்தி நாம் எவ்வகையான ஆயத்தத்திற்கு தயாராக வேண்டும் என்று புனித திருமுழுக்கு யோவானின் அறைகூவல் வழியாக நினைவுபடுத்துகின்றார்.
நாம் எம்மை ஆயத்தம் செய்யவேண்டும். அது கிறிஸ்துவை வரவேற்கவே! உலகின் பல கோணங்களில், இன்று அமைதியை தொலைத்த மக்கள் அதிகமாகின்றனர், அவ் அமைதிக்காய் ஏங்குகின்றனர். உள்ளத்தை சுருக்கிக் கொண்டு, கைகளை விரித்து உதவாமல், கண்களை தூரநோக்கில் பார்க்க விரும்பாமல், கால்களை முடக்கிக் கொண்டு வாழும் பலர் மத்தியிலும், கடந்த நாட்களிலே, இயற்கை அணர்த்தங்களின் போது, பலர் செய்த உதவிகள், பலரின் ஆழமான செபங்கள், பலரின் பரிவுள்ளம் தந்த அமைதியும் சந்தோசமும், அவர் வருகையை தகுந்த முறையில் கொண்டாட மேற்கொள்ளப்பட்ட நல் முயற்சிகளே.
தேங்கிக் கிடக்கும் சேற்று நீர் போல் அல்லாமல், ஓடும் நீரில் உலகம் காணும் பயன்கள்போல், நாமும் எமக்குள் இருக்கும் சந்தோஷத்தைத் தொலைத்துவிடாமல், புதிய மனிதனாய் வாழ ஆரம்பிப்போம். எம்மை முழு ஆயத்தம் செய்ய நாம் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முயற்சியும் வெற்றிக்கான பாதையாக வேண்டுவோம். எமது நல் வாழ்வுக்காக, புனித திருமுழுக்கு யோவான்போல் தம்மை தியாகம்செய்து அர்ப்பணிக்கும் பலருக்காகவும் இன்றைய திருப்பலியில் வரம்கேட்டு மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
காண். எசா 30:19,30 சீயோன்வாழ் மக்களே, இதோ மக்களினத்தாரை மீட்பதற்காக அவர் வருவார். உங்கள் இதயங்களின் மகிழ்வில் ஆண்டவர் தமது குரலைக் கேட்கச் செய்வார்.
"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.
திருக்குழும மன்றாட்டு :
எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் திருமகனை எதிர்கொள்ள விரைந்து செல்வோரை உலகம் சார்ந்த செயல்கள் எவையும் தடைசெய்யாதிருப்பனவாக; விண்ணக ஞானத்தின் படிப்பினையோ எங்களை அவருடன் தோழமை கொள்ளச் செய்வதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
முதல் இறைவாக்கு
கடவுள் உன் பேரொளியைக் காட்டுவார்.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 5: 1-9
எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்துகொள்; என்றும் உள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். கடவுள் வானத்தின் கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார். ‘நீதியில் ஊன்றிய அமைதி’, ‘இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’ என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார்.
எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவுகூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார். பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னை விட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள். கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்து வரும்பொருட்டு, உயர்மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன. கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.
1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது,
நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.
2ab அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி
2cd “ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று
பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி
4 ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5 கண்ணீரோடு விதைப்பவர்கள்,
அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி
6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வாருங்கள்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 4-6, 8-11
சகோதரர் சகோதரிகளே,
உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.
மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 3: 4-6
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6
திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். “பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போது மான தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி :
பாரூ 5:5; 4:36 எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில்; உன் கடவுளிடமிருந்து உனக்கு வரும் மகிழ்ச்சியைப் பார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக. எங்கள்.
இறைமக்கள் மன்றாட்டு
1. அன்பின் பரம்பொருளே இறைவா! எமது திரு அவைக்காக மன்றாடுகின்றோம். திருமுழுக்கு யோவானைப் போல இவ்வுலகின் மக்களை தகுந்த முறையில் ஆயத்தம் செய்யும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதியும். நீதிக்காக, திரு அவையின் தூய்மைக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக, வறுமையை எதிர்த்து ஒலிக்கும் குரலாக, அடிமைத்தளையை தகர்க்கும் உரிமைக்கரங்களாக அர்ப்பணிக்கும் இவர்களை நிறை ஆசீர்கொண்டு வழிநடத்தியருள வேண்டுமென்று, ...
2. வல்லமையின் இறைவா! உமது வருகைக்காக ஆயத்தம் செய்யும் எங்களை ஆசீர்வதியும். நாமும் எமக்குள் இருக்கும் பாவங்களை தகர்த்தெறிந்து, அன்பை பகிரும் கருவிகளாக, இறை ஆசீரை வழங்கும் நல் உள்ளங்களாக, அழகிய விழுமியங்களை தாங்கும் சிறந்த உதாரணங்களாக, பிறர் உறவை கட்டியெழுப்பும் உழைப்பாளிகளாக நாம் மாற அருள்புரிய வேண்டுமென்று, ...
3. அன்பின் இறைவா! எமது நாட்டுக்காக மன்றாடுகின்றோம். பல்வேறு இயற்கை அணர்த்தங்களில் இருந்து எமது நாட்டை வழிநடத்தும். மேலும் இந்நாட்டுக்காக கரங்கொடுத்து உழைக்கும் நீதியுள்ள தலைவர்களை உருவாக்கும். உமது இறை ஆட்சியை எங்கும் நிலைநாட்ட அர்ப்பணிக்கும் நல்ல குருக்கள் துறவிகளையும் அளித்தருளும். என்றும் எப்பொழுதும் உண்மையை, உயர்வை நோக்கிச் செல்லும் கருவிகளாக இவர்களை உருவாக்கியருள வேண்டுமென்று, ...
4. ஞானத்தின் இறைவா! பரிட்சையை எதிர்நோக்கும் எமது பிள்ளைகளுக்காக மன்றாடுகின்றோம். தமது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் இவர்கள், தங்களை தகுந்த முறையில் ஆயத்தம் செய்யவும், இதனால் இவர்கள் கற்றுக்கொள்ளும் அறிவும், ஆற்றல்களும் இச்சமுகத்தின், இந்நாட்டின் மேலும் இவ்வுலகின் உயர்வுக்கு பயன்தர வேண்டுமென்று, ...
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment