திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - 15/12/2024

திருவருகைக் காலம் மூன்றாம் வாரம்




(இத்திருப்பலியில் ஊதா அல்லது ரோசா நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்)

திருப்பலி முன்னுரை

இறையே! இயேசுவே! எம் அழகிய அன்பரே! உமக்காகவே உம் வருகைக்காகவே ஏங்கும் எம் விழிகளுக்கு, அணையாத நம்பிக்கை சுடரை ஏற்றும்! இவ்வுலகின் போக்கை மாற்றும் மனித பாவங்களை தகர்த்தெறிந்து, நிலையான உம் வாக்கு எம் இதயத்தில் உயிராக உருவாகிட அருள்புரியும். 

இறை இயேசுவில் அன்புள்ள இறைமக்களே! இன்று திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். திருவருகை காலம் தரும் அழைப்பு மிக அழகானது. அறைகூவல் விடுக்கும் இறைவாக்கினரோடு இணைந்து பயணிக்கவும், எம்மை முழுவதுமாக மாற்றவும், எமக்குள் ஒரு புதிய அருளை உருவாக்கவும், இக்காலம் அதிசயம் தரும் காலமாகவும் அமைகின்றது. 

நற்செய்தியில், கேள்விகளை விடுக்கும் மக்களுக்கு, பதில்களைத் தரும் திருமுழுக்கு யோவானின் ஞானம் வியக்கத்தக்கதே. ஒவ்வொரு நிலையில் இருப்பவருக்கும் ஒவ்வொரு பதிலும் பெறுமதியானது. கேள்விகள் இலகுவானது போல தோன்றினும், அதை உண்மையாய் வாழ்வது என்பது இலகுவானது அல்ல. 

நாம் வாழும் இவ்வுலகு, நம்மை மெதுவாக இழக்கின்றது. எம்மைச் சூழ்ந்திருக்கும் நல் விழுமியங்கள் எம்மைவிட்டு அகன்றுபோகின்றது. அநீதியை நியாயப்படுத்தும் போது, பொய்களை உண்மைகளாக்கும் போது, பொறுப்புக்களை தவறவிடும்போது, குடும்பங்களை வெறுத்து ஒதுக்கும் போது, எம்மை சூழ்ந்திருப்போரின் நற்பெயரை கெடுக்கும்போது, எம் வார்த்தைகளால், உணர்வுகளால் பலரின் வெறுப்புக்குள்ளாகும்போது, சிலரின் வாழ்வை நிர்க்கதியாக்கும்போது இதே திருமுழுக்கு யோவானின் கேள்விகள் எமக்கும் கேட்கப்படுகின்றன. 

“நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று எம்மை நாமும் கேட்டு ஆன்ம சோதனை செய்வோமானால், கிறிஸ்துவின் வருகை அர்த்தம்பெறும். சேர்ந்து பயணிக்கும் எமது வாழ்விலே, இறைவன் தரும் அருள்வளங்களை நிறைவாகப்பெற்று வாழ முயற்சிப்போம். அழகான இவ்வுலகிலே இயேசுவைத் தாங்கும் கருவிகளாக உயரவே ஒளிரும் சுடராக வாழ்ந்துகாட்டுவோம், இதற்கான இறைவரம் கேட்டு இப்பலியிலே மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி

காண். பிலி 4:4-5 - ஆண்டவரில் என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், அகமகிழுங்கள்; ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, இயேசுவின் பிறப்புப் பெருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உம் மக்களை நீர் கண்ணோக்குகின்றீர்; அதனால் இத்தகைய மாபெரும் மீட்பின் மகிழ்வுக்கு நாங்கள் வந்து சேரவும் இதைப் பெருமகிழ்வோடும் மேலான வேண்டலோடும் என்றுமே கொண்டாடவும் ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

உன் பொருட்டு ஆண்டவர் மகிழ்ந்து களிகூருவார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்; “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் எசா 12: 2-3. 4. 5-6 (பல்லவி: 6)

பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.


2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,

நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல்,

அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.

3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். - பல்லவி


4 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;

அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;

மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்;

அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி


5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;

ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;

அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.

6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;

இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.- பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி, கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எசா 61: 1யஉ

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

நாங்கள் என்ன செய்யவேண்டும்?

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 10-18

அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் போதித்துக்கொண்டிருந்தபோது, “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார்.

வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார்.

படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.

அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

இறைமக்கள் மன்றாட்டு

 குரு: இம்மானுவேலனாக பிறக்க இருக்கும் எமது இயேசு, எம்மை மீட்கவும், எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கவும் பேரொளியாக துளங்கும் அவரிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. அன்பின் ஆண்டவரே! உமது திருமகனின் பிறப்பிற்காக உமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை ஆயத்தம் செய்யவென உழைக்கும் ஒவ்வொரு திருநிலைப்பணியாளர்களும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் அன்பு சீடர்களாக மாறிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. இறைவா! உமது வருகைக்காக எம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் நாம், உம்மை அறிந்து அறிவிக்கவும், நீர் எம்மை மீட்கவே வந்துள்ளீர் என்று ஏற்றுக்கொண்டு வாழவும் பிறரை வாழ்விக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. இறைவா! இவ்வுலகின் ஏழைகள் வறியவர்கள், துன்பப்படுவோர், அநாதைகள், வைத்தியசாலையில், சிறச்சாலையில் தவிப்போர் அனைவருக்கும் உமது பிறப்பின் செய்தி நம்பிக்கையையும், மன மகிழ்வையும், கொண்டுவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. ஆண்டவரே! நீர் படைத்த இந்த அழகான உலகிலே, வரட்சியும், வறுமையும் கொடுமைகளும், துன்பங்களும், கொலைகளும், வன்முறைகளும் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும், நீர் பிறக்கும் போது இவற்றினால் துயருறும் மக்களை கைவிட்டுவிடாமல் உமது பரிவிரக்கத்தினாலும், அன்பாலும் அவர்களை மீட்டருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5. ஆண்டவரே! ஏமது பங்கு மக்களின் வாழிவிலே நீர் கொண்டுவரும் அமைதியும், மகிழ்ச்சியும், சமாதானமும் நிறைவாய் தங்கிடவும், தாங்கள் நடந்துவந்த பாதையில்; ஏற்பட்ட தவறுகளை மன்னித்து, புதிய உலகம் படைக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பின் இறைவா! ஆவலுடன் எதிர்பார்க்கும் உமது பறப்பிற்காக எம்மை தயார்ப்படுத்தியருளும். இருளின் மத்தியில் ஒளியாகவும், தடைகளின் மத்தியில் பாதையாகவும், துயரங்கள் மத்தியில் ஆறுதலாகவும் இருக்கச் செய்தருளும். உம்மை கண்டு வாழ்வதில் மகிழ்ச்சிகொண்டு பிறரையும் உமது கருவியாக மாற்ரியருளும். நாம் ஒப்புக்கொடுக்கும் மன்றாட்டுக்கள் உமதண்டை வந்து சேர்வதாக. என்றேன்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம்; நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.


திருவருகைக் காலத்தின் தொடக்கவுரை

திருவிருந்துப் பல்லவி :

காண். எசா 35:4 உள்ளத்தில் உறுதியற்றோரே! திடன் கொள்ளுங்கள்; அஞ்சாதிருங்கள்; இதோ! நம் கடவுள் வருவார்; நம்மை விடுவிப்பார் எனக் கூறுங்கள்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள். 

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments