தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா
திருப்பலி முன்னுரை
அம்மா! உம் உதரம் ஈந்து எம் மீட்பரை பெற்றீர்; இதனால் இவ்வுலகம் மாட்சி பெற, உமது வாழ்வை அர்ப்பணித்தீர்; உம் பிள்ளைகள் நாம் உம் அண்டை வருகின்றோம்; எம்மை காரும் தாயே!
கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள இறைமக்களே! இன்று தாய் திரு அவையோடு இணைந்து புனித கன்னிமரியாவின் அமல உற்பவ பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் எமக்கு இது ஒரு பெரும் மகிழ்ச்சியே. 1854ம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்தினாதர் இதை ஒரு கொள்கைப் பிரகடணமாக ஏற்படுத்தினார். அன்றிலிருந்து இவ்வுலகின் அனைத்து மக்களும் அன்னைக்கான தங்களின் அளவில்லா அன்பையும், அவள்மேல் கொண்ட பக்தியையும் இதயத்தில் வளரச் செய்தனர். இன்றைய வழிபாட்டின் தொடக்கவுரையிலே இவ்விழாவைக் கொண்டாடுவதன் அர்த்தத்தையும் நோக்கத்தையும் தெளிவாக காட்டுகின்றது: புனிதமிக்க கன்னி மரியாவைப் பிறப்புநிலைப் பாவத்தின் மாசுகள் அனைத்திலிருந்தும் காப்பாற்றினீர்; உமது நிறை அருளால் அவரை அணிசெய்து உம் திருமகனுக்கு ஏற்ற அன்னையாக அவரை முன்னேற்பாடு செய்தீர்; அம்மகனுடைய மண மகளாகிய மாசுமறுவற்ற எழில் மிகுந்த திரு அவையின் பிறப்பை முன்னறிவித்தீர்;
கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவற்கு முன்பாக, அன்னைக்கான இவ்விழா எமக்கு பெரும் அர்த்தங்களை காட்டிநிற்கின்றது. அவளும் தூய்மையானவள், அவள் சென்மபாவமின்றி உற்பவித்தவள், இதனால்தான் இவள் உதரத்தில் இறைமகனும் உதிக்கலானார். நாமும் இறைவனை நோக்கிப் பயணிக்கும் எமது வாழ்விலே, தூய்மையை அணிகலமாகக் கொண்டு வாழ அழைக்கப்ப்ட்டுள்ளோம். புனித கன்னிமரியா மீது கொண்டுள்ள எமது ஆர்வம், எமது நம்பிக்கை, அவளின் பரிந்துரைக்கான எமது செபங்கள், திருச்செபமாலைகள், இவ்வுலகிற்கான அவளின் பேரில் நாம் மேற்கொள்ளும் பக்க்திமுயற்சிகள், திரு யாத்திரைகள் அனைத்தும் எம்மை தூய்மைக்கான வழியில் நடத்துவதாக. அன்னையிடம் எம்மையும் இவ்வுலகையும் ஒப்புக்கொடுத்து இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
எசா 61:10 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் அன்மா பூரிப்படையும்: ஏனெனில் நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போல விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார். நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, கன்னி மரியாவின் அமல உற்பவத்தின் வழியாக உம் திருமகனுக்கு உகந்த இல்லிடத்தை ஏற்பாடு செய்தீரே; இவ்வாறு உம் திருமகனுடைய இறப்பின் முன்விளைவாக மரியாவை மாசுகள் அனைத்திலிருந்தும் பாதுகாத்த நீர், அவரது பரிந்துரையால் நாங்களும் தூய்மை அடைந்து உம்மிடம் வந்து சேர அருள் புரிவீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்?
நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.
ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.
மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2- 3ab. 3c-4 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்
உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி
3c உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12
சகோதரர் சகோதரிகளே,
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும்
கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 1: 28
அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் மீட்பின் பலிப்பொருளை மனம் இரங்கி ஏற்றருளும்; அவரை மாசுகள் அனைத்திலிருந்தும் நீர் உமது அருளால் முன்னரே காப்பாற்றியது போல, அவரது பரிந்துரையால் நாங்கள் குற்றம் அனைத்திலிருந்தும் விடுதலை பெறச் செய்வீராக. எங்கள்.
தொடக்கவுரை: மரியா, திரு அவை பற்றிய மறையுண்மை
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
புனிதமிக்க கன்னி மரியாவைப்
பிறப்புநிலைப் பாவத்தின் மாசுகள் அனைத்திலிருந்தும் காப்பாற்றினீர்;
உமது நிறை அருளால் அவரை அணிசெய்து
உம் திருமகனுக்கு ஏற்ற அன்னையாக அவரை முன்னேற்பாடு செய்தீர்;
அம்மகனுடைய மண மகளாகிய மாசுமறுவற்ற எழில் மிகுந்த
திரு அவையின் பிறப்பை முன்னறிவித்தீர்;
ஏனெனில் புனிதமிக்க கன்னியே
எங்கள் பாவங்களைப் போக்கும் மாசற்ற செம்மறியான
உம் திருமகனை எங்களுக்குத் தருபவராகவும்
மற்ற எல்லாருக்கும் மேலாக
அக்கன்னியே உம் மக்களுக்காகப் பரிந்துரைப்பவராகவும்
புனித வாழ்வின் முன்மாதிரியாகவும் விளங்கச் செய்தீர்.
ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து,
நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி,
மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:
தூயவர்.
திருவிருந்துப் பல்லவி
மரியே! உம்மைப் பற்றி, மாட்சிக்கு உரியவை சொல்லப்பட்டுள்ளன. ஏனெனில் நீதியின் கதிரவனும் எங்கள் கடவுளுமாகிய கிறிஸ்து உம்மிடமிருந்தே தோன்றினார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
'ஆண்டவரே எங்கள் இறைவா, புனித மரியாவின் உற்பவத்தில் அவரை மாசுகளிலிருந்து தனிப்பட்ட முறையில் காப்பாற்றினீரே; நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு 'அப்பாவக் காயங்களிலிருந்து எங்களுக்கு நலம் அளிப்பதாக. எங்கள்.
இறைமக்கள் மன்றாட்டு
1. அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், எமது திரு அவைவை அவளின் பாதம் ஒப்புக்கொடுப்போம். அவளின் பரிந்துரை வழியாக, அனைத்து தீமைகளில் இருந்தும் இத்திரு அவையை பாதுகாக்கவும், அனைத்து ஆன்மாக்களையும் இறைவன் பாதம் கொண்டுசேர்க்கும் உன்னத பணியை தொடரும் பணியாளர்களுக்காகவும் இறை வரம் வேண்டி, ...
2. தூய்மையின் அணிகலனாக உம் அன்னையை எமக்குத் தந்த இறைவா! நாம் அனைவரும் அன்னையை அதிகம் விரும்பும் மக்களாக உருவாகுவோமாக. அவள் எமக்கு கற்றுத் தரும் இறை விழுமியங்களை எமது வாழ்வில் கொண்டுவாழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
3. இவ்வுலகை அதிகம் அன்பு செய்யும் உமது அன்னையை எமக்கும் தாயாக தந்த இறைவா! உமது திருமகன் இயேசுவை கருவிலும், இதயத்திலும் சுமந்தது போல், இவ்வுலகையும் தன் இதயத்தில் சுமந்து அதன் மனமாற்றத்திற்காக உமது செய்தியை நாளும் எமக்கு தரும் அன்னையின் அறிவுரைகளை சிரமேற்று, வாழ்ந்துகாட்டிட அருள்புரிய வேண்டுமென்று, ...
4. சிலுவை வரைக்கும் இறை திட்டத்தை நிறைவேற்றி, தனது மகனின் பாஸ்கா மறைபொருள் வழியாக இவ்வுலகோடு ஒன்றித்து செயற்படும் அன்னையைப் போல், நாமும் இறை திட்டத்தை எமது வாழ்வில் கண்டுணர்ந்து செயற்பட அருள்புரிய வேண்டுமென்று, ...
5. அன்னையின் பாதம் எமது பங்கையும் எமது பங்கு மக்களையும் ஒப்புக்கொடுக்கின்றோம். எந்த வேளையிலும், எந்த துன்பத்திலும், எந்த இடரல்களிலும் அன்னை எப்பொழுதும் எமக்காக பரிந்து பேசி தனது மகன் இயேசுவின் நிறை ஆசீரை எமக்கு அளித்திட அருள் கூர்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்தந்தை ச, ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment