கிறிஸ்து பிறப்பு 25/12/2024 விடியற்காலைத் திருப்பலி மற்றும் பகல் திருப்பலி

 கிறிஸ்து பிறப்பு 25/12/2024




விடியற்காலைத் திருப்பலி

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறைமக்களே! 

விண்ணிலே தோன்றியதோர் விடிவெள்ளி, அற்புத விடிவெள்ளி, மண்ணிலே இறைவனின் அருள் பெற மகிமையின் அடையாளமாய் தோன்றியதே இந்த விடிவெள்ளி, இதோ இன்று தோன்றுகின்றது. ஒரு புதிய சரித்திரம் படைக்க இவ்வுலகில் இறைவன் தோன்றிவிட்டார். படைத்தவர், தன்னை படைப்புக்குள்ளே கொண்டுவந்துவிட்டார், இறைவன் இன்று மனிதனாக பிறந்துவிட்டார். கபிரியேல் தூதர் சொன்ன இறைவனின் வார்த்தை இன்று நிறைவேறுகின்றது. அன்னையின் 'ஆகட்டும்' எனும் வார்த்தையால் மனிதர் அனைவருக்கும் வாழ்வு கிடைத்துவிட்டது, பாவம் உடைக்கப்பட்டுவிட்டது. விண்ணவர் தூதர் அணிகளோடு சேர்ந்து நாமும், 'உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை உண்டாகுக, பூவுலகில் நல் மனம் உடையோருக்கு அமைதியும் ஆகுக' என்று புகழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் பாடுகின்றோம். ஏனெனில் கிறிஸ்து இயேசு எனும் மெசியா தாவின் ஊரில் இன்று பிறந்துள்ளார். இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே. 

இயேசுவின் பிறப்பில் இருந்து அவரது ஒவ்வொரு அசைவும் முன்குறிக்கப்பட்டவை, வரலாற்றில் எழுதப்பட்டவை. அவர் தடம் பதித்துச் சென்றவைகள் வரலாற்றையே விழித்தெழச் செய்தவை. இவரே எமக்கு வழிகாட்டும் விளக்கு, அர்த்தம் தரும் ஆன்ம மருந்து. இவர் பிறப்பில் இருந்து நாம் வாழ்வைக் கற்றுக்கொள்ளவேண்டும். எளிமை வாழ்வில் இறைவன் இருக்கிறார், ஏழைகளில் இறைவன் தெரிகின்றார், உண்மையே இயேசுவின் மறு பெயர். இன்று உலகம் எடுத்துச் சொல்லும் நற்செய்தியை எம் உள்ளங்களில் தருகின்றார். தொலைந்தவர்கள், துவண்டுபோனவர்கள், வறுமையில் இருப்பவர்கள், உறவை இழந்தவர்கள், நொந்துபோனவர்கள், நிலைமாறி போனவர்கள் இவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை தரும் விதையாகின்றார் எம் பாலன் இயேசு.

பாலன் இயேசுவுக்காய் வாழுவோம், பாவம் தொலைத்து அவர் பாதம் வழி செல்வோம். நற்செய்தியை அறிவிப்போம், நல்ல கிறிஸ்தவராக மாறுவோம். 

குறிப்பாக, இவ்வுலகின் அனைத்து தீமைகளால் சூழப்பட்டு, தொலைத்த வாழ்வைத் தேடும் பலரின் கண்ணீருக்கு இப்பிறப்பு ஒரு விடியலாய் அமைவதாக. பலரின் இதயத்திற்கு மகிழ்வை அளிப்பதாக. துன்பங்களுக்கு ஓர் தீர்வாக அமைவதாக.  இதற்கான வரங்களைக் கேட்டு தொடரும் இப்புனித பலியிலே கலந்துகொள்வோம். 


வருகைப் பல்லவி

காண். எசா 9:1,5; லூக் 1:33 இன்று நம்மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ 'வியப்பம் உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை' என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, மனித உடல் எடுத்த உம் வார்த்தையின் புதிய ஒளியால் நிரப்பப்பட்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இது எங்கள் செயலில் சுடர்விட்டு எங்கள் மனதில் நம்பிக்கை வழியாய் ஒளிர்வதாக. உம்மோடு.


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.


முதல் இறைவாக்கு

இதோ, உன் மீட்பர் வருகின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 11-12

உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ, உன் மீட்பு வருகின்றது. அவரது வெற்றிப் பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.” ‘புனித மக்களினம்’ என்றும் ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவள்’ என்றும் இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 97: 1,6. 11-12

பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.


1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;

பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!

6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;

அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி


11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.

12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;

அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-7

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப் பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

இடையர் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20

வானதூதர் இடையர்களை விட்டு விண்ணகம் சென்ற பின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


இறைமக்கள் மன்றாட்டு

குரு: காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது, என்ற எசாயாவின் குரல் எம்மையும் நம்பிக்கையின் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. இயேசுவின் பிறப்பு எமக்கு ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை எழுதவேண்டும். பரிசுத்த வாழ்வுக்கான ஏணிப்படியாக அமையவேண்டும். இவரே எமது மீட்பர், இவரே எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து மீட்க பிறந்துள்ளார் எனும் நம்பிக்கையில் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. ஆண்டவரே, உமது மகன் இயேசுக்கிறிஸ்துவை இவ்வுலகு அறிந்து அன்புசெய்ய சித்தம் கொண்டீரே, உமக்கு நன்றி சொல்கின்றோம். அத்திருமகனை உலகறிய நற்செய்தியாக எடுத்தியம்பும் திரு அவைப் பணியாளர்களை கரம்பிடித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. ஆண்டவரே! உமது திரு மகன் இயேசு வழியாக இவ்வுலகு உம்மை யார் என்று கண்டுகொள்ளச் செய்தீரே உமக்கு நன்றிசொல்கின்றோம். ஒன்றிக்கும் ஒரே திரு அவையாக நாம் பயணிக்கும் எமது வாழ்விலும் இயேசு பாலனின் பிறப்பு செய்தி நம்பிக்கையையும், மகிழ்வையும், பிறரோடு உள்ள கூட்டுறவையும் வளர்ப்பதாக. இவ்வுலகம் தரமுடியாத வாழ்வின் விழுமியங்கள், பண்புகள் இயேசுவின் பிறப்பின் கனிகளாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்பின் ஆண்டவரே! பல்வேறு நாடுகளில் யுத்தத்தினால், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் இவ்வுலகின் மக்கள் அனைவருக்கும் இயேசு பாலனின் பிறப்புச் செய்தி, வெறுமையில் நிறைவைத் தருவதாக. உயர்ந்து போகும் கோபுரங்களை கட்டவல்ல, மாறாக மனித உள்ளத்தை உயர்த்திக் காட்டவும்,  உயரவே நிற்கும் போதைக் கலாசாரத்தை தாங்கவல்ல, மாறாக அன்பின் வெகுமதியை உணர்த்திக்கொள்ளவும், உண்மையை உடைக்கும் வன்முறைகளை அல்ல மாறாக பாசத்தை எண்பிக்கும் உறைவுகளை தளைத்திடச் செய்யவும் இயேசுவின் பிறப்பு வழிசெய்யவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இன்றைய கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவை அமையச் செய்த தந்தையே இறைவா! ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்கு அடையாளமாய் இருப்பது போல, இயேசுவின் பிறப்பு எமது குடும்பங்களுக்கு அடையாளமாய் இருப்பதாக. அக்குழந்தையின் மகிழ்விலே எம்மிலுள்ள பிரிவினைகள் களைந்து, பிறழ்வுகள் தகர்த்தெறிந்து, கோபமும் கவலையும் விட்டொழிந்து, கண்ணீரும் ஏக்கமும் துடைத்து, புதிய உறவுகள் அமைக்கவும், பாலகனின் ஆசி நிறைவாய் தங்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு. எம்மை அதிகம் அன்பு செய்யும் தந்தையே!  இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், எமது கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியலாக எம்மை தேடிவந்தீரே.  எமக்கும் எமது வாழ்வுக்கும் நிறைவைத் தர வந்தீரே. உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், உம் அன்பை விட்டு பிரியாமல் இருக்கவும், எமது இயலாமையிலும், பலவீனங்களிலும் எமக்கு தோல்கொடுத்து உதவியருளும். நாம் மனமுவந்து கேட்கும் இந்த விண்ணப்பங்கள் உமதண்டை வந்து சேர்வதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகள் இன்றைய பிறப்பு விழாவின் மறைநிகழ்வுகளுக்கு ஏற்றவையாக அமைய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனிதராகப் பிறந்த அவரே கடவுளாகவும் ஒளிர்வது போல இம்மண்ணகக் கொடைகள் விண்ணகத்துக்கு உரியவற்றை எங்களுக்கு வழங்குவனவாக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III 


திருவிருந்துப் பல்லவி :

காண். செக் 9:9 மகளே சீயோன், மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம், ஆர்ப்பரி; இதோ! உன் அரசர் வருகிறார். அவர் தூயவர்; உலகின் மீட்பர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, உம் திருமகனின் பிறப்பினை மகிழ்ச்சி நிறைந்த இறைப்பற்றுடன் நாங்கள் கொண்டாடுகின்றோம்; ஆழமான பொருளுள்ள இம் மறைநிகழ்வுகளை முழு நம்பிக்கையுடன் கண்டுணரவும் மிகுந்த அன்பு ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளவும் அருள்வீராக. எங்கள்.



பகலில் திருப்பலி


வருகைப் பல்லவி

காண். எசா 3:5 ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல்

உள்ளது. அவரது பெயர் மாண்புறு மன்றத்தின் தூதர் என அழைக்கப்படும். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

இறைவா, மனிதத்தன்மையின் மாண்பினை வியத்தகு முறையில் படைத்து, அதனினும் வியத்தகு முறையில் சீர்படுத்தினீர்; எங்களது மனித இயல்பில் பங்குகொள்ள அருள்கூர்ந்த அவரது இறை இயல்பில், நாங்கள் பங்கு பெற அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும். "கன்னி மரியாவிடமிருந்து பிறந்து மனிதர் ஆனார்" எனச் சொல்லும்போது தாழ்ந்து பணிந்து வணங்கவும்.


முதல் இறைவாக்கு

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6 (பல்லவி: 3b)

பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.


1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;

ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.

அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி


2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;

பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.

3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி


3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!

மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி


5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;

யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.

6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்றும், “நான் அவருக்குத் தந்தையாய் இருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்” என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, “கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


அல்லது குறுகிய வாசகம்

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-5, 9-14

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இன்றைய பெருவிழாவின் காணிக்கையிலிருந்து வெளிப்படும் உமது மன்னிப்பு, எம்மை உம்மோடு ஒப்புரவாக்கி, முழுமையான இறைவழிபாட்டுக்கு எங்களை இட்டுச் செல்வதாக; எனவே இக்காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் விளங்கச் செய்வீராக. எங்கள்.

ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I, II, III 


திருவிருந்துப் பல்லவி : 'காண். திபா 97:3

உலகின் எல்லைகள் அனைத்தும் நம் கடவுளின் மீட்பைக் காணும்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

இரக்கமுள்ள இறைவா, இன்று உலகின் மீட்பர் பிறந்துள்ளார்; அதனால் எங்கள் இறைப் பிறப்புக்கு ஊற்றாக அவர் இருப்பது போல எங்களுக்கு அழியா வாழ்வை அளிப்பவராகவும் இருப்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி. 

Comments