திருப்பலி முன்னுரை
இன்று நமது தாயாம் திருஅவை தூய லூர்து அன்னையின் திருவிழாவைக் கொண்டாட நம்மை அழைக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் மலையடிவாரத்திலுள்ள லூர்து நகர் என்ற குக்கிராமத்தின், ஆற்றருகே 14வயது சிறுமி பெர்னதெத் சூபிரூஸ் தன் தோழிகளுடன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென ஓர் ஒளி, கண்களைக் கூசச் செய்தது. சிறுமி ஒளியை நோக்கி உற்றுப்பார்க்க, அங்கே அழகிய பெண் தன் கையில் செபமாலை ஏந்தியவாறு காட்சியளித்தார். செபமாலைச் சொல்லும்படி பெர்னதெத்துக்கு அழைப்பு விடுத்தார். 18 நாட்களுக்குத் தொடர்ந்து வரும்படியும், பாவிகள் மனம் திரும்ப செபிக்கவும், அங்கிருந்த குருவிடம் சொல்லி ஒரு ஆலயம் கட்டவும் கேட்டுக் கொண்டார். 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் நாள் அன்னையின் அற்புதக் காட்சித் தொடங்கி, 1858ம் ஆண்டு ஜூலை 16ம் நாள் வரை தொடர்ந்து 17முறை காட்சியளித்தார். பெர்னதெத் அப்பெண்ணின் பெயர் என்ன என்று கேட்டபோது 'நாமே அமலோற்பவம்' என்று பதிலுரைத்தார். இறுதித் தீர்ப்புக்குப் பிறகுதான் அன்னை ஓய்வு பெறுவார். அதுவரை அன்னை மரியா தமது பிள்ளைகளைக் காக்கும் பணியில் செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்' என புனித ஜான் மரிய வியான்னி கூறுவது உண்மையிலும் உண்மை. பாவிகளுக்காகச் செபிக்கவும், மனம் வருந்தவும் அழைத்தார் லூர்து அன்னை. இம்மையில் மட்டுமன்று, மறுமையிலும் நம் அனைவரையும் மகிழ்விப்பதாக வாக்களித்தார். நாமும் தூய லூர்து அன்னையின் பரிந்துரையால் நலம் பெற பக்தியோடு இன்றைய திருப்பலியில் பங்கெடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: ஆண்டவரை நினைந்து தாய் அன்னையின் உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்தியதே, மீட்பராம் கடவுளை நினைத்து அவள் மனம் பேருவகை கொண்டதே. இந்த சிந்து யாத்திரை அன்னையின் பதியிலே கூடியிருக்கும் அவள் பக்தர்கள் எமக்கு, நமது ஆண்டவர் இயேசுவை நினைந்து போற்றவும், பெருமைப்படுத்தவும் அவள் அழைப்புவிடுக்கின்றாள். எமது விண்ணப்பங்கள், உள்ளத்தின் அபிலாஷைகள் அனைத்தையும் அன்னை வழி, இறை தந்தையிடம் ஒப்புக்கொடுப்போம்.
1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்புள்ள ஆண்டவரே! இன்று அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிற்கும் எமது மறை மாநில ஆயர், அவர்களோடு இணைந்து பலி ஒப்புக்கொடுக்கும் குருக்கள் துறவிகளை உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்புள்ள ஆண்டவரே! உமது தாயின் பதியிலே கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு. என்றுமே கன்னியான மரியாவை இவ்வுலகின் வெளிச்சமாக எமது வாழ்வுக்கான மாதிரியாகவும் தந்த இறைவா! உம்மைப் போற்றுகின்றோம். ஒவ்வொரு ஆன்மாவையும் நேசித்து, நாம் ஒவ்வொருவரும் இறை மாட்சி காணும் ஆர்வத்தை உம் அன்னைக்கு அளித்ததற்காக உமக்கு நன்று கூறுகின்றோம். அவளின் பொருவிழாவைக் கொண்டாடும் நாம் அவளை ஏறெடுத்துப் பார்த்து பின்பற்றுகின்ற வரத்தை எங்களுக்கு தாரும். நாம் செல்லும் பாதை வரைய துணிவைத் தாரும், இவ்வாழ்க்கையை புடமிட அவள் பரிந்துரையை பெற்றுத் தாரும். உம்மிடம் ஒப்புக்கொடுத்த எமது தேவைகளும் மன்றாட்டுக்களும் அர்த்தப் பெறுவனவாக. நாம் விரும்பி கேட்கும் அருளும் ஆசீரும் அவை பெற்றுத்தருவனவாக. இவற்றை எல்லாம் ஏங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மைப் பார்த்து கேட்கின்றோம், ஆமென்.
No comments:
Post a Comment