Saturday, 17 February 2024

தவக்காலம் - முதல் ஞாயிறு - 18-02-2024



முன்னுரை

இறைவனின் அழைப்பை ஏற்று, வாழ்வையே பலியாக ஒப்புக்கொடுக்க கூடிவந்திருக்கும் என் இனிய இறைமக்களே! உங்கள் அனைவரையும் இயேசுவின் இனிய பெயரால் அழைத்து நிற்கின்றோம். தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு வாரத்திற்குள் கால்பதிக்கும் நாம்,  'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' எனும் இயேசுவின் அழகிய மகுட வாசகத்தோடு எமது தவக்காலத்தை - நற்பது நாள்கள்கொண்ட நீண்ட பயணத்தை ஆரம்பிக்கின்றோம். இப்பயணம் அடிமை வாழ்விலிருந்து விடுதலை வாழ்வுக்கான பயணமாக் பாவ வாழ்விலிருந்து புனித வாழ்வுக்கான பயணமாக, கறைபடிந்த வாழ்விலிருந்து அருள் நிறைந்த வாழ்வுக்கான பயணமாக அமைகின்றது. இயேசுவின் இரத்தத்தோடு மீட்பின் விலையை எமது ஆன்ம வாழ்வுக்கான உயர்ச்சியாகக் கொண்டு தொடங்கும் பயணமாக இது அமைகின்றது. ஆகவே, சோதனைக்கு உட்பட்டு வெற்றிகண்ட இயேசுவோடு சேர்ந்து பயணிப்போம். துன்பங்கள் வழியாகத்தான் துணிவு பெறும் பயணமாக, சுமைகள் வழியாகத்தான் தெளிவுபெறும் பயணமாக, கண்ணீர் வழியாகத்தான் தைரியம்பெறும் பயணமாக இதை மாற்றுவோம். 

உள்ளம் தெளிந்து, பாதை அறிந்து, எமது பாவங்கள் உணர்ந்து, பரிகாரங்கள் பல தேடி இப்பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். எம்மை எல்லாம் படைத்த இறைவன், எம்மேல் கொண்ட அன்பினால் எம்மைக் காத்தருள்வார் எனும் உண்மையை இன்றைய இறைவார்த்தகள் தெளிவுபடுத்துகின்றன. அவரிலே முழு நம்பிக்கை கொண்டவர்களாக தொடரும் இக்கல்வாரிப் பலியில் இறைவரம் கேட்டு மன்றாடுவோம்;.


வருகைப் பல்லவி      காண். திபா 90:15-16

என்னைக் கூவி அழைப்பவருக்கு நான் செவிசாய்ப்பேன்; அவரை விடுவித்துப் பெருமைப் படுத்துவேன். நீடிய ஆயுளால் அவருக்கு நிறைவளிப்பேன்.

  • 'உன்னதங்களிலே' சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, ஆண்டுதோறும் நாங்கள் கடைப்பிடிக்கும் தவக் கால அருளடையாளச் செயல்களால் கிறிஸ்துவின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்வதில் முன்னேற எங்களுக்கு உதவியருளும்; அதனால் அவற்றின் பயன்களை எங்கள் நன்னடத்தையால் அடைவோமாக. உம்மோடு.

1ம் இறைவாக்கு

தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 8-15

வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை.

பதிலுரைப் பாடல்     திபா 25

பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

2ம் இறைவாக்கு  

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-22

இப்போது உங்களை மீட்கும் திருழுழுக்கிற்கு இந்த நீர் முன்னடையாளமாயிருக்கிறது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி           திபா 95

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நற்செய்தி இறைவாக்கு

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

  • 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.


விசுவாகிகள் மன்றாட்டு

குரு: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை எனும் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, எமது பாதையைசீரமைத்து, உடன்பயணிக்கும் இயேசு விடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1, எமது ஆன்மிகப் பாதையிலே எம்மை தெளிவான பாதைக்கு இட்டுச் செல்ல அரும்பாடுபடும்  அனைத்து மறைபணியாளர்களுக்கும் இறைவன் ஞானம் நிறைந்த வல்லமையையும், அருளையும் அளித்தருள வேண்டுமென்று ...

2. புதிதாக ஆரம்பித்திருக்கும் இத்தவக்காலத்திலே தம்மை முழுமையாக இணைத்து, புதிய உடன்- படிக்கையாம் இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பெற தம்மை அர்ப்பணிக்கும் அனைவரும், இறை மன்னிப்பையும், அவர் இரக்கத்தையும் நிறைவாகப் பெறும் பாக்கியம்பெற அருள்பாலிக்க வேண்டுமென்று 

3. எமது பங்குச் சமூகத்திலே, தடுமாறி, தடம்மாறி, அர்த்தமற்ற வாழ்வோடு பயணிக்கும் பலரினுடைய வாழ்வுக்காகமன்றாடுவோம். இத்தவக்காலத்திலே 

இவர்கள் வாழ்விலே இறைவன் தொடர்ந்தும் பேசவும், இவர்கள் உள்ளம் தேடும் அமைதியும், மகிழ்ச்சியும் இறைவனருளால் நிலையாகக் கிடைக்கப்பெற அருள்புரிய வேண்டுமென்று ...

4. எம்மைச் சுற்றி காணப்படும் அனைத்து தீமைகளிலும் வெற்றிகொண்டு, இயேசுவின் சிலுவையோடு வாழ்வுக்கு அர்த்தம் காணவும், புதிய சமுகம் படைக்கும் உயிர்ப்பின் மக்களாக திகழ வரமருள வேண்டுமென்று ...

குரு: அன்பின் ஆண்டவரே, உமக்கு முன்பாக வீற்றிருக்கும் நாம் அனைவரும் பாவிகள் என்பதை தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றோம். கடவுள் வடிவில் விளங்கிய நீர், எம்மைப் போல அடிமையின், ஏழையின் வடிவை ஏற்று மனிதனாகப் பிறந்து மீட்பைப் பெற்றுக்கொடுத்தீர். நாமும் அதை உணர்ந்து வாழவும், சிலுவை தருகின்ற வெகுமதிகளை ஏற்று வாழவும் எம்மை உருவாக்கியருளும். நாம் உமது பாதம் தந்திருக்கும் இவ்வேண்டுதல்களுக்கு செவிசாய்த்து எமக்கு அதன் அருள்வழங்களைப் பெற்றுத் தருவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்து புனிதமிக்க அருளடையாளக் கொண்டாட்டத்தைத் தொடங்குகின்றோம்; இவற்றைத் தகுந்த முறையில் ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி      மத் 4:4

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாயினின்று புறப்படும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்கிறார்.

அல்லது  காண். திபா 90:4

ஆண்டவர் தம் தோள் வலிமையினால் உம்மைப் பாதுகாப்பார்; அவருடைய இறக்கைகளின்கீழ் நீர் தஞ்சம் அடைவீர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புத்துயிர் தரும் விண்ணக உணவினால் எங்கள் நம்பிக்கை ஊட்டம் பெறவும் எதிர்நோக்கு வளரவும் அன்பு உறுதி அடையவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உயிருள்ள, உண்மையான உணவாம் கிறிஸ்துவை நாங்கள் ஆர்வத்துடன் நாடக் கற்றுக்கொள்வதோடு உமது வாயினின்று புறப்படும் எல்லா வார்த்தைகளாலும் வாழ்ந்திட ஆற்றல் பெறுவோமாக. எங்கள்.


மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்கள் மீது நிறைவான ஆசி இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் துன்பத்தில் நம்பிக்கை வளர்வதாக் சோதனையில் நற்பண்பு உறுதி பெறுவதாக் நிலையான மீட்பு அருளப்படுவதாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...