Sunday, 4 February 2024

பொதுக் காலம் ஐந்தாம் ஞாயிறு - 04.02.2024

 பொதுக் காலம் ஐந்தாம் ஞாயிறு



முன்னுரை

(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)

என் அன்புக்கினிய இறைமக்களே! இன்றைய நாளின் முதல் பணியாக, நாம் ஒன்றாகக் கூடி, இறைவனுக்கு நன்றிப் பலி ஒப்புக்கொடுத்து, அவர் தருகின்ற அருள் வளங்களைப் பெற்று வாழ வந்திருக்கின்றோம். பொதுக்காலம் ஐந்தாம் வாரம் எம்மை ஓர் ஆழ்ந்த இறையியல் சிந்தனைக்கு அழைத்துச் செல்கின்றது. கடவுளின் அழைப்பும், அவரது தேர்வும், அவரது பணியின் தன்மையும், இயல்பும் இன்றைய இறைவார்த்தைகள் வழியாக கொடுக்கப்படுகின்றன. 

முதலாவது இறைவார்த்தையிலே, யோபுவின் வாழ்வு சோதிக்கப்படுகின்றது. யோபு ஒரு நீதிமான், கடவுள் அச்சம் உடையவர் இருப்பினும், அவர்படும் துன்பம் அவரின் இறை நம்பிக்கையை சோதிக்கின்றது. இரண்டாவது இறைவார்த்தையில், நற்செய்தி மட்டில் கொண்டிருக்கும், புனித பவுலின் வீரம் நிறைந்த வார்த்தைகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன: 'நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்' எனும் வார்த்தைகள், இயேசுவின் மேல்

கொண்ட அதீத அன்பையும், பிரமாணிக்கத்தையும் எண்பிக்கின்றன. நற்செய்தி இறைவார்த்தையில், இயேசுவின் பொறுப்புமிக்க பணி ஆர்வத்தையும், சீடர்களின், சீடத்துவ உருவாக்கத்தையும் நற்செய்தியாளர் தெளிவாக காட்டுகின்றார். நாமும் அழைப்புப் பெற்றவர்கள், எமது வாழ்வும் இறைவனை நோக்கிச் செல்கின்ற நாளாந்த பயணமாக இருக்கின்றது. நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருக்கின்றோம் என்பதற்காக, துன்பப்பட மாட்டோம் என்பது அர்த்தமற்ற கருத்து என்பதை முதலாம் இறைவார்த்தை உணர்த்துகின்றது. ஆகவே, இயேசுவில் எமது வாழ்வு கண்ட ஆழமான உருவாக்கம், என்றும் அவரைச் சான்றுபகர அழைத்துச் செல்ல வேண்டும். நாம் வாழும் சமுதாயம், ஆரோக்கியமற்று, பாவம் செய்வதன் உணர்வைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. பொய்யான விழுமியங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றது. நாம் சான்று பகரும் அன்பின் மக்களாக வாழுவோம். இயேசுவை எடுத்துச் சொல்லி வாழ்ந்து காட்டுவோம். இவ்வரங்களைக் கேட்டு தொடரும் பலியில் மன்றாடுவோம்.

வருகைப் பல்லவி திபா 94:6-7

வாருங்கள்! கடவுளைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். ஏனெனில் அவரே நம் ஆண்டவராகிய கடவுள்.

உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு:

யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.

பதிலுரைப் பாடல் திபா 147

பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்;!

இரண்டாம் இறைவாக்கு :

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!

நற்செய்தி இறைவாக்கு:

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

பல்வேறு பிணிகளால் வருந்தியவரை இயேசு குணப்படுத்தினார்.

நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்


விசுவாசிகள் மன்றாட்டு

குரு: நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! எனும் புனித பவுலின் வாழ்வின் குறிக்கோள்கள், எமது பணியின் எடுகோள்களாக அமைவதாக. நாம் ஒரே சமூகமாகக் கூடி, சான்று பகரும் மக்களாக, திரு அவையின் வேண்டுதல்களை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. திரு அவையின் வாழ்வுக்காக மன்றாடுவோம்: நற்செய்திப் பணி ஆற்றுகின்ற அனைவரும், இயேசுவையே முன்னிலைப்படுத்தி, தளரா உள்ளம் கொண்டு, வாழ்வால், வார்த்தையால் துணிவோடு போராடவும், தீமைகளை தகர்த்தெறிந்து, நன்மைகளை நாளும் எடுத்தியம்பும் வாஞ்சைகொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. குடும்பங்களுக்காக மன்றாடுவோம்: நற்செய்தியை அறிவிக்கும் ஆற்றலையும், ஆர்வத்தையும் கற்றுத்தந்த முதல் விளை நிலம் குடும்பம் என்பதை நன்கு உணர்ந்தவர்களாய், நாம் அமைக்கும் குடும்பத்தில், புனிதம் வாழப்படவும், இதனால் அன்பையும், பாசத்தையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் அனுபவிக்க, இறைவன் என்றுமே அருள்கூர்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமது பிள்ளைகளுக்காக மன்றாடுவோம்: போதைக் கலாராசாரமும், பிரிவினைகளும், நவீன தொடர்பாடல் மற்றும் ஊடகங்கள் வழி அடிமை வாழ்வும் பெருகிக்கொண்டே போகும் இக்கால சூழலில், வாழ்வின் நிலை உணர்ந்து, அழைத்தலின் பொருள் உணர்ந்து, எதிர்காலத்தின் தேவை அறிந்து செயற்படும் இளைஞர், யுவதிகளை உருவாக்கி, உயர்வாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நிலத்தின் விளைச்சலுக்காக மன்றாடுவோம்: நாளும் பொழுதும் உழைத்து, உழைப்பின் வியர்வை சொறிந்து, இயற்கை அன்னை தந்த இறைவனின் கொடையாகிய விளைச்சலுக்காய் நன்றி சொல்வோம். நல்ல மனம் கொண்டு, நேர்மையான வாழ்வு கொண்டு, உயரிய பண்புகள் கொண்டு இவற்றைப் பயன்படுத்தவும், எமது மக்களின் பசி, பிணி தீர்க்கும் தாராள சிந்தையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: அன்பின் ஆண்டவரே, நீர் கொடுத்த அனைத்து வரங்களுக்காகவும், நன்மைகளுக்காகவும் நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். நாம் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து விண்ணப்பங்களும் உமதண்டை வந்து சேர்வனவாக. பிள்ளைக்குரிய பாசத்தோடும், உணர்வோடும், எமது தேவைகளை ஏற்று நிறைவேற்றித் தந்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை பார்த்து கெஞ்சி மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, வலுக்குறைவுற்ற எங்களுக்கு உதவியாக இப்பொருள்களைப் படைத்திருக்கின்றீர் அதனால் இவை எங்களுக்கு நிலைவாழ்வின் அருளடையாளமாக மாறிட அருள் புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி:

காண். திபா 106:8-9 ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும், மானிடருக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்குப் புகழ் சாற்றுவார்களாக! ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார் பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்! 

அல்லது

துயருறுவோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். மத் 5:4,6

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:

இறைவா, ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் நாங்கள் பங்கேற்கத் திருவுள மானீNர் அதனால் கிறிஸ்துவுக்குள் நாங்கள் ஒன்றிணைக்கப்பெற்று உலகின் மீட்புக்காக நற்கனி தந்து மகிழ்ந்து வாழ எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

அருட்தந்தை ச.ஜே. சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...