Sunday, 4 February 2024

இலங்கை மாதா பெருவிழா 04/02/2024



திருப்பலி  முன்னுரை

இறையருள் வேண்டி, அவர் பாதம் ஓடி வந்திருக்கும் என் அன்பு இறைமக்களே! புனித இலங்கை அன்னையின் திருவிழா திருப்பலியில் கலந்து சிறப்பிக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். 

இலங்கைத் தீவின் மிகவும் அழகான பெருவிழாக்களில் ஒன்றாக, இம் மண்ணின் சுதந்திரதினமாகிய மாசி 4ம் நாள் இப்பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இரண்டாம் உலகப் போரின் போது இலங்கைத் தீவை பாதுகாக்க வேண்டி உயர் ஆயர், வண. மசோன் அவர்கள் அன்னை மரியாவிடம் இலங்கைத் தீவை ஒப்புக்கொடுத்து மன்றாடினார். இதனால் இலங்கை காப்பாற்றப்பட்டது. இதனாலேயே, இலங்கைத் தீவுக்கே உரித்தான விழாவாக இலங்கை மாதா பெருவிழா அமைகின்றது. 

எமது நாட்டின் பாதுகாவலி அன்னை மரியாவிடம், எமது நாட்டின் அழகையும், தனித்துவத்தையும், மனித மாண்பையும், எமது கலை, கலாசாரத்தையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். ஆபத்துக்களின் போது எம்மை பாதுகாத்து, வழிநடத்திய தாய், இன்றைய சமகால அரசியல், பொருளாதார குழப்பங்கள் அதனால் ஏற்பட்ட பிறழ்வுகள் மத்தியிலும் எம்மை வழிநடத்துவாளாக. இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்தவள், போரின் போது எம்மை வழிநடத்தியவள், இன்று உலகத்தின் வேகத்தில் நிலை தடுமாறும் எமது வாழ்க்கை ஓட்டத்தில் எம்மோடு உடன் பயணிப்பாளாக. நாம் விரும்பித் தேடுகின்ற அழகான, பொய்மையற்ற, புதிய சமுதாயம் படைக்க துணைபுரிவாளாக. அம்மா என்று அழைக்கும் குழந்தைகள் அனைவரின் செபங்களையும், கண்ணீரையும் கடைக்கண் நோக்குவாளாக.

இப்பெருவிழாவைக் கொண்டாடும் எமக்கு, இறைவனின் ஆசீர் நிறைவாகக் கிடைக்கவேண்டி, இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 


இறைமக்கள் மன்றாட்டு

குரு: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என நம்பிய அன்னை மரியாவைப் போல, எமது வாழ்விலும் ஆழமான நம்பிக்கையும், எதிர்நோக்கும் கொண்டவர்களாக எமது விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம். 

1. அன்பின் இறைவா! 'உலகெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள், உலகு முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருப்பேன்' என்ற உமது வார்த்தைக்கு தம்மை அர்ப்பணித்த அனைத்து திரு நிலைப் பணியாளர்கள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவரும், விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்ட ஒளியாக இருப்பார்களாக. தப்பறையான எண்ணங்கள், போதனைகள், கொள்கைகள் அனைத்திலிருந்தும் எமது தாய் திரு அவையை பேணிப் பாதுகாத்திட உழைக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம். 

2. உயிரின் ஊற்றே இறைவா! பாதைகள் தெளிவற்று, வாழ்க்கையே அர்த்தம் இழந்து, ஆன்மீக வறுமையினாலும், உள நோயினாலும் இன்னலுறும் எமது இளைஞர், யுவதிகள், உமது தாய் எம் அன்னை மரியாவைப்போல் கற்புக்கு வரைவிலக்கணம் கொடுக்கும் கன்னிமையால் உலகம் போற்ற துணிந்து பெற்ற தூய தைரியத்தை கொடுத்து, இத் திரு அவையின் அழகுமிக்க தூண்களாக திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

3. எமது நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். வல்லமையின் இறைவா! மக்களின் நலனே இவர்கள் எண்ணமாகட்டும், சிந்தனையாகட்டும் இவர்கள் செயல்களாகட்டும். அரசியல் சார் தீர்மானங்கள் வழியாக இவர்கள் ஆற்றும் சேவை பொது நலனாக இருப்பதாக. இவர்களை உமது வல்லமையால் நிறைத்து எமது மக்களின் கண்ணீரில் கரங்களாகவும், வறுமையில், தாங்கும் இதயமாகவும், போராட்ங்களில் துணை நிற்கும் விரர்களாகவும் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4.  இன்று பல்வேறு காரணங்களால் புலம்பெயர் நாடுகளிலே வாழுகின்ற எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். அன்பின் ஆண்டவரே! பல வேளைகளிலே, ஆலயம் இழந்து, உறவு இழந்து, உடமைகள் கூட இழந்து,  கல்வி இழந்து, திருமண உறவு தடைப்பட்டு  சிதறி வாழும் இவர்களை ஒன்று சேர்க்கவும்,  இவர்களின் பல்வேறு தேவைகளில் நீரே உறுதுணையாக இருந்து வழி நடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: என்றுமுள்ள இறைவா! சிலுவையிலே நீர் தொங்கியபோது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் இடை நிலையாளராக நீர் இருந்து அதை இதயத்திலே தாங்கும் வல்லமையை உம் தாய்க்கு கொடுத்தீரே. அந்த அன்புத் தாயை எமக்கும் தாயாகக் கொடுத்து எம்மை ஆசீர்வதிக்கின்றீர். இன்று அவளுடைய வியாகுலங்களை நினைந்து, செபத்திலும், தவத்திலும், எமது பாவங்களுக்காக பரிகாரம் செய்வதிலும் அவளோடு இணைகின்ற நாங்கள், எமது விண்ணப்பங்களை அவள் விழியாக ஒப்புக்கொடுக்கின்றோம். இவற்றை ஏற்று, உமது கனிவான இதயத்தில் இருந்து வழிந்தோடும் அருள்வளங்களை எமக்கு பொழிந்தாருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம், அமென். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...