தவக்காலம் - திருநீற்றுப் புதன் - 14-02-2024
முன்னுரை
இறைவனுக்குள்ளே பிரியமுள்ள இறைமக்களே! இன்று திருவழிபாட்டுக் காலத்தின் புதிய வாரமாகிய தவக்காலத்திற்குள்ளே கால்பதிக்கின்றோம். 'இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்' எனும் யோவேல் இறைவாக்கினரின் கூக்குரல் எம்மை ஒரு புதிய வாழ்வின் பாதைக்கு அழைத்துச் செல்கின்றது. தவக்காலம் சிலருக்கு கசப்பாக இருக்கிறது, பலருக்கு அது அருளின் காலமாக இருக்கிறது. சிலர் அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை ஆனால் பலர் அதை தமது வாழ்வின் அனுபவங்களோடு இறை அனுபவத்தையும் இணைத்துச் சிந்திக்கின்றனர். சிலருக்கு அது ஒரு சடங்காக இருக்கின்றது, ஆனால் பலருக்கு அது தியாகம் நிறைந்த காலமாக இருக்கின்றது.
இன்றைய இறைவார்த்தைகள் எமது ஆன்மீக வாழ்வுக்கான புதிய பாடங்களை கற்றுத்தருகின்றது: இத்தவக்காலம் எம்மை நோன்பிருந்து செபிக்க அழைக்கின்றது. எமது பாவங்களை திரும்பிப் பார்த்து, மனம்வருந்தி அதற்காக பரிகாரம் தேட அழைக்கின்றது. ஆகவே, நாளும் திருப்பலிக்கு செல்லுவோம், முழுமையான சிலுவைப்பாதை செய்வோம், எளிமையாகவும் ஏழ்மையாகவும் வாழ பழகிக்கொள்வோம், கிறிஸ்துவின் பாடுகள் மரணம் உயிர்ப்பைப் பற்றி நாளும் சிந்திப்போம், தவம் செய்வோம், பிறருக்கு நிறைவாய்க் கொடுப்போம், முழுமையான பாவசங்கீர்த்தனம் செய்வோம், திருயாத்திரைகள் செய்வோம், தியாகங்கள் பல புரிவோம். இந்த சிந்தைகளோடு இப்புதிய தவக்காலத்தை ஆரம்பிப்போம், தீமைகளோடு போராடி வாழ்வுக்கான புதிய அர்த்தத்தைக் காண இறையருள் கேட்டு இப்பலியினூடாக மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி காண். சாஞா 11:24,25,27
ஆண்டவரே, மனிதர் அனைவர் மீதும் நீர் இரக்கம் காட்டுகின்றீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. மக்கள் மனம் வருந்தும்போது அவர்களுடைய பாவங்களைப் பாராமல் இருக்கின்றீர்; நீர் அவர்களை மன்னிக்கின்றீர். ஏனெனில் நீரே எங்கள் இறைவனாகிய ஆண்டவர்.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, புனித நோன்புகளின் வழியாகக் கிறிஸ்தவ வாழ்வின் போராட்டத்தைத் தொடங்க எங்களுக்கு உதவியருளும்; அதனால் ஆன்மீகத் தீமைகளுக்கு எதிராக நாங்கள் போரிட்டு, தன்னடக்கத்தின் உதவியால் காக்கப்படுவோமாக. உம்மோடு.
1ம் இறைவாக்கு
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18
நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.
பதிலுரைப் பாடல் திபா 51
பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.;
2ம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2
கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்..
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 95
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.
நற்செய்தி இறைவாக்கு
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும்
உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
திருநீற்றைப் புனிதப்படுத்துதலும் பூசுதலும்
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தந்தையாம் கடவுளை நோக்கிப் பணிவுடன் மன்றாடுவோம். தவத்தின் அடையாளமாக நம் தலைகளின் மீது இடப்படும் திருநீற்றைப் புனிதப்படுத்த அவர் இரக்கம் கொள்வாராக.
இறைவா, எங்கள் தாழ்ச்சியின் பொருட்டு நீர் மனம் இரங்குகின்றீர்; பரிகாரங்களினால் மகிழ்கின்றீர்; பக்தியுள்ள எங்கள் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும்: திருநீற்றைப் பூசிக்கொள்ளும் உம் அடியார்கள் மீது உமது ஆசியின் ஓ அருளைக் கனிவுடன் பொழிந்தருளும்; அதனால் நாங்கள் தவக் காலத்தின் தவ முயற்சிகளைப் பின்பற்றி உம் திருமகனின் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடவும் தூய்மைப்படுத்தப்பட்ட மனதுடன் வாழவும் தகுதி பெறுவோமாக. எங்கள். பதில் : ஆமென்.
அல்லது
இறைவா, பாவிகளின் இறப்பை அன்று, மாறாக அவர்களின் மன மாற்றத்தையே விரும்புகின்றீர். எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும். எங்கள் தலைகள் மீது பூசப்பட இருக்கின்ற இச்சாம்பலை உமது பரிவிரக்கத்துக்கு ஏற்பப் † புனிதப்படுத்தத் திருவுளம் கொள்வீராக. அதனால் நாங்கள் சாம்பலாக உள்ளோம் எனவும் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் எனவும் அறிந்துள்ள நாங்கள் ஆர்வமிக்க தவ முயற்சிகளின் பயனாகப் பாவங்களுக்கு மன்னிப்பையும் உயிர்த்தெழும் உம் திருமகனின் சாயலுக்கு ஏற்பப் புது வாழ்வையும் அடைந்திட வலிமை பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.
- ஒவ்வொருவர் மீதும் திருநீற்றைப் பூசிச் சொல்வது: மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.
- நினைவில் கொள் மனிதா! நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய்.
விசுவாகிகள் மன்றாட்டு
குரு: ஆண்டவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; ஆகவே, நாம் ஆரம்பிக்கும் இப்புதிய வாழ்வுக்கான நிறையாசீர் கேட்டு மான்றாடுவோம்.
1. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று எம்மை அழைக்கும் இறைவா! ஒவ்வொரு ஆன்மாவின் மனமாற்றத்திற்காக உழைக்கும் அனைவரையும் ஆசீர்வதியும். இதற்காக தம்மையே தியாகப் பலியென, உருகிடும் மெழுகாக பாணியாற்றும் அனைவரும் உமது அன்பாலும் இரக்கத்தாலும் வழிநடத்தப்பட அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. இதயத்தில் மாற்றங்களை விரும்பும் இறைவா! எமது அக இருள் நீக்கி புது ஒளியாம் இறைவனை ஏற்ற எம்மை புதுப்பிக்கும் கருவியாக மாற்றிட அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அர்த்தமுள்ள பயணம் அமைக்க அழைக்கும் இறைவா! எமது தீமைகளை அகற்றி, இத்தவக்காலம் எமக்கு விடுக்கும் புதிய வழிமுறைகளைப் பின்பற்றி வாழ அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. வாழ்வைப் பலியேன தந்த இறைவா! எம்மைச் சுற்றி காணப்படும் ஏழைகள், எளியவர்கள், பசியுற்றோர், நோயினால் வாடுவோர் என்று பலரும் எம்மைக் கடந்துசெல்கின்றார்கள். இவர்களின் தேவையிலும், மகிழ்விலும் எமது கரங்கள் உதவவும், இதயங்கள் செபிக்கவும், கால்கள் தேடிச்செல்லவும் அருள்புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: 'தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்' என்று எம்மை தேற்றும் இறைவா. இன்று புதிய காலத்தை ஆரம்பிக்கும் எம்மை ஆசீர்வதித்தருளும். நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து நாம் உமது அருள்வேண்டி இரந்து கேட்கும் விண்ணப்பங்களை இரக்கத்துடன் எமக்கு பெற்றுத்தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, தவக் காலத் தொடக்கமாக அமையும் இப்பலியைச் சிறப்பாக உமக்கு ஒப்புக்கொடுக்க உம்மை வேண்டுகின்றோம்: தவச் செயல்களாலும் பிறரன்புச் செயல்களாலும் நாங்கள் தீய ஆசைகளை அடக்குவோமாக் இவ்வாறு பாவத்திலிருந்து தூய்மை பெற்று, உம் திருமகனின் பாடுகளை ஆர்வமுடன் கொண்டாடத் தகுதி உள்ளவர்களாகத் திகழ்வோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
திருவிருந்துப் பல்லவி காண். திபா 1:2-3
ஆண்டவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் உரிய காலத்தில் அதன் கனி தருவார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இத்திருவிருந்து எங்களுக்கு உதவ வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் நோன்புகள் உமக்கு ஏற்புடையனவாகி நாங்கள் நலம் அடைய உதவுவனவாக. எங்கள்.
மக்கள்மீது மன்றாட்டு
இறைவா, மாண்புக்கு உரிய உம் திருமுன் தலைவணங்குபவர்களுக்கு, ஆழமான மனத்துயரைக் கனிவுடன் தந்தருளும்; தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பரிசுகளைத் தவம் புரிவோர் இரக்கத்துடன் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.
No comments:
Post a Comment