Saturday, 23 September 2023

அன்னை மரியாள் 23/09/2023



 இறைமக்கள் மன்றாட்டு

குரு: ஆண்டவரை நினைந்து தாய் அன்னையின் உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்தியதே, மீட்பராம் கடவுளை நினைத்து அவள் மனம் பேருவகை கொண்டதே. இந்த சிந்து யாத்திரை அன்னையின் பதியிலே கூடியிருக்கும் அவள் பக்தர்கள் எமக்கு, நமது ஆண்டவர் இயேசுவை நினைந்து போற்றவும், பெருமைப்படுத்தவும் அவள் அழைப்புவிடுக்கின்றாள். எமது விண்ணப்பங்கள், உள்ளத்தின் அபிலாஷைகள் அனைத்தையும் அன்னை வழி, இறை தந்தையிடம் ஒப்புக்கொடுப்போம். 

1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. அன்புள்ள ஆண்டவரே! இன்று அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிற்கும் எமது மறை மாநில ஆயர், அவர்களோடு இணைந்து பலி ஒப்புக்கொடுக்கும் குருக்கள் துறவிகளை உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்புள்ள ஆண்டவரே! உமது தாயின் பதியிலே கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு. என்றுமே கன்னியான மரியாவை இவ்வுலகின் வெளிச்சமாக எமது வாழ்வுக்கான மாதிரியாகவும் தந்த இறைவா! உம்மைப் போற்றுகின்றோம். ஒவ்வொரு ஆன்மாவையும் நேசித்து, நாம் ஒவ்வொருவரும் இறை மாட்சி காணும் ஆர்வத்தை உம் அன்னைக்கு அளித்ததற்காக உமக்கு நன்று கூறுகின்றோம்.  அவளின் பொருவிழாவைக் கொண்டாடும் நாம் அவளை ஏறெடுத்துப் பார்த்து பின்பற்றுகின்ற வரத்தை எங்களுக்கு தாரும். நாம் செல்லும் பாதை வரைய துணிவைத் தாரும், இவ்வாழ்க்கையை புடமிட அவள் பரிந்துரையை பெற்றுத் தாரும். உம்மிடம் ஒப்புக்கொடுத்த  எமது தேவைகளும் மன்றாட்டுக்களும் அர்த்தப் பெறுவனவாக. நாம் விரும்பி கேட்கும் அருளும் ஆசீரும் அவை பெற்றுத்தருவனவாக. இவற்றை எல்லாம் ஏங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மைப் பார்த்து கேட்கின்றோம், ஆமென். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Friday, 22 September 2023

நற்கருணை பெர 22/09/2023

  




இறைமக்கள் மன்றாட்டு 

குரு: 'இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள், இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை என்று தானது உடலையும் இரத்தத்தையும் ஆன்மீக உணவாக அளித்து தமது சிலுவைப் பலியின் வழியாக அவரே பலியாகவும், பலிப்பொருளாகவும், பலிப்பீடமாகவும் திகழ்ந்த இறைவனிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. நற்கருணை ஆண்டவரே! உமது உடலையும் இரத்தத்தையும் அருட்சாதன முறையில் கொண்டாடும் எம் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். இம்மறை நிகழ்வை எமக்கு நிறைவேற்றித்தருகின்ற மறை பணியாளர்கள் உமது திரு அவையின் தேவை அறிந்தவர்களாய் இதற்காய் தினமும் உழைக்கும் வாஞ்சைகொண்டு வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

2. நற்கருணை ஆண்டவரே! உமது தாய், அன்னை மரியாள் உம்மை கருத்தாங்கி பெற்றதனால், அவளே நற்கருணைப் பேழையாகி எம் அனைவரையும் சுமக்க அழைப்புப் பெறுகின்றாள். அவள் சந்நிதானம் கூடிவந்திருக்கும் எமக்கு, அவளின் உறவும், உடனிருப்பும், தூய ஆவியின் வழிநடத்தலும், பாதுகாப்பும் பரிந்துரையும் என்றும் இருக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

3. நற்கருணை ஆண்டவரே! போரும், சினாமி அனர்த்தமும், கொரோணா தொற்று நோயும் தீர்ந்து போன போதும், இன்று நாம் வாழும் இவ்வுலகு போலியான, பொய்யான அநாகரீக கலாசாரத்திற்குள்ளே சிக்குண்டு சிதறிப்போகின்றதே.  பிளவுபட்ட குடும்பங்களாக, உடைந்துபோன உறவுகளாக, கைவிடப்பட்ட பிள்ளைகளாக, அடிமைப்பட்ட இளைஞர் யுவதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எம்மைக் கண்நோக்கி பாரும். எமது வாழ்விலே நாம் செல்லும் பாதையை அசீர்வதியும், எமது தீர்மானங்கள் ஞானமும் அறிவும் உடையதாக அமைவதாக, எமது அனுபவங்கள் அனைத்துமே இறைவனை தாங்கிச் செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

4. நற்கருணை ஆண்டவரே! இன்று எமது குடும்பங்களிலே கண் விழித்து குடும்ப வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் அன்பு பெற்றோரை உமது பாதத்திலே ஒப்புக்கொடுக்கின்றோம். காலையும் மாலையும் இரவுமென உழைத்து குடும்பத்தை கரை சேர்க்க பாடுபடும் இவர்கள் வாழ்விலே மன தைரியத்தையும், வாழ்வுக்கான மன திருப்தியையும், குடும்ப சந்தோசத்தையும் கொடுத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Thursday, 21 September 2023

அன்னை மரியாள் 21/09/2023

  


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: இறை மகனாகிய கிறிஸ்து தன்னை முதன் முதல் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியது ஞானிகளின் வருகையின் போதே. அவருக்கு உலகம் கொடுத்த காணிக்கை பொருளானது, கடவுள் உலகிற்கு கொடுத்த காணிக்கை அவர் அருளானது. இதே அருள் வளங்கள் கேட்டு நாம் எமது காணிக்கைகளை, விண்ணப்பங்களை சமர்ப்பிப்போம். 

1. கருணையின் இறைவா! உமது தெய்வீகப் பலியை நிறைவேற்றுவதால் என்றும் எப்பொழுதும் நீர் உமது திரு அவையையும் இவ்வுலகையும் பாவக் கறையிலிருந்து புதுப்பித்து புனிதப்படுத்துகின்றீர். உமது தெய்வீகக் கொடையாகிய திருப்பலியிலே எமது விசுவாசத்தைத் பதித்து நாமும் அதன் முழுப்பலனை அடையவேண்டிய வரத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கருணையின் இறைவா! படித்தவரும் பாமரரும் உமது மகன் இயேசு வழியாக உம்மை அறியச் செய்தீரே. படைப்புக்களை பரிசாகக் கொடுத்து அதில் அவரைக் கண்டு அன்புசெய்யச் செய்தீரே. இன்றும் உமது திரு உடல் திரு இரத்தம் வழியாகக் உம்மை நாளும் பொழுதும் அனுபவிக்க ஆற்றல் தந்தீரே. இதை முழுமையாக அறிந்துகொண்டு என்றுமே உம்மைக் கண்டு பாவிக்கும் வல்லமையை தந்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. கருணையின் இறைவா! இன்று நாம் வாழும் உலகு உண்மை மறந்து, பொய்மை மலிந்து, புனிதம் இழந்து, சுயநல உணர்வுகளும், ஏரிச்சல் கொண்ட உள்ளங்களும், போலியான உறவுகளும் புதிதாய் உருவாகும் கலாசாரங்களும் இன்றைய கிறிஸ்தவ விசுவாசத்திற்கு தடையாகவே இருக்கின்றன. இவற்றை எதிர்த்துப் போராடவும், இறைவார்த்தை தரும் விழுமியங்களின் அடிப்படையில் எமது வாழ்வை அமைத்திட ஆற்றல் தந்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. கருணையின் இறைவா! எமது இலங்கைத் திரு நாடு எமக்கு நீர் தந்த அழகிய அடையாளம் - வளம் கொண்ட நாடாகவும், கலை கலாசார பண்புகள் கொண்டதாகவும்,  சமய ஒற்றுமை மற்றும் உறவு கொண்ட நாடாகவும் இருக்க வேண்டுகின்றோம். எமது மக்கள் அனைவரும் பிறர் சினேகம் கொண்டு வாழவும், அன்பையும் மதிப்பையும் அணிகலனாகக் கொண்டு வாழவும், பிறர் தேவைகளில் உடன்செயற்படவும், வன்முறைகள் இன்றி, வடுக்கள் அகற்றி, வேறுபாடுகள் தவிர்த்து வாழ உமது அருளையும் வல்லமையையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: என்றும் எம்மோடு இருந்து எமக்கு அருள்பொழியும் இறைவா நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தியதால் உலகம் இழந்த அருளை மீண்டும் பெற்றுக்கொள்ளச் செய்தீரே. எமது வாழ்வுக்கு தேவையான ஆற்றலையும் அருளையும் மீட்புக்கான நுழைவாயிலையும் உமது இரத்தப் பலியால் எமக்கு பெற்றுத்தந்தீரே. இன்று நாம் எமது பலவீனத்தினால், பாவத்தினால் இழந்து  தவிக்கும் உமது ஆற்றலை மீண்டும் அனுபவிக்க நாம் கேட்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாயும். நீர் சித்தமானால் அவை என்றும் எம்மோடும் எமது குடும்பங்களோடும் தங்குவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் ஆவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Wednesday, 20 September 2023

அன்னை மரியாள் 20/09/2023

  


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்ற அன்னையின் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள்  எங்களுக்கு தைரியம் அளிக்கின்றது. எமது தேவைகள் பலவாயினும், இறை தந்தையிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! உமது பணிக்காக தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து பணியாளர்களும் உமது வல்லமையால் நிரப்பப்பெற்று என்றும் தகுந்த பணி புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. இறை அழைத்தலை பெற்று தம்மை ஆயத்தம் செய்யும் அனைத்து இளைஞர்கள் யுவதிகளுக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! திரு அவையின் பணியை முழுமையாக அறிந்தவர்களாய், அதன் ஆழம், அகலம் தெரிந்தவர்களாய் தமது முழுமையான தெரிவால் தம்மை இறை பணிக்காக அர்ப்பணிக்கும் வாஞ்சை கொண்டவர்களாக திகழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. மாற்றுவலுவுடையோருக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! இவ்வுலகம் நீர் கொடுத்த கொடை, அதன் வளங்கள் அனைத்தும் உமது அருள்வளங்கள். இதனால் இவர்கள் தமது உடலில் ஏற்பட்ட அனைத்து குறைகளால், இவ்வுலகை அனுபவித்து அதன் முழுப்பயன் பெற்றிடவும் முடியாத நிலையில் வருந்தும் இவர்களை வழிநடத்தும். இவர்களின் வாழ்வும் இருப்பும், இவர்களோடு உடன் பயணிக்கும் எமக்கு வாழ்வியல் கேள்விகளுக்கு விடைதருவதாக. என்றுமே இவர்களை கைவிட்டுவிடாது இவர்களின் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எமது பாடசாலை ஆசான்களுக்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! கல்வி ஒன்றே வாழ்வின் விடியலின் சிகரம் என்பதை உணர்ந்து தம்மை கற்பித்தல் பணிக்காக அர்ப்பணிக்கும் அனைத்து ஆசிரியர்களை ஆசீர்வதித்தருளும். கல்வி கூடங்களில் சந்திக்கும் பல்வேறு பணிச் சவால்கள் மத்தியில் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்புக்களையும் செவ்வனே நிறைவேற்றவும், கற்பிக்கும் அன்பான பிள்ளைகளுக்கு தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து அவர்களை உருவாக்கவேண்டிய ஆற்றலை அளித்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: என்றும் வாழும் எல்லம் வல்ல இறைவா! நாம் ஒப்புக்கொடுத்த எமது தேவைகள் உமது மீட்புத் திட்டத்தை அணிசேர்ப்பதாக. நாம் விரும்பிக்கேட்ட இவ்விண்னப்பங்கள் வழியாக நாமும் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழவும் அதன் வழியாக அவர் எமக்கு அருளுகின்ற வரங்கள் எம் வாழ்வுக்கு முழுப்பயன் தருவனவாக. உமது தாய் உம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், நிலையிலும், ஒவ்வொரு அதிசயத்திலும் அற்புதத்திலும் உடன் பயனித்தாள். இதே உடன் பணிக்கும் தாயாக எமது விண்ணப்பங்களில் அவள் பரிந்து பேசுவாளாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Tuesday, 19 September 2023

அன்னை மரியாள் 19/09/2023

  


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: 'ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்' எனும் எலிசபெத்தின் அருள் மொழி இன்று எமக்கு தைரியத்தையும் இறைவனில் முழு நம்ம்பிக்கையை வளர்க்க உரைக்கல்லாகவும் அமைகின்றது. அவரில் விசுவாசம் கொண்டவர்களாக எமது உள்ளத்தின் தேவைகளை ஆண்டவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். 

1. எமது திரு அவையின் தலைமை ஆயர் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களுக்காக மன்றாடுவோம். 

வல்லமையை வாரிவழங்கும் இறைவா! தூய ஆவியின் துணைகொண்டு எமது தலைமை ஆயர் பரிசுத்த பாப்பரசர் செல்லும் பாதையை இறைவன் ஆசீர்வதிக்கவும், திரு அவையின் வளர்ச்சிக்காக அவர் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகள், மேற்கொள்ளும் சந்திப்புக்கள், வளமாகும் நாட்டு தலைவர்களுக்கிடையிலான உரிமையுடன் கூடிய உறவுகள், இறை அனுபவத்தையும், அவரில் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் அவரது எழுத்தாக்கங்கள் அனைத்துமே உமது சித்தப்படி அமைவதாக. பல நூறு தடைகளை தாண்டி தெளிவோடும் துணிவோடும் இறை நம்பிக்கையோடும் செல்லவேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. எமது குருக்கள் துறவறத்தார் அனைவருக்காகவும் மன்றாடுவோம். 

வல்லமையை வாரிவழங்கும் இறைவா! சமகால சவால்களுக்கு நேரடியாக முகங்கொடுத்து, பல்வேறு தீமைகளை எதிர்த்து போராடக்கூடிய வல்லமையை இவர்களுக்கு அளித்தருளும். எவ்வித தடைகளிலும் தளரா மனங்கொண்டு வாழும் தைரியத்தை அளித்தருளும். தனிமையும், வெறுமையும், இழப்புக்களும், நோய்களும், தீர்ந்திடா பிரட்சனைகளும், இவ்வுலகின் அலட்சிய போக்குகளும், அடங்காத அடாவடித்தனங்களும், நேர்முகங் காணும் அடிமை வாழ்க்கைகளும் அவர்களது குருத்துவ வாழ்வுக்கு இழுக்கையும், விரக்தியையும் தராதிருப்பதாக. தமது ஆழமான செப வாழ்வும், அன்னையின் மேல் கொண்ட அதீத நம்பிக்கையையும், திருப்பலியின் மேல் கொண்ட அன்பும் இவர்கள் வாழ்வை நிலை நிறுத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. எமது பிள்ளைகளுக்காக மன்றாடுவோம். 

வல்லமையை வாரிவழங்கும் இறைவா! இவ்வுலகிலே ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது, இவ்வுலகை இன்னும் நீர் அன்புசெய்கின்றீர் என்பதை நாங்கள் உணர்ந்துகொள்கின்றோம். அதற்காக நன்றி கூறுகின்றோம். இவ் அரும் பொரும் கொடையினால் இவ்வுலகிற்கு தேவையான அனைத்தையும் நீர் நிறைவேற்றுவீர் எனும் நம்பிக்கையில், இவர்களை உமது பாதம் ஒப்புக்கொடுக்கின்றோம். இவர்கள் எல்லோரையும் அன்புசெய்ய கற்றுக்கொள்ளவும், உண்மை, நீதி நிறைந்த சிறந்த வாழ்வு வாழ கற்றுக்கொள்ளவும், பிறருக்கு கொடுத்து தியாகம் புரியும் உயரிய பண்பைக் கற்றுக்கொள்ளவும், செபிப்பதால் இறைவனின் துணை என்றும் எப்பொழுதும் உண்டு என்பதை நம்பிவாழவும் இவர்கள் தலை திறந்த எதிர்கால திரு அவயின் தூண்களாக மிளிரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. குழந்தை செல்வங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோருக்காக மன்றாடுவோம். 

வல்லமையை வாரிவழங்கும் இறைவா! உமது தாய் உம்மை கருவிலே சுமந்தபோது அவள் கொண்ட மட்டற்ற மகிழ்ச்சி இவ்வுலகின் மகிழ்ச்சியாக மாறியதே. இன்று இவ்வரத்திற்காய் ஏங்கித் தவிக்கும் எமது பெற்றோர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட இவ் அழைத்தலை ஏற்றுக்கொள்வார்களாக. எந்நிலையிலும், எச்சந்தர்ப்பத்திலும் இறைவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: என்றும் வாழும் எல்லம் வல்ல இறைவா! நாம் ஒப்புக்கொடுத்த எமது தேவைகள் உமது மீட்புத் திட்டத்தை அணிசேர்ப்பதாக. நாம் விரும்பிக்கேட்ட இவ்விண்னப்பங்கள் வழியாக நாமும் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழவும் அதன் வழியாக அவர் எமக்கு அருளுகின்ற வரங்கள் எம் வாழ்வுக்கு முழுப்பயன் தருவனவாக. உமது தாய் உம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், நிலையிலும், ஒவ்வொரு அதிசயத்திலும் அற்புதத்திலும் உடன் பயனித்தாள். இதே உடன் பணிக்கும் தாயாக எமது விண்ணப்பங்களில் அவள் பரிந்து பேசுவாளாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Monday, 18 September 2023

அன்னை மரியாள் 18/09/2023

 


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் என்று கூறிய இயேசுவிடம் எமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்போம்

1. வல்லமையின் இறைவா! எமது திரு அவைப் பணியாளர்களை உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். திரு அவையை தமது ஒழுக்கத்தாலும் இறை நம்பிக்கையாலும் அணிசேர்க்கவும், அதை கறையின்றி காக்க, நற்செய்தியின் படி தாம் செய்துகொண்ட வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாய் செயல்படவும்,  அருட்கொடைகள் நிறைவேற்றுவதில் தீராத ஆர்வம் கொண்டு செயலாற்றவும், தமது செப வாழ்வால் திரு அவையைத் தாங்கும் வாஞ்சை கிடைக்கவும், ஆன்மாக்களை விண்ணகம் கொண்டு சேர்க்கும் விருப்பம் கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. வல்லமையின் இறைவா! வெவ்வேறு நாடுகளிலே பணியாற்றும் எமது நாட்டின் சுதேச குருக்கள் துறவிகள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். தமது மொழி, கலை, கலாசாரம் கடந்து பணியாற்றும் இவர்களை ஆசீர்வதிக்க உம்மை வேண்டுகின்றோம். உலகின் கடை எல்லை வரை பணியாற்றும் இவர்கள் தமது தியாகத்தாலும் அர்ப்பணத்தாலும் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிக்கு புதிய அர்த்தம் கொடுத்து வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. எமது நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். வல்லமையின் இறைவா! மக்களின் நலனே இவர்கள் எண்ணமாகட்டும், சிந்தனையாகட்டும் இவர்கள் செயல்களாகட்டும். அரசியல் சார் தீர்மானங்கள் வழியாக இவர்கள் ஆற்றும் சேவை பொது நலனாக இருப்பதாக. இவர்களை உமது வல்லமையால் நிறைத்து எமது மக்களின் கண்ணீரில் கரங்களாகவும், வறுமையில், தாங்கும் இதயமாகவும், போராட்ங்களில் துணை நிற்கும் விரர்களாகவும் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எமது நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள் உபகாரிகள் அனைவருக்காகவும் மன்றாடுவோம். வல்லமையின் இறைவா! இவர்களின் தாராள மனதை ஆசீர்வதியும். தங்களிடம் இருப்பதை பிறரின் தேவையில் கொடுத்து உதவும் இவர்களின் உள்ளத்தை ஆசீர்வதியும். இவர்களை போல இன்னும் பல நல் உள்ளங்கள் உருவாகவும், கொடுப்பதால் மாத்திரமே வாழ்வடைய முடியும் எனும் உண்மையை உணர்ந்தவர்களாக எம் அனைவரையும் மாற்றியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நாம் அனைவரும் ஒரே குடும்ப உணர்வோடு, ஒன்றித்து பயணிக்கும் கூட்டொருங்கியக்க திரு அவையாக எமை அமைக்கின்றோம், இதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஒன்றிப்பில் உருவாகும் இத் திரு அவை சமூகம் உமக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் செவிசாய்த்தருளும். 'அவர் சொல்வதை செய்யுங்கள்' என்ற அன்னையின் வேண்டுதலுக்கு இணங்கி வரம்பெற்றுக் கொடுத்த நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து, எமக்கு எம் தேவைகளில் துணை நிற்கவேண்டுமென்று, கிறிஸ்து வழியாக உமைப் பார்த்து வேண்டுகின்றோம். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Sunday, 17 September 2023

அன்னை மரியாள் 17/09/2023

 


இறைமக்கள் மன்றாட்டு 

குரு: இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பதன் உட்பொருளை உணர்ந்தவர்களாக, எமது துயரங்களில் துயர் துடைக்கும் இயேசு, எமது போராட்டங்களில் எமைத் தாங்கும் இயேசு, எமது அறியாமைகளில் எமக்கு, அனுபவங்கள் வழி கற்றுத்தரும் இயேசுவிடம் எம்முள் இருக்கும் ஆழமான தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. இயேசுவே, எமது திரு அவையை அன்பு செய்யவும், இவ்வுலக மாந்தர்கள் அனைவரும் உமது பாதை சேரவும் ஓயாது உழைக்கும் அனைத்து பணியாளர்களை ஆசீர்வதித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

2. இயேசுவே, உம்மை பெற்று, உதரத்திலே சுமந்த தாய் அன்னை மரியாவைப் போல, அர்ப்பணம் உள்ள, வாஞ்சை உள்ள, விசுவாசமுள்ள இளைஞர் யுவதிகள் உருவாகிடவும், திரு அவைக்கு அணிசேர்க்கும் புனித உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

3.  இயேசுவே, இன்று மலிந்து கிடக்கும் சினிமா கலாசாரம், போதைக் கலாசாரம், தொலைபேசிக் கலாசாரம், நுகார்வுக்கலாசாரம் - எம் மக்களின் சீரழிவுக்கு காரணமாக அமைகின்றதே. இவ்வுலகத்தின் விழுமியங்களை எதிர்த்துப் போராட ஆற்றலைத் தாரும், எது சரி ஏது பிழை ஏந்த் தீர்ப்பிட விவேகத்தைத் தாரும், உள்ளத்தின் தூய்மையை தொலைத்திடாது உண்மையாய் வாழ நல்ல ஆன்மீகத்தைத் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

4. எம் குடும்பங்களில் தீராத நோயினால் பாதிப்புற்று அல்லலுறும் அனைத்து நோயாளிகளும் சுகம்பெறவும், விபத்துக்கள், அனர்த்தங்கள் வழியே தமது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கும் ஆனைவரின் ஆன்மா முடிவில்லா பேரின்பம் அடையவேண்டி உம்மை மன்றாடுகின்றோம். 

5. இயேசுவே! சிறையிலே வாடுவோர், வெளி நாடுகளுக்குச் சென்று தடுப்பு முகம்களிலே தடுத்தி வைக்கப்பட்டோர் என பலரும் தமது வாழ்வையும் எதிர்காலத்தையும் தொலைத்து நிர்க்கதியான நிலையிலே, அவர்களுக்கு இரக்கமாகவும், ஆறுதலாகவும்  அரவணைக்கும் கரங்களாகவும் நீர் இருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

குரு. என்றுமே கன்னியான மரியாவை இவ்வுலகின் ஒளியாகவும் உப்பாகவும் எமது வாழ்வுக்கான மாதிரியாகவும் தந்த இறைவா! உம்மைப் போற்றுகின்றோம். ஒவ்வொரு ஆன்மாவையும் நேசித்து, நாம் ஒவ்வொருவரும் இறை மாட்சி காணும் ஆர்வத்தை உம் அன்னைக்கு அளித்ததற்காக உமக்கு நன்று கூறுகின்றோம்.  அவளின் பொருவிழாவைக் கொண்டாட ஆயத்தம் செய்யும் நாம் அவளை ஏறெடுத்துப் பார்த்து பின்பற்றுகின்ற வரத்தை எங்களுக்கு தாரும். நாம் செல்லும் பாதை வரைய துணிவைத் தாரும், இவ்வழ்க்கையை புடமிட அவள் பரிந்துரையை பெற்றுத் தாரும். உம்மிடம் ஒப்புக்கொடுத்த  எமது தேவைகளும் மன்றாட்டுக்களும் அர்த்தப் பெறுவனவாக. நாம் விரும்பி கேட்கும் அருளும் ஆசீரும் அவை பெற்றுத்தருவனவாக. இவற்றை எல்லாம் ஏங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மைப் பார்த்து கேட்கின்றோம், ஆமென். 


Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Saturday, 16 September 2023

அன்னை மரியாள் 16/09/2023


 இறைமக்கள் மன்றாட்டு 

எமது திரு அவைக்காக மன்றாடுவோம்

இறைவனின் அரசை இவ்வுலகெங்கும் பரப்பி, இயேசுவின் நற்செய்திற்கு பிரமாணிக்கமாய் இருந்து தமது வாழ்வின் அர்ப்பணிப்பாலும், தியாகத்தாலும் அவர் பணி செய்திடும் அனைவரையும் இறைவன் தனது நிறை ஆசீரால் நிரப்பி வழி நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமது மறைமாவட்டத்திலே பனியாற்றும் அனைத்து துறவற சபை பணியாளர்களுக்காக மன்றாடுவோம்: 

இவர்களது இருப்பும் பிரசன்னமும் மறைமாவட்ட வளர்ச்சிக்கான இவர்களது அர்ப்பணமும் இறைவன் கொடுத்த கொடை என உணரவும் இறைவனின் ஞானமும், வல்லமையும் நிறைவாய் கிடைக்கவும், இவர்களது பணியின் மேன்மையால் பயன்பெறும் அனைத்து மக்களும் இறைவனின் அன்பையும் உடனிருப்பையும் தொடர்ந்து உணரவும் வரம்வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம். 

இறைவா, குடும்பம் என்பது நீர் கொடுத்த கொடை, அதை உருவாக்கி, உறவுகொண்டாட செய்தவர் நீர் என உணரவும், குடும்பம் தருகின்ற பண்புகள், விழுமியங்கள், புன்னியங்கள், ஒழுக்கங்கள் என்பன அதன் அத்திவாரமாக இருப்பதாக. எமது தாயும் தந்தையும் இப்பண்புகளால் எமை அழகுபடுத்தி, இவ்வுலகு அறியச் செய்பவர்களாக மாற்றியருளும். இவ்வுலகின் போக்குகளோடு போராடும் மனத் தைரியத்தையும், செபத்தினால் இவ்வுலகை வெல்லும் ஆற்றலையும் குடும்பம் தர வல்லது என்பதை உணர்த்தியருள வேஎண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

நலிவுற்ற குடும்பங்களுக்காக மன்றாடுவோம்

அன்பின் இறைவா, இன்று பண ஆசை, பொருள் ஆசை மீது நாட்டம் கொண்டு குடும்ப பலம் இழந்து, குடும்ப அன்பு இழந்து, குடும்ப ஒன்றிப்பு இழந்து வாழும் எம் குடும்பங்களை ஆசீர்வதித்தருளும். குடும்ப சச்சரவுகளால், பிரட்சனைகளால், பொருளாதார நெருக்கடியினால், சந்தேகங்களினால், பண மோகங்களால், விவாகரத்து வரைக்கும் பிரிந்து சென்ற குடும்ப தம்பதியினர், குடும்பங்களை இணைத்து வைத்தவர் இயேசு என்பதை முழுமையாக அறிந்து தமது வாழ்வின் உயர் பொறுப்பாகிய குடும்பங்களை கட்டிக்காக்கும் வல்லமை கிடைக்கவேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பும் இரக்கமும் நிறைந்த இறைவா! 

உம் தாயாகிய அன்னை மரியாவை எமக்கு ஒரு வரலாற்றின் தாயாக தந்தீரே, உமக்கு நன்றி கூறுகின்றோம். அத்தாய் குடும்பத்தை பக்குவமாக பேணிப் பாதுகாத்து, பராமரித்து, இறைதிட்டத்திற்கு ஏற்ப இயேசுவை வளர்த்து கையளித்தது போல, எமது குடும்பங்கள் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் வேண்டுதல்கள் உம் பாதம் வந்து சேர்வனவாக. குடும்பங்கள் இவ்வுலகிற்கு கொடுக்கும் உயரிய கொடையாகிய பிள்ளைகளை ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து அவர்களுக்கு தேவையான வழி நடத்துதலை கொடுத்து காத்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Friday, 15 September 2023

அன்னை மரியாள் 15/09/2023

 
இறைமக்கள் மன்றாட்டு

குரு: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என நம்பிய அன்னை மரியாவைப் போல, எமது வாழ்விலும் ஆழமான நம்பிக்கையும், எதிர்நோக்கும் கொண்டவர்களாக எமது விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம். 

1. அன்பின் இறைவா! 'உலகெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள், உலகு முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருப்பேன்' என்ற உமது வார்த்தைக்கு தம்மை அர்ப்பணித்த அனைத்து திரு நிலைப் பணியாளர்கள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவரும், விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்ட ஒளியாக இருப்பார்களாக. தப்பறையான எண்ணங்கள், போதனைகள், கொள்கைகள் அனைத்திலிருந்தும் எமது தாய் திரு அவையை பேணிப் பாதுகாத்திட உழைக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம். 

2. உயிரின் ஊற்றே இறைவா! பாதைகள் தெளிவற்று, வாழ்க்கையே அர்த்தம் இழந்து, ஆன்மீக வறுமையினாலும், உள நோயினாலும் இன்னலுறும் எமது இளைஞர், யுவதிகள், உமது தாய் எம் அன்னை மரியாவைப்போல் கற்புக்கு வரைவிலக்கணம் கொடுக்கும் கன்னிமையால் உலகம் போற்ற துணிந்து பெற்ற தூய தைரியத்தை கொடுத்து, இத் திரு அவையின் அழகுமிக்க தூண்களாக திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

3. வல்லமையின் இறைவா! எமது நாட்டிலே ஒரு பகுதி வறுமைக்குள்ளும் மறு பகுதி கடும் மழைக்குள்ளும் அகப்பட்டு, வாழ்வாதாரம் மற்றும் கல்வி இழந்து தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவருக்கும், இயற்கையின் வளங்களைப் பயன்படுத்தும் உக்தியைக் கற்றுக்கொள்ளவும், தாம் விரும்பித் தேடுகின்ற ஓர்; அரசியல் விடுதலை கிடைக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

4.  இன்று பல்வேறு காரணங்களால் புலம்பெயர் நாடுகளிலே வாழுகின்ற எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். அன்பின் ஆண்டவரே! பல வேளைகளிலே, ஆலயம் இழந்து, உறவு இழந்து, உடமைகள் கூட இழந்து,  கல்வி இழந்து, திருமண உறவு தடைப்பட்டு  சிதறி வாழும் இவர்களை ஒன்று சேர்க்கவும்,  இவர்களின் பல்வேறு தேவைகளில் நீரே உறுதுணையாக இருந்து வழி நடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: என்றுமுள்ள இறைவா! சிலுவையிலே நீர் தொங்கியபோது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் இடை நிலையாளராக நீர் இருந்து அதை இதயத்திலே தாங்கும் வல்லமையை உம் தாய்க்கு கொடுத்தீரே. அந்த அன்புத் தாயை எமக்கும் தாயாகக் கொடுத்து எம்மை ஆசீர்வதிக்கின்றீர். இன்று அவளுடைய வியாகுலங்களை நினைந்து, செபத்திலும், தவத்திலும், எமது பாவங்களுக்காக பரிகாரம் செய்வதிலும் அவளோடு இணைகின்ற நாங்கள், எமது விண்ணப்பங்களை அவள் விழியாக ஒப்புக்கொடுக்கின்றோம். இவற்றை ஏற்று, உமது கனிவான இதயத்தில் இருந்து வழிந்தோடும் அருள்வளங்களை எமக்கு பொழிந்தாருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம், அமென். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Thursday, 14 September 2023

அன்னை மரியாள் 14/-9/2023


இறைமக்கள் மன்றாட்டு 

 குரு: 'இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்' என்று மொழிந்த இயேசுவின் அன்பு வார்த்தைக்கு செவிகொடுக்கும் மக்களாக எமை மாற்றி எமது உள்ளத்தின் உணர்வுகளை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து மன்றாடுவோம். 


அன்பின் ஊற்றே இறைவா! அழைத்தலின் ஆழம் உணர்ந்து, தமது வாழ்வே திரு அவைக்கு அணிசேர்க்கும் என்று அர்ப்பணிக்கும் குருத்துவ துறவற பணியாளர்கள் அனைவருக்கும் நிறையாசீர் கிடைக்கவும் அவர்கள் வழி எமது மக்கள் இறை அனுபவம் பெற்று வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

இங்கே கூடியிருக்கும் உமது அன்பர்கள் நாம் உமது வார்த்தைக்கு செவிகொடுக்கின்ற, அதன் படி வாழுகின்ற சீடர்களாக எமை மாற்றியருளும். குடும்ப வறுமையோ, தொழில் இன்மையோ, கல்வி கற்க முடியாத நிலையோ, உடல் வாதைகளோ எதுவாக இருந்தாலும் அவை எமது உறவிலிருந்து பிரித்திடாத வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

எமது எதிர்கால தலைமுறையான எமது அன்புப் பிள்ளைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். சிறப்பாக எமது உயர்தர மாணவர்களுக்காக மன்றாடுவோம். கல்வி என்பதன் ஆழம் அறிந்து, அது கற்பதில் இருப்பதன் பொருள் உணர்ந்து, ஞானம் நிறைந்த வாழ்வு வாழவும், விவேகம் நிறைந்த தீர்மானங்கள் எடுக்கவும் கல்வியே சிறந்த வழி என்பதை உணர்ந்து வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

வௌ;வேறு நாடுகளிலே வறட்சியினால், யுத்தத்தினால், கடும் மழை புயலினால், நில நடுக்கம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு  இன்னலுறும் மக்களுக்காக மன்றாடுவோம். வாழ்க்கையை தொலைத்தவர்கள், உயிரை மாய்த்தவர்கள், இதனால் உறவுகளை இழந்தவர்கள் என, பல்வேறு நிலையில் இருப்போருக்கு இறைவன் தன் இரக்கத்தைக் கொடுத்து ஆறுதலாகவும், அரவணைக்கும் கரங்களாகவும் இருந்து வழி நடத்தவும், தேவையான வல்லமையைக் கொடுத்துக் காத்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம். 


குரு: அன்பின் இறைவா! கரம் கொடுத்து காப்பவரே உமக்கு நாங்கள் நன்றி சொல்கின்றோம். இன்றைய நாளிலே உமது வார்த்தையை கேட்டு, அதை ஆழ தியானிக்க எமக்கு தந்த இவ் அழகான சந்தர்ப்பத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று நாங்கள் உமது பாதையிலே நடக்கவும் உம்மை விட்டு விலகிடாத நல்ல கருவியாகவும் எம்மை மாற்றியிருக்கின்றீர். நீர் எமது தந்தை, நாங்கள் உமது பிள்ளைகள் என்ற உணர்விலே உமது பாதம் சமர்ப்பித்த எமது தேவைக்ளை எல்லாம் நீர் தயவாய் செவிசாய்த்தருளும். உமது அருளால் எமது வாழ்வும் வளம்பெற அருள்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...