பொதுக்காலம் பாதினாறாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்புமிக்க இறை உறவுகளே!
பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு வாரத்தில் இன்று நாம் கால் பதிக்கின்றோம். நாளையும் பொழுதையும் தரும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம், வாழ்வையும் வசந்தத்தையும் தரும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம், இடரல்கள் மத்தியிலும் பாதை காட்டும் பரமனுக்கு நன்றி சொல்லுவோம், இன்று புதிய உலகம் காண அழைக்கும் அவருக்கு நன்றி சொல்லி இப்புதிய வாரத்தில் கால்பதிப்போம்.
இன்றைய முதல் இறைவார்த்தையில் தொடக்கநூல் ஆசிரியர் இறைவன் மேல் கொண்ட முழுமையான நம்பிக்கைதான் வாழ்வின் அடித்தளம் என்பதைக் காட்டுகின்றார். புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் இயேசுவுக்காக ஆற்றும் பணியைப் போன்று நிறைவானது எதுவும் இல்லை என்பதை பல்வேறான சான்றுகள் வழியாக அறிக்கயிடுவதையும் காணலாம். லூக்கா நற்செய்தியில் மரியா மற்றும் மார்த்தா ஆகியோருக்கிடையிலான அழகிய உரையாடல் காட்டப்படுகின்றது.
நாம் இயேசுவை எப்படிப் பார்க்கின்றோம் அல்லது எமது கண்களுக்குத் தெரியும் இயேசு யார் என்பது இன்று எமக்குத் தரப்படும் கேள்வியே. திரு அவையோடு சேர்ந்து பயணிக்கும் நாம், எமது இருப்பை, அடையாளத்தை, எமது நம்பிக்கை வாழ்வின் நோக்கத்தை உறுதிசெய்து கொள்வோம். எமக்காக கிறிஸ்துவின் தியாகம் மெய்ப்பிக்கப்படும் போது, அவருக்காக நாம் எமது ஆன்மாவை தயார்செய்வது, புனிதமாக்குவது, அவரின் ஒன்றிப்பை உறுதிசெய்வது இன்றைய தேவையாகின்றது. நாம் இருப்பதும், இயங்குவதும் இயேசுவிலே தான் என்பது எமது அசையாத நம்பிக்கையாகட்டும். எமது வழ்வின் நீண்டதூரப் பயணம் முடிவுரும்வரை இயேசுவை இலக்காகக் கொண்டு பயணிக்க இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - திபா 53:6,8
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் இருக்கின்றார்: தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன். ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன். ஏனெனில் அது நல்லது.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, நீர் உளம் கனிந்து உம் அடியார்களாகிய எங்களில் உம் அருள்கொடைகளைப் பெருகச் செய்தருளும்; இவ்வாறு நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றால் நாங்கள் பற்றியெரிந்து உம் கட்டளைகளை விழிப்புடனும் ஆர்வத்துடனும் கடைப்பிடிக்கச் செய்தருள்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
என் தலைவரே, நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-10
அந்நாள்களில்
ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலை விட்டு ஓடினார். அவர்கள் முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
பின்பு அவர்கள் அவரை நோக்கி, “உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 15: 2. 3-4. 5 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
2 மாசற்றவராய் நடப்போரே!
இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;
உளமாற உண்மை பேசுவர். -பல்லவி
3 தம் நாவினால் புறங்கூறார்;
தம் தோழருக்குத் தீங்கிழையார்;
தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்;
தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். -பல்லவி
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;
மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;
இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
மறைந்திருந்த இறைத்திட்டம் இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 24-28
சகோதரர் சகோதரிகளே,
உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன்.
நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42
அக்காலத்தில்
இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.
ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:
இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்
நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. பல்வேறு அணர்த்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்
துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று
4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்
எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. எமக்காக மன்றாடுவோம்
மரியாவைப் போலவும் மார்த்தாவைப் போலவும் நாமும் நாளும் சந்திக்கும் வாழ்வின் எடுகோள்கள் வழியாக எமது குடும்ப நல் ஒன்றிப்பிற்காக உழைப்போமாக. எமது உடலாலும், உள்ளத்தாலும் மேலும் உறவாலும் வலுச்சேர்க்கும் அன்பின் பிணைப்பை உருவாக்கி நல்ல ஆரோக்கியமான சமூகம் அமைக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
இறைவா, பழைய ஏற்பாட்டுப் பல்வேறு பலிகள் உம் திருமகனின் நிறைவான ஒரே பலியில் முழுமை பெறச் செய்தீர்; ஆபேலின் காணிக்கைகள் மீது ஆசி வழங்கிப் புனிதப்படுத்தியது போல, உமது மாட்சியின் மேன்மைக்காக இறைப்பற்றுள்ள உம் அடியார்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் பலியை ஏற்று, அது அனைவரின் மீட்புக்கும் பயன்படச் செய்தருள்வீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி திபா 110:4-5
இரக்கமும் அருளும் உடைய ஆண்டவர், தம் வியத்தகு செயல்களை நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளித்தார்.
அல்லது திவெ 3:20
இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்; யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் அவரோடு உள்ளே சென்று அவரோடு உணவு அருந்து வேன்; அவரும் என்னோடு உணவு அருந்துவார், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment