பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் இணைந்து, புது உலகம் படைக்க இயேசுவின் திருக்குலமாய் கூடி வந்திருக்கும் என் உறவுகளே! இன்று பொதுக்காலம் 17ம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்றோம். இக்கல்வாரிப் பலியில் இறைபுகழ் பாட உங்களை அழைத்து நிற்கின்றோம்.
தொடக்கநூல் ஆசிரியர் இறைவன் இவ்வுலகின் மாந்தர்மேல் கொண்ட அன்பு எத்தகையது என்பதை எண்பிக்க, ஆபிரகாமிற்கும் இறைவனுக்கும் இடையில் நடந்த உரையாடலை படம்பிடித்துக் காட்டுகின்றார். சோதோம் கொமோரா எவ்வளவிற்கு பாவம் நிறைந்திருந்து, நீதிமான்களை இழந்து காணப்பட்ட வேளையில் இறைவனோடு இடம்பெற்ற ஒரு பரிந்துரையாக இதைக் காணலாம். குற்றங்களாலும் பாவங்களாலும் நாம் இறந்தவர்களாய் இருக்கின்றோம் என்பதை புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தின் வழியாக ஓர் அறைகூவல் விடுக்கின்றார். லூக்கா நற்செய்தியில் "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்" எனும் மிக ஆழமான நம்பிக்கை வாழ்வின் வழியைக் காண்பிக்கின்றார் இயேசு.
எனவே, உண்மை என்பதற்கு வரைவிலக்கணம் இயேசு என்பதை உணர்ந்துகொள்வோம், வாழ்ந்து பார்ப்போம். பசித்தோர்க்கு உணவைக் கொடுத்தே வாழ்விக்கமுடியும், அன்பில்லார்க்கு அன்புசெய்தே வாழ்விக்க முடியும், காயப்பட்டோருக்கு மருந்தளித்தே ஆற்றமுடியும், உறவைத் தொலைத்தவர்க்கு உடனிருந்தே ஆறுதல் அளிக்கமுடியும். அதேபோல் தேவை அறிந்து செயற்படும் இயேசுவில் எமது உள்ளத்தை இன்று ஒப்புக்கொடுப்போம். ஏனெனில் இன்றைய திருப்பாடல் கூறுவதுபோல, 'ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்' என்று ஆண்டவரின் பிரமாணிக்கத்தையும், இவ்வுலகின் மேல் கொண்ட அன்பையும் ஆழ விபரிக்கின்றது. ஆண்டவரில் நாம் கொள்ளும் அன்பு, இவ்வுலகின் எல்லையைவிட பெரியது என்பதை நிறுபிப்போம், அவருக்காக வாழும் தியாகம் திறைந்த எமது உள்ளம் கடலைவிட ஆழமானது என்பதை வெளிப்படுத்துவோம்.
இந்த ஆழமான சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் இணைந்துகொள்வோம், இறைவரம் வேண்டி மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண். திபா 67:6-7,36
கடவுள் தமது தூயகத்தில் உறைகின்றார்: தமது இல்லத்தில் மக்கள் ஒன்று பட்டு வாழச் செய் கின்ற கடவுளே அவர்களுக்கு வலிமையையும் மனத்திடத்தையும் அளிப்பார்.
திருக்குழும மன்றாட்டு
உம்மை எதிர்நோக்கி இருப்போரைப் பாதுகாப்பவரான இறைவா, உம்மால் அன்றி ஆற்றல் வாய்ந்ததும் புனிதமானதும் எதுவும் இல்லை; எங்கள் மீது உமது இரக்கத்தை மேன்மேலும் பொழிவதால் உம்மை எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டு நிலையானவற்றை நாங்கள் இப்போதே பற்றிக்கொள்ள நிலையற்ற இன்றைய நன்மைகளைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 20-32
அந்நாள்களில்
ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்துகொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்” என்றார்.
அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.
அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.
அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.
மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, “ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?” என்று கேட்க, ஆண்டவர், “நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்” என்றார்.
அப்பொழுது ஆபிரகாம்: “என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?” என, அவரும் “முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.
அவர், “என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?” என, அதற்கு அவர், “இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்” என்றார்.
அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்கு பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்த பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 138: 1-2a. 2bc-3. 6-7ab.7c-8 (பல்லவி: 3a)
பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.
1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்;
தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;
என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;
எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.
7ab நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்;
என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; -பல்லவி
7c உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்;
ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு;
உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-14
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப் பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுந்துள்ளீர்கள்.
உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி உரோ 8: 15b
அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-13
அக்காலத்தில்
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.
மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. தாய்த் திரு அவைக்காக மன்றாடுவோம்:
எம் ஞான வழிகாட்டிகளான திரு நிலையினரும், துறவியர்களும் தாம் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழவும் முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, பணி வாழ்விலும் குழும வாழ்விலும் அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள அருள் கூரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அல்லது
எமது திருத்தந்தைக்காக மன்றாடுவோம்
இவ்வுலக மக்களின் உன்னத வாழ்வுக்காகவும் , நம்பிக்கை வாழ்வுக்காகவும் தினமும் செபித்து இவ்வுலகை புதுப்பிக்கும் பணியில் தம்மை அர்ப்பணிக்கும் எமது திருத்தந்தை, தூய ஆவியால் வழிநடத்தப்படவும், தமது ஆழமான தீர்மானங்களால் திரு அவையின் வாழ்வுக்கு அணிசேர்க்கவும், அமைதி தேடும் உலகிற்காக பரிந்துபேசவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வறுமையில் வாழ்வோருக்காக மன்றாடுவோம்:
நாளாந்த வாழ்வியல் ஓட்டத்தில் தம் வாழ்வினை நகர்த்திச் செல்லும் ஏழைகள், பசியினால் வாடுபவர்கள், தம் நாள் கூலிக்கேற்ற வருவாய்க்காக போராடும் மக்கள், கடன் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், வெளிநாடுகளில் வேலைசெய்ப்பவர்கள் யாவரும் உம் தொடர் அரவணைப்பையும், ஆசீரையும் தமது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கண்டு வாழ தயைகூர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. திரு அவையின் நம்பிக்கையாளர்களுக்காக மன்றாடுவோம்:
மனித மாண்புடன் படைக்கப்பட்ட நாம் அனைவரும் பாகுபாடுகள் களைந்து, இருப்பதைப் தேவையில் உள்ளவர்களுடன் பகிர்ந்து, இறைமனித அன்பை எம் நாளாந்த வாழ்வினால் சாட்சி பகர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இவ் உலகின் இயற்கைக்கு எதிராக செயற்பட்டு, மற்றவர்களின் வாழ்வை கருத்தில் கொள்ளாது வாழும் பலர் மத்தியில் மனித சுதந்திரத்தை மதிக்கவும், மாண்பை உயர்த்தவும், பாகுபாடுகளை களைந்து வாழவும், உரிமையை பெற்றுக்கொடுக்கவும் உழைக்கும் மனதை அளித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. துன்புறும் ஆன்மாக்களுக்காக மன்றாடுவோம்:
யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தருவாயில் உள்ள துன்புறும் எம் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அல்லது
பல்வேறு அணர்த்தங்களால் இறந்தவர்கள், கொடூர யுத்தத்தால் அநியாயமாக தம் உயிரை மாய்த்தவர்கள், பல்வேறு விபத்துக்களால் இறந்தவர்கள் என அனைவரும் உமது சந்நிதானம் வரவேண்டி மன்றாடுகின்றோம். இவ்வுலகில் பிறந்த யாரையும் நீர் கைவிடுவதில்லை என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். எனவே இவர்களை ஏற்று நித்திய வாழ்வை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, நீர்தாமே வாரி வழங்கிய கொடைகளிலிருந்து நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அதனால் உமது அருளின் ஆற்றலால் செயல்படும் இப்புனிதமிக்க மறைநிகழ்வுகள் இவ்வுலகில் எங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தி நிலையான பேரின்பத்துக்கு இட்டுச் செல்வனவாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - திபா 102:2
என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு ! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!
அல்லது - மத் 5:7-8
இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்; தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உம் திருமகனுடைய பாடுகளின் நிலையான நினைவாகிய இத்திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு சொல்லற்கரிய அன்பினால் அவரே எங்களுக்கு அளித்துள்ள இக்கொடை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்வீராக.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment