Sunday, 6 July 2025

பொதுக் காலம் பதினைந்தாம் ஞாயிறு - 13/07/2025

 பொதுக் காலம் பதினைந்தாம் ஞாயிறு 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புள்ள இறைமக்களே! இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அழைத்து நிற்கின்றேன். இன்று பொதூக்காலம் பதினைந்தாம் ஞாயிறு வாரத்தில் நாம் கால் பதிக்கின்றோம். அன்பு என்றால் என்ன என்பதை இயேசு தெளிவாக வரைவிலக்கணப்படுத்துவதை இன்றைய இறைவார்த்தைகளில் காணலாம். 

இயேசு இவ்வுலகை அன்பு செய்தார் என்பதை தனது செயல்களில் எண்பித்தார். கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறான இறைவன் இவ்வுலக மாந்தரின் இதயத்தை அன்புசெய்ததன் காரணமாக அவர் இவ்வுலகைத் தேடிவந்தார், இவ்வுலகில் போதித்தார், அன்பு என்றால் என்ன என்பதை வாழ்ந்துகாட்டினார். லூக்கா நற்செய்தியிலே நல்ல சமாரியன் உவமை வழியாக, அடுத்திருப்பவரின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவது எப்படி என்பதை கோடிட்டுக் காட்டுகின்றார். 

ஆபத்தில் உடனிருப்பது தான் அன்பு; இயலாமையில் துணையாய் இருப்பது தான் அன்பு; வறுமையில் உணவையாவது கொடுப்பதுதான் அன்பு, கண்களில் கண்ணீரை துடைக்கும் கரங்கள்தான் அன்பு; பிறர் வாழ தன்னிடம் இருப்பதை இழப்பதுதான் அன்பு. இதை நம் ஆண்டவர் காட்டிச் சென்றுவிட்டார். எனவே, இவ் இறைவார்த்தைகளின் அடிப்படையில், நாம் அன்பிற்கு புதிய வரைவிலக்கணம் கொடுப்போம். இயேசுவில் அன்பைக் கற்றுக்கொள்வோம்; அயலானுக்காக வாழும் வரம்கேட்போம். இப்பலியில் இணைந்து மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி

நான் நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; உமது மாட்சியை நீர் வெளிப்படுத்தும்போது நான் நிறைவு பெறுவேன்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, தவறி நடப்போர் நன்னெறிக்குத் திரும்பிவர அவர்களுக்கு உமது உண்மையின் ஒளியைக் காட்டுகின்றீர்; கிறிஸ்தவ நம்பிக்கையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தமது பெயருக்குப் பொருந்தாதவற்றை விலக்கவும் ஏற்றவற்றைச் செயல்படுத்தவும் செய்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 10-14

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.

ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. ‘நாம் அதைக் கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல் கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 69: 13. 16. 29-30. 35ab,36 (பல்லவி: 32b)

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.


13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்;

கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்;

துணை செய்வதில் நீர் மாறாதவர். -பல்லவி


16 ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;

உம் பேரன்பு நன்மை மிக்கது;

உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். -பல்லவி


29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்;

கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!

30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்;

அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். -பல்லவி


35ab கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;

யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்;

36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;

அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். -பல்லவி


அல்லது மாற்று பதிலுரைப் பாடல்

பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.


7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;

அது புத்துயிர் அளிக்கின்றது.

ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;

எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி


8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;

அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை;

அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி


9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;

அது எந்நாளும் நிலைத்திருக்கும்.

ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை;

அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி


10 பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;

தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பு அனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 63b,68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில்

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில்

என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:

“ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக்கொண்டார். மறு நாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.

கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


இறைமக்கள் மன்றாட்டு

1. தாய்த் திரு அவைக்காக மன்றாடுவோம்:

இறையரசின் வளமைக்கும், ஆன்மாக்களின் மீட்பிற்காகவும் பயணிக்கின்ற உம்  மறை உடலாகிய திரு அவையின் திருப்பணியாளர்கள் யாவரும் இறையரசின் மதிப்பீடுகளை தம் அர்ப்பண வாழ்வில் என்றும் கருத்தூன்றி வாழ வரமருள வேண்டுமென்று, ...  

2. உலக அமைதிக்காக மன்றாடுவோம்:

யுத்த பூமிகள் மனம் மாறவும், அரசியல் தலைவர்கள் மத்தியிலே மனித நேயம் மலரவும், இன, மத, மொழி, நிற வேறுபாடுகளைக் கடந்து நாம் யாவரும் இறைவனின் உன்னதமான படைப்பின் சிகரங்கள் என்பதை உணர்ந்து வாழத் தேவையான ஞானத்தின் ஆவியை மண்ணகத்தின் மீது பொழிய வேண்டுமென்று, ... 

3. மறைபரப்பு பணியில் உள்ளவர்களுக்காக மன்றாடுவோம்:

வாழ்வின் பல்வேறு சூழல்களின் மத்தியில் சென்று, இறைவாக்கு உரைத்திடும் அனைத்து மறைபரப்பாளர்களும் உம் அழைப்பின் மேன்மையை உணர்ந்து, உம் பணிக்காகவே தாங்கள் யாவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை குன்றா நற்செய்தியின் ஒளியில் சீர்தூக்கிப்பார்த்திட தயைகூற வேண்டுமென்று, ...

4. இறை நம்பிக்கையில் வாழாதவர்களுக்காவும், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்போருக்காகவும் மன்றாடுவோம்:

உலக மீட்பரான இயேசுகிறிஸ்துவின் ஒளி இவர்கள் வாழ்வினைத் தொடவும், இறைபக்தி மலரவும், அன்றாட வாழ்வியல் அனுபவங்கள் மூலமாக ஒரே இறைவனை கண்டு அனுபவிக்கவும் அருள்கூர வேண்டுமென்று, ...

5. நமது பங்கு திரு அவைக்காக மன்றாடுவோம்

அன்பை எமக்குக் கற்றுத் தரும் இறைவா! நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மில்தான் என்பதை நினைக்கின்றோம். நாம் வாழும்போதே பிறருக்காக கொடுப்பதிலும், பிறருக்காக செவிமெடுப்பதிலும், பிறருக்காக இழப்பதிலும் நாம் எம்மை கற்றுக்கொண்டு உணர்ந்துவாழ அருள்புரிய வேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் திரு அவையின் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; உம் நம்பிக்கையாளர் புனிதத்தில் வளர உதவும் உணவாக இவற்றை மாற்றியருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி காண். திபா 83:4-5 

படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே, உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக்குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.


அல்லது. யோவா 6:56

எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார்; நானும் அவரோடு இணைந்திருப்பேன், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய அருள்கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இம்மறைநிகழ்வுகளில் நாங்கள் அடிக்கடி பங்கேற்பதால் அவற்றின் மீட்பு அளிக்கும் பயன் எங்களில் வளரச் செய்வீராக. எங்கள்.


அருட்தந்தை ச். ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...