Thursday, 30 January 2025

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு வாரம் - ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா - 02/02/2025

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு வாரம் 

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா



ஞாயிறு இறைவார்த்தைகளும் மற்றும் விழாவுக்கான இறைவார்த்தைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

திருப்பலி முன்னுரை

இறை அன்பில் இணைந்திருக்கும் எம் இனிய உறவுகளே! பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாரமாகிய இன்று நாம் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவைக் கொண்டாடுகின்றோம். 

தனது முதல் தலைப்பேறான குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஓர் அழகிய விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அதிலே, இயேசுவை அர்ப்பணிக்க  முன்வரும் அன்னை மரியும் யோசேப்பும் அச் சட்டங்களை நிறைவேற்றுவதில் பிரமாணிக்கமாக இருந்தனர் என்பதையும் குறித்துக் காட்டுகின்றது. அன்னை மரியா இயேசுவை பெற்றெடுத்த பின், யூத சட்டத்திற்கமைய, தன்னையும் தூய்மைப்படுத்திக் கொள்ளும் நாளாகவும் இன்றைய நாள் அமைகின்றது. 

நாம் அமைத்துக்கொண்ட வாழ்விலே இன்றைய நாள் ஓர் அழகிய ஆரம்பத்தைக் குறித்துக்காட்டுகின்றது. ஒரு குழந்தைக்கான அனைத்துத் தியாகங்களும் பெற்றோரின் அர்ப்பணமே. அவர்களை இறை ஞானத்திலும், இவ்வுலகோடு போட்டியிட தேவையான அறிவிலும், பல சவால்களைக் கடந்து, போராட்டங்களில் வென்று, வெற்றியில் தொடர்ந்தும் செல்ல விவேகத்திலும் வளர்க்கவேண்டிய கடமை பெற்றோரின் பொறுப்பு என்பதையும் இன்றைய நாளும் வாசகங்களும் எமக்கு நினைவூட்டுகின்றன. 

இன்றைய உலகில் வாழும் எமக்கு ஆசீர்வாதங்கள் அதிகமாக தேவைப்படுகின்றன. பாவங்களாலும், பரிகாரம் இன்மையாலும், எமது இறுகிய மனப்பான்மையாலும், எதிர்மறை எண்ணங்களால் குறைசொல்லும் பழக்கத்தாலும் நாமும் இன்னும் இறைவனை இழந்துகொண்டு தான் இருக்கின்றோம். திருக்குடும்பத்தின் இவ் அர்ப்பணம், இவ்வுலகத்திற்கே தேடித்தந்த அருளாக மாறியது. நாமும் இவ்வுலகத்திற்காக அதன் தேவைக்காக வாழவும், எம்மை அர்ப்பணிக்கவும் இன்றைய பலியில் மன்றாடுவோம். குறிப்பாக, இவ்வுலகத்தின் அமைதிக்காகவும், யுத்தங்கள் இன்றி நிம்மதியான வாழ்வுக்காகவும் மன்றாடி இப்பலியில் இணைந்திடுவோம். 

வருகைப் பல்லவி

திபா 105:47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும். அதனால் நாங்கள் உமது திருப்பெயரை அறிக்கையிடுவோம்; உம்மைப் புகழ்வதில் மாட்சியுறுவோம்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் முழு மனதுடன் உம்மை வழிபட வேண்டுகின்றோம்: அவ்வாறே எல்லா மக்களையும் நேரிய உள்ளத்துடன் அன்பு செய்யவும் அருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன். 

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 4-5.17-19

எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்’.

நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.

அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15,17 (பல்லவி: 15)

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.


1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்;

ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.

2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்;

எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். -பல்லவி


3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்;

கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்;

ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.

4a என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி


5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;

ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.

6ab பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்;

தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி


15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்;

உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது.

17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;

இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையானவைதான். இருப்பினும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31 - 13: 13

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும் விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம்

நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம்.

ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.

ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரை குறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனான போது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 அல்லது குறுகிய வாசகம்

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையானவைதான். இருப்பினும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 4-13

சகோதரர் சகோதரிகளே,

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப் படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம்.

ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.

ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரை குறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனான போது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 4: 18b-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

எலியா, எலிசா போல் இயேசு யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-30

இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப் படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இவரே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்று  கூறி இயேசுவை இவ்வுலகின் மாட்சிக்காக அர்ப்பணித்தது போல, அவரிடம் முழுமையான நம்பிக்கைக் கொண்டு எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும், எமது மறை மாநில ஆயர், .......... அவர்களுக்காகவும் மன்றாடுவோம். இவ்வுலக வாழ்வுக்காக, நீதிக்காக, உண்மைக்காக உழைக்கும் இவர்கள் இயேசுவின் ஞானத்தையும், அன்பையும் அவர் தரும் அனைத்துப் பெறுபேறுகளையும் நிலைநாட்டும் கருவிகளாக திகழ வரமருள வேண்டுமென்று, ...

2. இயேசுவின் பெயரால் அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகள் இவ்வுலகின் விடியலாக மாறுவார்களாக. புதியன தேடி, புதுமைகள் செய்து, ஒவ்வொரு மாற்றத்திற்காக ஏங்கும் இவர்கள், உலகின் புது ஒளியாக மாறுவார்களாக. இயேசுவை இதயத்தில் தாங்கி, தமது நன்மைகளாலும் நல் ஒழுக்கங்களாலும் அணிசேர்க்க வேண்டுமென்று, ...

3. இறைவா!  இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்த விழாவை  கொண்டாடும் நாங்கள், ​​திருமுழுக்கின் வழியாக எமது அர்ப்பணத்தை நினைவில்கொள்கின்றோம். நாங்கள் உமக்கு உரியவர்கள் என்பதை எப்பொழுதும் நினைவுகூர்ந்து, உமது வார்த்தையின்படி எங்கள் வாழ்வு மிளிர அருள்புரிய வேண்டுமென்று, ...

4. உலகின் பல்வேறு கோணங்களிலே, விபத்துக்களால், தீயினால், யுத்தத்தால் மேலும் அணர்த்தங்களால் அவதியுறும் மக்களை கண்ணோக்கி, இந்த அர்ப்பண விழாவில் இம்மக்கள் அனைவரும் எதிர்நோக்கை தொலைத்திடாமல் இறை நம்பிக்கையிலும், பராமரிப்பிலும் வாழ்ந்திட அருள்ப்புரிய வேண்டுமென்று, ...

5. குடும்பங்களில் அன்பை தொலைத்திடாமல், பாசத்தை அணைத்திடாமல், நம்பிக்கையில் உயர்ந்து நிற்கும் கோபுரமாக வாழும் அனைத்து பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளில் என்றும் நிறை ஆசீர் கிடைத்திடவும், அனைத்து சந்தர்ப்பத்திலும் இறைவனுக்கு சான்றுபகரும் கருவிகளாகிட வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் பணிகளைக் காணிக்கையாக உமது பீடத்துக்குக் கொண்டுவருகின்றோம்; இவற்றைக் கனிவுடன் ஏற்று எங்களது மீட்பின் அருளடையாளமாக மாற்றுவீராக. எங்கள்.

காண். திபா 30:17-18

திருவிருந்துப் பல்லவி மத் 5:3,5

உமது முகத்தின் ஒளி உம் அடியார் மீது ஒளிர்வதாக! உமது இரக்கத்தால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூவி அழைத்தேன்.

அல்லது

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரிய து ; கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடையால் வலுவூட்டப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் முடிவில்லா மீட்பின் இந்த உதவியால் உண்மையான நம்பிக்கை என்றும் வளர்ச்சியுறச் செய்வீராக. எ ங்கள்.

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா

மெழுகுதிரியைப் புனிதப்படுத்துதலும் பவனியும்

இதோ, நம் ஆண்டவர் வ லி மை யோடு வருவார்;
தம் ஊழியரின் கண்களுக்கு ஒளியூட்டுவார், அல்லேலூயா.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நாற்பது நாள்களுக்குமுன் ஆண்டவரின் பிறப்பு விழாவை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். இன்று மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்த புனித நாள் வந்துள்ளது. இந்த நாளில் இயேசு திருச்சட்டத்தை வெளிப்படையாக நிறைவேற்றினாலும் உண்மையில் தம்மீது நம்பிக்கை கொண்ட தம் மக்களை அவர் சந்தித்தார். முதியோரான புனிதர்கள் சிமியோனும் அன்னாவும் தாய ஆவியாரின் ஏவுதலால் கோவிலுக்கு வந்தனர். அதே ஆவியாரால் உள்ளொளி பெற்று அவரை ஆண்டவர் என அறிந்து அக்களிப்புடன் அறிக்கையிட்டனர். அதே போல தூய ஆவியாரால் ஒன்றுகூடி யுள்ள நாம் கிறிஸ்துவை எதிர்கொள்ளக் கடவுளின் இல்லம் செல்வோமாக. அவர் மாட்சியுடன் வரும்வரை, அப்பத்தைப் பிடும்போதெல்லாம் நாம் அவரைக் கண்டு கொள்வோமாக.

மன்றாடுவோமாக.
ஒளி அனைத்துக்கும் ஊற்றும் தொடக்கமு மாகிய இறைவா, பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாகிய இயேசுவை நேர்மையாளர் சிமியோனுக்கு இன்று வெளிப்படுத்தினீரே; இத்திரிகளை உமது ஆசியால் * புனிதப்படுத்தியருளும்; உமது பெயரின் மாட்சிக்காகத் தங்கள் கைகளில் திரிகளை ஏந்திப் பணிந்து உம்மை மன்றாடும் உம் மக்களின் வேண்டலை ஏற்றருளும். அதனால் அவர்கள் நன்னெறியில் நடந்து என்றும் குன்றாப் பேரொளிக்கு வந்து சேரத் தகுதி பெறுவார்களாக. எங்கள்
பதில்: ஆமென்.

அல்லது

மன்றாடுவோமாக.
உண்மை ஒளியாகிய இறைவா, நிலையான ஒளியைப் பரப்புபவரும் அதன் காரணருமானவரே, நம்பிக்கையாளரின் இதயங்களில் முடிவில்லா ஒளியின் மாட்சியைப் பொழிந்தருளும்; இவ்வாறு உமது புனிதக் கோவிலில் மிளிரும் ஒளியால் எழில் பெற்றவர்கள், உமது மாட்சியின் ஒளிக்கு மகிழ்வுடன் வந்து சேர்வார்களாக. எங்கள். பதில்: ஆமென்.

அருள்பணியாளா திரிகளின் மீது அமைதியாகப் புனித நீரைத் தெளித்து பவனிக்காகத் தூபக், கலத்தில் சாம்பிராணி இடுகின்றார்.

பவனி தொடங்குகிறது.

அண்டவரை எதிர்கொள்ள அமைதியுடன் செல்வோமாக.
அல்லது
அமைதியுடன் செல்வோமாக.

வருகைப் பல்லவி காண். திபா 47:10-11 
கடவுளே! உமது கோவிலின் நடுவில் நாங்கள் உமது இரக்கத்தைப் பெற்றுக்கொண்டோம். கடவுளே, உமது பெயருக்கு ஏற்ப, உமது புகழும் உலகின் எல்லைவரை எட்டுவதாக. உமது வலக் கை நீதியால்
நிறைந்துள்ளது. "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மனித இயல்பையே தமதாக்கிக்கொண்ட உம் ஒரே திருமகன் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட இந்நாளில் மாண்புக்கு உரிய உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்களும் அவ்வாறே தூய்மை அடைந்த உள்ளத்துடன் உமக்குக் காணிக்கை ஆகுமாறு அருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு
நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4
கடவுளாகிய ஆண்டவர் கூறுவது:
“இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

 பதிலுரைப் பாடல் திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி: 10b)
பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.

7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -பல்லவி

8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்;
இவரே போரில் வல்லவரான ஆண்டவர். -பல்லவி

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -பல்லவி

10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்;
இவரே மாட்சிமிகு மன்னர். -பல்லவி

இரண்டாம் இறைவாக்கு

எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆனார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18
சகோதரர் சகோதரிகளே,
ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டு இருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.
மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 2: 32

அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.

 நற்செய்தி இறைவாக்கு

உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.
அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பைஎன் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.
சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.
குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி  

அல்லது குறுகிய வாசகம்

உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-32
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.
அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உலகம் வாழ்வு பெற உம் ஒரே திருமகன் மாசற்ற செம்மறியாக உமக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று திருவுளமானீரே; திரு அவை அக்களிப்புடன் ஒப்புக்கொடுக்கும் காணிக்கை உமக்கு உகந்ததாய் இருக்க அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தொடக்கவுரை : ஆண்டவர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட மறைபொருள்.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
 
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் உம்மோடு என்றுமுள்ள உம் திருமகன்
இன்று கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டார்;
அவரே இஸ்ரயேல் மக்களுக்கு மாட்சி எனவும்
பிற இனத்தாருக்கு ஒளி எனவும்
ஆவியாரால் அறிவிக்கப்பெற்றார்.
ஆகவே உமது மீட்பை மனமகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளச் செல்லும் நாங்கள்,
வானதூதர்களோடும் புனிதர்களோடும் சேர்ந்து
உம்மைப் புகழ்ந்து முடிவின்றிச் சொல்வதாவது:
தூயவர்.

திருவிருந்துப் பல்லவி
லூக் 2:30-31 மக்கள் அனைவரும் காணு மாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது
மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, கிறிஸ்துவைக் காணும் முன் தாம் சாவதில்லை என்ற சிமியோனின் எதிர்பார்ப்பை இன்று நிறைவேற்றினீரே; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு வழியாக எங்களிடம் உமது அருளை நிறைவு பெறச் செய்வதால் ஆண்டவர் கிறிஸ்துவை எதிர்கொள்ளப் புறப்படும் நாங்கள் நிலைவாழ்வை அடைய அருள்புரிவீராக. எங்கள்.

 அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Monday, 20 January 2025

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 26/01/2025

 பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 



திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! ஒவ்வொரு பொழுதும் இறைவனின் நிறை ஆசீரே என்பதை நினைந்து இறைவனுக்கு நன்றிகூறி இப்புதிய நாளையும், வாரத்தையும் தொடங்குகின்றோம். வழிபாட்டு வாரமாகிய, பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு வாரத்த்திற்க்குள் இன்று நுழைகின்றோம். 

இவ்வுலகத்தின் மெய்யழகை கண்களால் கண்டு வியந்துகொள்ளவும், உணர்வுகளுக்கு இணையான இசையைக் கேட்டு விழித்துக் கொள்ளவும், இவ்வுலகத்தின் வியத்தைகு தரும் வல்லமையான படைப்பை தொட்டுணர்ந்துகொள்ளவும், இவ்வனைத்திற்கும் மேலானவர் இறைவன் என அவர் மேன்மையை புரிந்துகொள்ளவும், உயர்வான படைப்பாக எம்மைப் படைத்து இவ்வுலகிற்கு கையளித்த இறைவனை நினைக்க்கும் போதெல்லாம் மனிதாகிய எமது படைப்பும் எமக்கு ஓர் அதிசயமே. இவரே எமை தேர்ந்தெடுத்து, அர்ச்சித்து, அவரின் சொந்தமாக எமை மாற்றியுள்ளார். இதைத் தான் இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு நினைவூட்டுகின்றன. 

எனவே எமக்குள் இருக்கும் அனைத்து அதிசயங்களையும் ஏற்றுக்கொள்வோம். இறைவன் கொடுத்த இவ் ஊண் உடலுக்காக நன்றிசொல்லுவோம். இவ் அழகிய அதிசயத்தின் வழியாக இறைவனை அறிந்து,  அவரின் அன்பை உணர்ந்து, வெளிப்படுத்தக்கூடிய அனைத்து வழிமுறைகளை கற்றுக்கொள்வோம். அவரின் உயிர் மூச்சாக எமக்குள் செயலாற்றும் அவரின் ஆன்மாவை கறையின்றி காத்து அவரோடு ஒன்றிக்கும் நாள்வரைக்கும் புனிதமாக வாழ இப் பலி வழியாக இறைவரம் கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

'காண். திபா 95:1,6. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகம் அனைத்துமே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆற்றலும் எழிலும் அவர் திருமுன் உள்ளன; மாட்சியும் புகழ்ச்சியும் அவரது திருத்தலத்தில் உள்ளன.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் செயல்களை உமது திருவுளத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தியருளும்; இவ்வாறு உம் அன்புத் திருமகனின் பெயரால் நாங்கள் மிகுதியான நற்செயல்கள் புரிந்திடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

எஸ்ரா கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார். மக்களும் அதைப் புரிந்துகொண்டனர்.

இறைவாக்கினர் நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 2-4a, 5-6, 8-10

அந்நாள்களில்

ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.

திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின் மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.

மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர். ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6: 63b)

பல்லவி: ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.

ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி


8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;

அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை;

அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி


9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;

அது எந்நாளும் நிலைத்திருக்கும்.

ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;

அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி


14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!

என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;

என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-30

சகோதரர் சகோதரிகளே,

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. “நான் கை அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? “நான் கண் அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல” எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?

உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாய் இருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே. கண் கையைப் பார்த்து, ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்றோ தலை கால்களைப் பார்த்து, ‘நீங்கள் எனக்குத் தேவையில்லை’ என்றோ சொல்ல முடியாது.

மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வோர் உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தார். ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்லசெயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14,27

சகோதரர் சகோதரிகளே,

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 4: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-4; 4: 14-21

மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.

அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

அலகையினால் சோதிக்கப்பட்ட பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

இறைமக்கள் மன்றாட்டு

1. அன்பின் ஆண்டவரே! எமது திரு அவைக்காக உம்மிடம் வருகின்றோம். உமது வார்த்தையை உடைத்துக் கொடுக்கவும், உமது பிரசன்னத்தை எம்மில் உணர்த்தவும், செப வாழ்வு வழியாகவும், திருவருட்சாதனங்கள் வழியாகவும், எம்மை புனிதப்படுத்தவும் உமது திரு நிலைப்பணியாளர்கள் தொடர்ந்தும் பணியாற்ற அவர்களுக்கு பலமளித்திட வேண்டுமென்று, ...

2. அன்பின் ஆண்டவரே! இன்றைய உமது அழகிய வார்த்தை எமது திரு அவைக்கு தேவையான புதிய அர்த்தத்தை வழங்குவதாக. மக்கள் அனைவரின் இதயங்களில் இவ்வார்த்தை ஊடுறுவி, அன்பையும் இறை நம்பிக்கையையும் நிறைவாக வழங்க வேண்டுமென்று, ... 

3. அன்பின் ஆண்டவரே! நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று, ...

4. துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று, ...

5. அன்பின் ஆண்டவரே! நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம் என்பதன் அர்த்தத்தை உணர்ந்துகொண்டு, இவ்வுலகில் வாழும் அழைத்து மக்களும், யுத்தங்கள் அற்ற, பிரிவினைகள் அற்ற, வேறுபாடுகள் அற்ற ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்க்கி புதுமைகாண அருள் புரிந்திட வேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவற்றைப் புனிதப்படுத்தி, இவை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்புரிவீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி காண். திபா 33:6

ஆண்டவரை அணுகிச் செல்லுங்கள், அவரது ஒளியைப் பெறுவீர்கள்; உங்கள் முகங்கள் அவமானத்திற்கு உள்ளாகாது.

அல்லது

யோவா 8:12 உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புத்துயிர் அளிக்கும் உமது அருளைப் பெற்றுள்ள நாங்கள் உமது கொடையை முன்னிட்டு என்றும் பெருமை கொள்வோமாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி


Wednesday, 15 January 2025

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - 19/-1/2025

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 



திருப்பலி முன்னுரை 

இறை அன்பின் பிள்ளைகளாய் இப்பலியிலே இணைந்திருக்கும் எம் அன்பு இறைமக்களே! தூய ஆவி வழியாக கிடைக்கும் அனைத்து கொடைகள் மற்றும் வரங்களை இப்பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரம் வழியாக நாம் பெற இறைவரம் வேண்டி வந்திருக்கின்றோம். 

இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நாம் பெறும் ஆசீர்கள் நிறைவானதே. திரு அவையிலே நாம் பலராக, பல மொழி பேசுபவராக, பல திறமைகளை கொண்டவர்களாக இருந்தாலும் நாம் ஒரே கிறிஸ்துவையே பின்பற்றுகின்றோம், ஒரே எதிர்நோக்கைக் கொண்டே வாழுகின்றோம் மேலும் ஒரே நம்பிக்கையிலே நாம் பயணிக்கின்றோம் என புனித பவுல் எமக்கு நினைவூட்டுகின்றார். நற்செய்தியில், இயேசுவின் புதுமைகளில் தண்ணீரை இரசமாக மாற்றிய புதுமை, முதற் புதுமையாக யோவான் நற்செய்தியில் தரப்பட்டுள்ளது. 

நாம் மாற்றங்களை உருவாக்கும் சமுகத்தில் வாழ விரும்புகின்றோம்; அதை ஏற்படுத்தும் சக்திகளையும் உருவாக்குகின்றோம். இம்மாற்றங்கள் புறக்காரணிகளில் செல்வாக்கு செலுத்துவதைப் போல, எனது ஆளுமையிலும் எமது சிந்தனைகளைலும் எமது ஆழமான நம்பிக்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதனால் தான் நாம் பல காரணங்களால் வேறுபட்டிருந்தாலும், ஒரே கிறிஸ்துவில் எம்மை ஒன்றிணைக்க வேண்டும். அன்னை மரியாள் கூறுவதுபோல 'அவர் சொல்லுவதை எல்லாம் செய்யுங்கள்' எனும் வார்த்தை எம் அனைவரையும் நடத்திச் செல்ல மன்றாடுவோம். 

மேலும், இயற்கை அணர்த்தத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவ்வுலகின் மக்கள் அனைவரையும் இப்பலியிலே நிணைந்து அவர்களுக்காகவும் இறைவரம் கேட்டு மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

திபா 65:4 கடவுளே, உலகம் அனைத்தும் உம்மை ஆராதிக்கும்; உம் புகம் பாடிடும்; உன்னதரே, உம் பெயருக்குப் பா ஒன்று இசைக்கும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ஆண்டு நடத்துகின்றவர் நீரே; உம் மக்களின் வேண்டல்களை இரக்கத்துடன் கேட்டு எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியை அளித்தருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவார்த்தை

மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.

‘கைவிடப்பட்டவள்’ என்று இனி நீ பெயர் பெற மாட்டாய்; ‘பாழ்பட்டது’ என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ ‘எப்சிபா’ என்று அழைக்கப் படுவாய்; உன் நாடு ‘பெயுலா’ என்று பெயர்பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்.

இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பது போல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வது போல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 96: 1,2a. 2b-3. 7-8a. 9-10ac (பல்லவி: 3b)

பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.


1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;

உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;

2a ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;

அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி


2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;

அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;

மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.

8a ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். -பல்லவி


9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்;

உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.

10ac வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;

ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;

அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி


இரண்டாம் இறைவார்த்தை

தூய ஆவியார் தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11

சகோதரர் சகோதரிகளே,

அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர்.

பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவு செறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூய ஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும், இன்னொருவருக்கு இறைவாக்கு உரைக்கும் ஆற்றலையும், வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும், மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றலையும், பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.

அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவார்த்தை

கானாவில் இயேசு செய்த முதல் அரும் அடையாளத்தில் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

இறைமக்கள் மன்றாட்டு 

அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். எனவே இவ்விறைவனிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. ஆயர்களை நம்பி மந்தைகளை ஒப்படைத்து அவர்களை நேரிய, உயரிய பாதையில் நடத்த நீர் கொடுத்த குருக்கள் துறவிகள் மற்றும் அனைவரும் உமது பணியை ஏற்று திறம்படச் செய்ய அருள்புரிய வேண்டுமென்று,... 

2. அன்பின் ஆண்டவரே, எமது வாழ்வுக்கு தேவையான செபத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக அறியவும், இதனால் உம்மேல் கொண்டுள்ள எங்கள் உறவு சிறக்கவும்,  எங்கள் சகோதர சகோதரிகளுடனான சிறந்த புரிதல் உருவாகவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

3. நீதியுடன் ஆட்சி செய்யும் இறைவா! நமது தலைவர்கள் அனைவரும் மிகவும் தாழ்மையுள்ளம் கொண்டவர்களாகவும் நன்மை பயக்கும் கொள்கைகளைத் தேர்ந்தெடுப்பதில் நேர்மையாக இருக்க அருள்புரிய வேண்டும் என்று, ...

4. “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்று இயேசுவைக் குறித்து கூறிய அன்னை மரியைப் போல,  எமது வாழ்க்கைத் தேர்வுகளில் வழிகாட்ட நல்ல பெற்றோரையும், அனைவரும் இயேசுவின் பக்கம் எமது பார்வையைத் திருப்ப நல்ல ஆசான்களையும், அவர் நம் ஒவ்வொருவருக்கும் விட்டுச்சென்ற போதனைகளை கடைப்பிடிக்கவும் கற்றுத்தரவும் சிறந்த பணியளர்களையும் எமக்கு அளித்தருள வேண்டுமென்று, ...

5. ‘கடவுள் நற்செய்தி மூலம் நம்மை அழைத்திருக்கிறார்' எனும் அழகிய சிந்தனை வழியாக, இந்த புதிய ஜுபிலி ஆண்டின் தொடக்கத்தில், நாம் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவும், கிறிஸ்துவின் வழியாக நாம் உருவாக்கப்படவும், நமது சமூகம் புதுப்பிக்கப்படவும் வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 22:5 என் கண்முன்னே நீர் எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்தீர்; நிரம்பி வழிகின்ற எனது பாத்திரம் எத்துணை மேன்மையானது!

அல்லது

1 யோவா 4:16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம்; நம்புகிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு ஒரே விண்ணக உணவால் நிறைவு பெற்ற நாங்கள் ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Thursday, 9 January 2025

ஆண்டவருடைய திருமுழுக்கு 12/01/2025

 ஆண்டவருடைய திருமுழுக்கு



திருப்பலி முன்னுரை

இறை அன்பில் இணையும் என் இறை உறவுகளே! உங்கள் அனைவரையும் இக் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்றைய நாளிலே அன்னையாம் திரு அவை "ஆண்டவருடைய திருமுழுக்கு" திரு விழாவைக் கொண்டாடுகின்றாள். இன்றைய நாளோடு கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவுற்று, ஆண்டின் பொதுக்காலம் ஆரம்பமாகின்றது. 

படைப்பின் தொடக்கத்திலே மூவொரு இறைவனின் பிரசன்னம் இருந்ததுபோல், ஆண்டவரின் திருமுழுக்கின் போதும் இதே மூவொரு இறைவனின் பிரசன்னம் இருப்பதைக் காணலாம். இவ் உன்னத பிரசன்னமே, இயேசுவை இறுதிவரைக்கும் வழிநடத்தியது. இயேசுவின் பணிவாழ்வின் ஆரம்பத்திற்கு ஆணிவேராகவும், அத்திவாரமாகவும் இருந்தது இந்த திருமுழுக்கு. இந்த கனப்பொழுது வரைக்கும் தான் இயேசுவின் வருகைக்கான ஆயத்தமாக திருமுழுக்கு யோவானின் பணி இருந்தது. இதிலிருந்து அவர் முன்னறிவித்த இயேசுவின் பணிவாழ்வு ஆரம்பமாகின்றது. 

இன்றைய நாளிலே, நாம் பெற்றுக் கொண்ட எமது திருமுழுக்கை நினைத்துக் கொள்வோம்; அத் திருவருட்சாதனத்தின் வழியாக நாம் பெற்றுக் கொண்ட கொடைகளுக்காக நன்றி சொல்லுவோம். எமது கிறிஸ்தவாழ்வு  இறை அன்பிலும், பராமரிப்பிலும், நம்பிக்கையிலும் கட்டப்பட்ட வாழ்வாக மிளிர வரம்வேண்டுவோம். நாம் இறைவனின் பிள்ளைகள் எனும் உரிமையோடு அவரை எம் இதயத்தில் தாங்கிக்கொள்வோம். பாவங்களை தகர்த்தெறிந்து புனித வாழ்வு வாழ இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண். மத் 3:16-17 ஆண்டவர் திருமுழுக்குப் பெற்றவுடனே வானம் திறக்கப்பட்டது; புறா வடிவில் ஆவியார் அவர் மீது தங்கினார்; என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று தந்தையின் குரல் ஒலித்தது.


"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு :

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்துவின் மீது தூய ஆவி இறங்கி வர, அவரை உம் அன்பார்ந்த மைந்தர் எனச் சிறந்த முறையில் அறிக்கையிட்டீரே; தண்ணீராலும் தூய ஆவியாலும் புதுப் பிறப்பு அடைந்துள்ள மக்களை உமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட நீர் அவர்கள் உமக்கு ஏற்புடையவர்களாக என்றும் நிலைத்திருக்க அருள்வீராக. உம்மோடு.


அல்லது

இறைவா, உம் ஒரே திருமகன் எங்களது மனித உடலின் தன்மையில் தோன்றினார்; இவ்வாறு தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை நாங்கள் கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு


முதல் இறைவாக்கு

ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5,9-11

“ ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30 (பல்லவி: 1)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!


1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!

நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.

2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்;

வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். - பல்லவி


3 நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்;

கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்;

காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!

4 காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்;

தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். - பல்லவி


24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை!

நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.

25 இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;

அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. - பல்லவி


27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.

28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன;

நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. - பல்லவி


29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்;

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.

30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;

மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும்

கடவுள் நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14; 3: 4-7

அன்பிற்குரியவரே,

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, வானம் திறந்தது.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 15-16,21-22

அக்காலத்தில்

மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

இறைமக்கள் மன்றாட்டு 

1. பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். அன்பின் இறைவா! இவ்வுலகின் மக்களை உமது அரியணை காணச் செய்ய, திருவருட்சாதனங்களால் அலங்கரிக்கும் அனைத்து திரு நிலைப் பணியாளர்களும், தங்கள் பணியை நிறைவாகச் செய்ய அருள்புரிய வேண்டுமென்று, ...

2. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். அன்பின் இறைவா! திருமுழுக்கு எனும் அருட்சாதனத்தால் நாம் இறைவனை முழுமையாக அனுபவிக்கவும் அவரின் அன்பை நிறைவாக சுவைத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

3. ஆண்டவரே, உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். அன்பின் இறைவா! திருமுழுக்கின் வழியாக நீர் தந்த தூய ஆவிக்காக நன்றி சொல்கின்றோம். இவ்வுலகத்தை தமது அதிகாரத்தால், வல்லமையால் ஆளும் தலைவர்கள், இறை ஏவுதலின் வழியாக தமது தீர்மானங்கள புடமிடவும், மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

4. இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அன்பின் இறைவா! பல்வேறு காரணங்களால் நாளும் இறந்துகொண்டிருக்கும் உம் மக்களை கண்ணோக்கும். எமது பாவங்களை அல்ல, உமது இரக்கத்தினால் எம்மை தூய்மைப்படுத்தி நீர் தரும் மீட்பை அனுபவிக்கவும், இவ்வுலகின் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவும் வரமருள வேண்டுமென்று, ...


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அன்புத் திருமகனுடைய வெளிப்பாட்டைக் கொண்டாடும் நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அவர் மனமிரங்கி உலகின் பாவங்களைக் கழுவத் திருவுளம் கொண்டதால் உம் நம்பிக்கையாளரின் காணிக்கை அவரது பலியாக மாறுவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

தொடக்கவுரை: ஆண்டவருடைய திருமுழுக்கு.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


வியத்தகு மறைநிகழ்வுகளால் யோர்தான் ஆற்றில்

புதிய முழுக்கினை நீர் குறித்துக் காட்டினீர்;

அதனால் விண்ணிலிருந்து வந்த குரல் வழியாக

உம்முடைய வார்த்தை மனிதரிடையே குடி கொண்டு இருப்பதை நாங்கள் நம்பச் செய்தீர்;


மேலும் தூய ஆவியார் புறா வடிவில் இறங்கியதன் வழியாக

உம் ஊழியர் கிறிஸ்துவை மகிழ்ச்சியின் எண்ணெயால் பூசி

அவரை ஏழைகளுக்கு நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பியதை அறியச் செய்தீர்.


ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து

நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,

முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:

தூயவர்.


திருவிருந்துப் பல்லவி :

யோவா 1:32, 34 இதோ! நான் கண்டேன்; சான்று பகர்ந்தேன்; ஏனெனில் இவரே இறைமகன் என்று யோவான் இவரைப் பற்றிக் கூறினார்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுக்கு நம்பிக்கையோடு செவிமடுக்கும் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக உண்மையில் அழைக்கப்பட்டு அதற்கு ஏற்ப வாழ்வோமாக. எங்கள்.

அருட்தந்தை சா. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி


பொங்கல் விழா 14/01/2025

 பொங்கல் விழா

நிலத்தின் விளைச்சலைச் சேகரித்த பிறகு


திருப்பலி முன்னுரை:-

என் அன்புள்ள உறவுகளே! இன்று நாம் உலக தமிழ் உறவுகளோடும் உணர்வுகளோடும் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றோம்.  நிலத்தை உழுது, விதைகளை விதைத்து, அதை அறுவடை செய்து அதன் விளைச்சலை பெருமகிழ்வோடு இவ்வுலகிற்கு கொடுக்கும் ஒவ்வொரு உழைப்பாளியும் இறைவனை நினைந்து நன்றி சொல்லும் நாள் இது. ஆகவே தான் இன்றைய நாளை உழவர் தினம் என்றும் அழைக்கின்றோம். நாமும் இறைவனுக்கு நன்றி சொல்லி,  இயற்கையையும் எமது உழைப்பாளியையும் நம்பி எமது புதிய பயணத்தை தொடங்குகின்றோம். நாம் வாழ்வதும், இயங்குவதும், இருப்பதும் அவராலே எனும் உண்மை இன்றைய நாளின் பொருளிலே தெளிவாகின்றது. எம்மை வாழ்விக்கும் இறைவனை இவ்வருடத்தின் தொடக்கத்திலே நினைந்து நன்றிசொல்வது எமது கடமையும் தகுதியுமாகின்றது. 

இயற்கை தந்த விளைச்சலின் முதற்கனியை இறைவனுக்குக் கொடுத்து நன்றி சொல்கின்றோம். நாமும் இறைவனின் முதற்கனிகளே! நாம் எம்மை அர்ப்பணிக்கும் போது, எமது நன்றி உணர்வை இறைவனுக்கும், நாம் பயிரிடும் போது எமக்கு நிறைவாகவே ஈந்தளிக்கும் இயற்கைக்கும், எமக்காக பாடுபடும் எமது எமது உழைப்பாலிகளுக்கும் சமர்ப்பிப்போம். இன்றைய திருப்பலியில் இவர்களுக்காக இணைந்து மன்றாடுவோம். அதேவேளை, இறைவன் இன்னும் எங்களை ஆசீர்வதிக்கவும், எமது வாழ்வுக்கான ஆசீரை நிறைவாக தரவும் மன்றாடுவோம். பசியினால் வாடும் மாந்தரை நினைத்து அவர்களிலும் இறை செயல் மிளிர தொடர்ந்தும் பலியிலே மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

திபா 66:7நானிலம் தன் பலனை ஈந்தது: கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக.


திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, நல்ல தந்தையே, உமது பராமரிப்பினால் மனிதரிடம் நிலத்தை ஒப்படைத்தீரே; நாங்கள் நிலத்திலிருந்து பெற்ற விளைச்சல் வழியாக எங்கள் வாழ்வைப் பேணிக் காக்கச் செய்தருளும். உம்முடைய புகழ்ச்சிக்காகவும் அனைவருடைய நலனுக்காகவும் உமது உதவியால் நாங்கள் என்றும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அருள்வீராக. உம்மோடு.


அல்லது

ஆண்டவரே, மனிதருக்கு நன்மை பயக்கும் நிலத்தின் விளைச்சலுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; இவ்வுலகில் உமது மேலான பராமரிப்பினால் நீர் எங்களுக்குப் போது மான விளைச்சலை அளித்தது போல, எங்கள் உள்ளமாகிய நிலத்தில் நீதி தளிர்விட்டு, அன்பின் நற்கனிகளை விளையச் செய்வீராக. உம்மோடு.


இறைவார்த்தை 

பழைய ஏற்பாட்டிலிருந்து - 1

ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7-18

அந்நாள்களில்

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.

நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும்போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும்போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலை நிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலை நிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.

எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


                                                        பழைய ஏற்பாட்டிலிருந்து - 2

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 21-24, 26-27

நிலமே நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார். காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்; ஏனெனில் பாலை நிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன; மரங்கள் கனி தருகின்றன; அத்தி மரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன.

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்; ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்; முன் போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்; ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும் என்னையன்றி வேறு எவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனி மேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


புதிய ஏற்பாட்டிலிருந்து - 1

கடவுளே விளையச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10

சகோதரர் சகோதரிகளே,

நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன் மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

                                                                புதிய ஏற்பாட்டிலிருந்து - 2

செல்வர்களாய் இருப்பவர்கள் நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைத்தலாகாது.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 6-11, 17-19

அன்பிற்குரியவரே,

இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவு உள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்தது இல்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.

செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள் மேல் வருவித்துக்கொள்கிறார்கள்.

கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு.

இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கு என்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்து வைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல்கள் - 1

திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 6)

பல்லவி: நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

அல்லது: (3a): கடவுளே! மக்களினத்தார் அனைவரும் உம்மைப் போற்றுவர்.


1 கடவுளே! எம் மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

உம் திருமுக ஒளியை எம் மீது வீசுவீராக!

2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;

பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். -பல்லவி


4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக!

ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்;

உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி


6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள்,

நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!

உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி


                                                            பதிலுரைப் பாடல்கள் - 2

திபா 126: 2b-3. 4-5. 6 (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.


2b "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்”

என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;

அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி


4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல,

எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

} 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி


6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்;

அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 126: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். அல்லேலூயா.


நற்செய்தி இறைவார்த்தை - 1

மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 15-21

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு” எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

                                                            நற்செய்தி இறைவார்த்தை - 2

காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினார்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில்

இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்த போது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்த பொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.  பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1) எம்மைப் படைத்து பராமரிக்கும் பரம்பொருளே! இறைவா! நீர் எங்களுக்கு கொடையாக தந்த இயற்கைக்காகவும், அதன் பலன்களுக்காகவும் நன்றி கூறுகிறோம். இந்த வளமிக்க இயற்கையை நாங்கள் பாதுகாத்து எம்பின்வரும் சந்ததியினரும் அதன் பலன்களை பெறும் வண்ணம் வாழ்ந்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) சேற்றில் பதித்து, வெயில் மழை பாராமல் எப்போதும் விளைநிலங்களில் பணிபுரியும் எமது விவசாய நண்பர்களுக்காக மன்றாடுகிறோம். தங்களின் உடல் உழைப்பின் பலனை நிறைவாகப் பெற்று, பஞ்சம், பசி, கடன், நோய் போன்ற எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெற்று நிறைவோடு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) விவசாய வளமிக்க எம் நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தினருக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுயநலத்தை மறந்து ஏழை, எளிய விவசாய பெருமக்களின் வாழ்வு, வளம் பெற விவசாய தொழில் சிறக்க சட்ட திட்டங்களை இயற்றி செயல்படுத்தும் மனதிடனை அவர்களுக்கு அளித்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) இயற்கை சீற்றம், பொய்த்த பருவமழை, விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உலகமயமான சந்தை பொருளாதாரம் போன்ற தீய சக்திகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகள் உமது அருள் துணையோடு, நியாயமான தொழில் முறைகளை பின்பற்றி உழைக்கவும், அவர்கள் வாழ்வு ஏற்றம் காணவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5) இந்த பொங்கல் விழா வழிபாட்டில் கலந்து கொள்ளும் நாங்கள் அனைவரும் விவசாய மக்களையும், அவர்களின் உழைப்பையும் மதித்து, சுயநல உணர்வோடு உணவு பொருட்களை பதுக்காமல், நல்மனத்தோடு அவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனத்தை எமக்கு தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


நம்பிக்கையாளரின் மன்றாட்டு: நன்றி: அருள்வாக்கு 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, வளமான நிலத்தில் விளைந்த இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; நிலத்தின் விளைச்சலை இவ்வுலகப் பயன்பாட்டுக்காக வழங்கியது போல் எங்கள் உள்ளங்கள் விண்ணக நலன்களால் வளம் பெறச் செய்வீராக. எங்கள். ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை V (பக். 540).


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 103:13-15

ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்; மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலத்தின் கனிகளில் இருந்து சேகரித்தவற்றை உம் திருமுன் கொண்டு வந்து நலம் தரும் இம்மறைநிகழ்வில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; அதனால் எங்களில் செயல்படும் இம்மறைபொருளின் ஆற்றலால் இன்னும் மிகுதியாக நலன்களைப் பெற்றுக்கொள்ளும் தகுதி பெற அருள்புரிவீராக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...