Friday, 24 May 2024

தூய்மைமிகு மூவொரு கடவுள் திருவிழா - 26/05/2024



திருப்பலி முன்னுரை 

'மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்'

இறை அன்பில் இணைந்திடும் இறை குலமே, இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம். பெந்தகோஸ்தே ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்துவரும் ஞாயிறு, அதாவது இன்று நாம் தூய்மை மிகு மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 

படைப்பின் தொடக்கத்திலே இருந்து இவ் இறைபிரசன்னம் இன்றும் எம்மோடு இருக்கின்றது. கபிரியேல் தூதர், அன்னை  மரியாவுக்கு இறைவார்த்தை அறிவித்த போது, இயேசுவின் திருமுழுக்கின் போது என இத்திரித்துவ பிரசன்னம் தொடர்ந்தும் இருப்பதை காணலாம். திரு அவை வரலாற்றிலே காணப்பட்ட பல்வேறு வகையான பேதகங்கள் மத்தியில் அதற்கான பதிலடியாக சங்கங்கள் கூட்டப்பட்டு, பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, அவைகள் செபங்களாக, விழாக்களாக வழிபாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது. பதின்னான்காம் நூற்றாண்டில் தான் இதை ஒரு பெருவிழாவாக கொண்டாடும் படி திரு அவையின் நாட்காட்டியிலே சேர்த்துக்கொள்ளப்பட்டது. 

இன்று இப்பெருவிழா எம்மை இறை நம்பிக்கையில் வாழ, வளர அழைக்கின்றது. 'என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்' எனும் இயேசுவின் வார்த்தைகள் இன்று இத் திரித்துவத்தை முழுமையாக பற்றுக்கொண்டு வாழ அழைக்கின்றது. இயேசுவை முழுமையாக நற்கருணை வழியாக, அவர் வார்த்தை வழியாக அனுபவிக்கின்ற நாங்கள், இத் திரித்துவத்தையும் முழுமையாக அனுபவிக்கின்றோம் என்பதே உண்மை. 

ஆகவே, நாம் பெற்றுக்கொண்ட அனைத்து அருட்கொடைகள் வழியாக இத்திருத்துவத்தின் பிரசன்னம் எம்மில் செயலாற்றுகின்றது, இதற்காக நாம் நன்றி சொல்லுவோம். இவ்வுலகை வியாபித்திருக்கும் அப்பிரசன்னம், அதை அனைத்து கறைகளில் இருந்தும் காத்து, புனிதப்படுத்தி, இவ்வுலகமும் அதில் வாழும் நாமும், மூவொரு கடவுளை போற்றி, புகழ்ந்து இவ்வுலகமெங்கும் பறைசாற்றிட அருள் வரம் கேட்டு இப்பலியில் மன்றாடுவோம். திரு அவையோடு இணைந்து இப்பெருவிழாவின் பொருள் உணர்ந்து, இவழிபாட்டில் வாழ்வாகிட வரம்கேட்போம்.

வருகைப் பல்லவி

தந்தையாகிய கடவுளும் கடவுளுடைய ஒரே திருமகனும் தூய ஆவியாரும் வாழ்த்தப்பெறுவாராக் ஏனெனில் அவர் நம்மீது தமது இரக்கத்தைப் பொழிந்தருளினார்.

திருக்குழும மன்றாட்டு

தந்தையே இறைவா, உண்மையின் வார்த்தையையும் புனிதப்படுத்தும் தூய ஆவியாரையும் உலகுக்கு அனுப்பி உமது வியத்தகு மறைபொருளை மானிடருக்கு வெளிப்படுத்தினீர்; நாங்கள் உண்மையான நம்பிக்கையை அறிக்கையிடுவதன் வழியாக என்றுமுள்ள மூவொரு கடவுளின் மாட்சியை அறிந்து கொள்ளவும் உமது மாண்பின் பேராற்றலில் நீர் ஒருவராக இருக்கின்றீர் என ஏற்று வழிபடவும் எங்களுக்கு அருள்வீராக.

முதலாம் இறைவாக்கு

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40

மேலே விண்ணிலும், கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள்.

பதிலுரைப் பாடல்: 33 

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

இரண்டாம் இறைவாக்கு

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17

கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.

நற்செய்தி இறைவாக்கு

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

இறைமக்கள் மன்றாட்டு

குரு. கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டதால் நாம், கடவுளை 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம். இந்த உரிமையோடு, நாம் எமது தேவைகள் விண்ணப்பங்களை அவர் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.  

1. எமது திரு அவையின் வாழ்வு மலரவும், அதன் புனிதத்துவம் காத்திடவும், உலகின் தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகிட உழைக்கும் அனைவரையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

2. எமது பங்கு சமூகம், தங்கள் வாழ்வில் திருத்துவத்தின் பிரசன்னத்தை அறிந்து, அனுபவித்து, பறைசாற்றிட, மகிழ்ச்சியும், நிறை அமைதியும் மிளிர்ந்திட, அதை அனைவரோடும் பகிர்ந்து வாழும் வரமருள வேண்டுமென்று, ...

3. ஜுபிலி ஆண்டை நோக்கி நாம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் பலனளிக்கவும், ஜுபிலி ஆண்டு வேண்டிநிற்கும் உலக அமைதி, மனித சமத்துவம், உரிமை வாழ்வு, ஏழைகளின் மான்பும் மகத்துவமும், மேலும் யுத்த நிறுத்தம் என அனைத்தும் வெற்றி காண அருள்புரிய வேண்டுமென்று, ...

4. எமது மக்களின் வாழ்வாதாரம் மேலோங்கவும், பல்வேறு காலநிலை பிறழ்வுகளில் இருந்து அனைவரையும் காக்கவும், முன்னெடுக்கும் எம் மக்களின் முயற்சிகள் கைகூடவும், பசியும், பட்டினியும் அகலவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

5. பல்வேறு காரணங்களால் நேய்க்குள்ளாகி, நம்பிக்கையின் விளிம்பில் பல்வேறு கோணங்களில், வைத்தியசாலைகளில், இல்லங்களில் தவிக்கும் அனைத்து நோயாளிகளும் நலம்பெறவும், தமது வாழ்வில் பிறக்கும் நம்பிக்கையால் புதிய பாதை அமைக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு: அன்பும் வல்லமையும் நிறைந்த இறைவா! இவ்விலகில் சிறந்தவர் நீர் ஒருவரே என்பதை முழுமையாக நம்புகின்றோம். இத் திரித்துவ பெருவிழாவில் மகிழ்ந்து உம்மை போற்றுகின்றோம். உமது பிரசன்னம் எம்மில் செயலாற்றுவதை இட்டு நாம் உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று உம் அன்பு பிள்ளைகளாக உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளும் உமது திருவுளத்தால் நிறைவேறிட எமக்கு அருள்புரிவீராக. எங்கள்.  அனைவரோடும் இணைந்து எமது தேவைகளை முன்வந்து ஒப்புக்கொடுக்கின்றோம். தயவுடன் இவற்றிற்கு செவிசாய்த்து ஏற்றருளவேண்டுமென்று, எங்கள். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உமது பெயரை மன்றாடி நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எங்கள் பணியின் காணிக்கைகளைத் தூய்மைப்படுத்தியருளும்; இதன் வழியாக எங்களையே உமக்கு உகந்த நிலையான காணிக்கையாக மாற்றுவீராக. பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

கலா 4: நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா. தந்தையே' எனக் கூப்பிடுகிறது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் நிலையான தூய மூவொரு கடவுள்தன்மையையும் பாகுபாடற்ற ஒருமையையும் அறிக்கையிடுகின்றோம்; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு உடல், உள்ள நலனை அளிப்பதாக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி...

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...