திருப்பலி முன்னுரை
உமது வார்த்தையே உண்மை.
இறை இயேசுவில் பிரியமுள்ள இறைமக்களே! பாஸ்கா காலம் ஏழாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். மீண்டும் இயேசுவின் அன்பு பெறுமதியானது, ஆழமானது, தனித்துவம் நிறைந்தது என இன்றைய மூன்று இறைவார்த்தைகளும் சான்றுபகிர்கின்றன. இந்த உலகத்திலே, பலர் இறக்கின்றனர், பல குழந்தைகள் பிறக்கின்றன, பல தலைமுறை புதிதாக உருவாகின்றன, பல தலைமுறை இல்லாமலே போகின்றன. ஆனால், இயேசுவின் அன்பு இன்னும் இன்றும் மாறாமலே இருக்கின்றது. அவரது இரக்கம் பொங்கிவழியும் ஊற்றாக திகழ்கின்றது. அவரது அருள் எமக்கு நிறைவாகவே கிடைக்கின்றன.
மாறுபட்ட எண்ணங்கள், விதண்டா வார்த்தைகள், பொறாமையோடு கூடிய பழிவாங்கல்கள், பிறர்வாழ்வை தடம்புறழ வைக்கும் சூழ்ச்சிகள், நம்மைச் சுற்றி அமைக்கும் குட்டி அதிகாரங்கள், அளவுக்குமீறிய ஆசைகள், பிறருக்காக ஏந்தாத கைகள், சுயநல செபங்கள் என எமது வாழ்வு இன்று முடக்கப்பட்டுவிட்டது. கடவுள் அன்பாய் இருக்கிறார், அந்த அன்பில் உறவு இருக்கின்றது என்பதை தனது சாவினால், உயிர்ப்பினால் எண்பித்தவர் இயேசு.
அயலாருக்கு எதிரானப் பாவம் கடவுளுக்கும் எதிரானது என்பதை திருத்தந்தை தனது சந்திப்பின் போது கூறியிருந்தார். இன்று நாமும் இயேசுவின் அன்பை அவரது பாஸ்கா மறைபொருளில் காணவேண்டும். அவரது அழியா உணவாகிய உடலிலும் இரத்தத்திலும் காணவேண்டும். எம்மை சந்திக்கும் உறவுகளில் காணவேண்டும், இயற்கையை உவந்தளிக்கும் இவ்வுலகில் காணவேண்டும். இச் சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் கலந்துகொள்வோம். .
வருகைப் பல்லவி
காண். திபா 26:7-9 'ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் என் குரலைக் கேட்டருளும்; என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; ஆண்டவரே, உமது முகத்தைப் பார்க்க விரும்பினேன். உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும். அல்லேலூயா..
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, நாங்கள் கெஞ்சி மன்றாடுவதைக் கனிவுடன் எங்களுக்குத் தந்தருள்வீராக் அதனால் மனிதக் குல மீட்பர் உமது மாட்சியில் உம்மோடு இருக்கின்றார் என நம்பும் நாங்கள் அவர் வாக்களித்தபடி உலக முடிவுவரை எங்களோடும் இருக்கின்றார் எனக் கண்டுணரச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
முதலாம் இறைவாக்கு
திருத்தூதர் பணிகள் நூல்: 1: 15-17, 20ய, 20உ-26
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ளத் தேவையாயிற்று.
பதிலுரைப் பாடல்: 103
பல்லவி: ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார்.
இரண்டாம் இறைவாக்கு
யோவான் எழுதிய முதல் திருமுகம்: 4: 11-16
அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்..
நற்செய்தி இறைவாக்கு
யோவான் எழுதிய நற்செய்தி: 17: 11-19
நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.
இறைமக்கள் மன்றாட்டு
குரு. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகளில் எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். அன்பின் இறைவா! நீர் அழைத்தவர்களை தேர்ந்தெடுத்து, உமது பணிக்காக இவ்வுலகிற்கு அனுப்புகின்றீர். உம்மை எதிர்ப்பவர்கள் மத்தியில், உம்மைவிட்டு தவறி போகின்றவர்கள் மத்தியில், பொய்யான விழுமியங்கள், போதனைகள் மத்தியில், உம்மை ஒளியாக தாங்கிக்கொண்டு, உப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் உமது அருளை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. உலக சமாதானத்திற்காக மன்றாடுவோம்;. வழிநடத்தும் இறைவா! உலகின் பல்வேறு கோணங்களிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களால் பாதிக்கப்பட்டு, இறந்துகொண்டிருக்கும் எமது உறவுகள், தமது நீதியையும், சுதந்திரத்தையும், உரிமையையும் இழந்துவிடாமல் காத்திட, அருள்புரிய வேண்டுமென்று ...
3. இப்போர்களிலே, பசி, வறுமை, கைவிடப்பட்ட நிலை, நோய், அதிகமான குளிர் என பல்வேறு புறக்காரணிகளால் அவதியுறும் எம் உறவுகள், பல்வேறு உதவும் கரங்களால் காக்கப்படவும், எவ்வித இடையூறும் இன்றி உம்மை தொடர்ந்தும் பற்றிக்கொண்டு வாழ அருள்புரியவேண்டுமென்று ...
4. இறை அழைத்தலுக்காக மன்றாடுவோம். அழைத்தலின் ஆண்டவரே, உம்மிலே அதீத நம்பிக்கைகொண்டு, இவ்வுலகின் வாழ்வுக்காக, அதன் புனிதத்துவத்திற்காக, அதன் உயர்ச்சிக்காக முன்வரும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதியும். தமது சுயநலனை அன்று பிறருக்காகவே வாழ்ந்து சான்றுபகரும் வல்லமையை அளித்திடவேண்டுமென்று ...
5. எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். எமது பங்கிலே நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், மன உழைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இயலாமையில் தவிப்பவர்கள் என அனைத்து உறவுகளையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இறைவா குணப்படுத்தும் வல்லமையால் இவர்களை ஆற்றியருளும், தமக்கு முன் தெரியும் அனைத்து தடைகளையும் ஏற்றுக்கொண்டு வாழும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று ....
குரு: அன்பின் ஆண்டவரே, நீரே ஏமது உறைவிடம், நீரே எமது அடைக்கலம் என உம்மையே நாம் நாடி வந்திருக்கின்றோம். உம்மிடம் நாம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் ஏற்று நிறைவுசெய்வீராக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியினால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
யோவா 17:22 - தந்தையே, நாம் ஒன்றாய் இருப்பது போல, அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு வேண்டுகிறேன், அல்லேலூயா.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
இறைவா, எங்கள் மீட்பரே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் தலையாகிய கிறிஸ்துவோடு அவரது உடலாகிய முழுத் திரு அவையும் புனிதமிக்க மறைநிகழ்வுகள் வழியாக இணைந்திருக்கின்றது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள அருள்வீராக. எங்கள்.

Comments
Post a Comment