Saturday, 4 May 2024

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு வாரம் - 05/-5/2024

 


திருப்பலி முன்னுரை 

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். 

கிறிஸ்து இயேசுவில் என் அன்புக்குரிய இறைமக்களே. அன்பின் உயர் மதிப்பாம் சிலுவையில் தனது உயிர் கொடுத்து, அதை தன் நினைவாகச் செய்யுங்கள் என எம்மை பணிக்கும் இயேசுவின் கல்வாரிப் பலிக்கு ஒன்றுகூடிவந்துள்ளோம். இன்று பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இயேசுவின் உயிர்ப்பு தரும் பாடங்கள் இன்னும், இன்றும் எம்மை அவர்பால் தொடர்ந்தும் ஈர்க்கின்றது. 

இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு விடுக்கும் சவால் புதியதே. புதுமையான உலக வழக்கங்களுக்கும் போக்குகளுக்கும், போதனைகளுக்கும் புதிய திருப்பமாக அமைகின்றன இன்றைய இறைவார்த்தைகள். தூய ஆவியின் துணைகொண்டு செயற்படும் திரு அவை, அனைவருக்கும் உரியதே என முதல் இறைவார்த்தையும், அன்பில் உலகை கட்டுங்கள், அவ் அன்பால் உலகை வெல்லுங்கள் என எம்மை அன்புசெய்யும் இயேசுவின் உள்ளார்ந்த உணர்வுகளை தெளிவுபடுத்துகின்றது இரண்டாம் மற்றும் நற்செய்தி இறைவார்த்தைகள். அன்பு செயற்படவேண்டும், அன்பு உணர்வுகளாக வேண்டும், அன்பு எமது செயல்களாக வேண்டும். 

மலர்களில் மணம் நிறைந்துள்ளது போல், இன்று எம் உறவுகள் இணைவதில் அன்பு மலரவேண்டும். இயேசு அன்பினால் தன்னைக் கொடுத்தார் அவ் அன்பை நாமும் உணர்ந்து வாழ இன்றைய இப்பலியின் வழியாக மான்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண், எசா 48:20

ஆரவாரக் குரலெழுப்பி, முழங்கி அறிவியுங்கள்: எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள். ஆண்டவர் தம் மக்களை மீட்டு விட்டார், அல்லேலூயா.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உயிர்த்தெழுந்த ஆண்டவரது மாட்சியின் பொருட்டு பேரின்பத்தின் இந்நாள்களைப் பொருளுணர்ந்து ஈடுபாட்டுடன் கொண்டாட எங்களுக்கு அருள்புரியும்; அதனால் நாங்கள் நினைவுகூர்ந்து கொண்டாடுவதை என்றும் செயலில் கடைப்பிடிப்போமாக.  உம்மோடு.

முதலாம் இறைவாக்கு

திருத்தூதர் பணிகள் நூல்: 
10: 25-26,34-35,44-48

தூய ஆவியின் கொடை பிற இனத்தவர் மீதும் பொழியப்பட்டது.

இரண்டாம் இறைவாக்கு

யோவான் எழுதிய முதல் திருமுகம்: 4: 07-10

கடவுள் அன்பாய் இருக்கிறார்.

நற்செய்தி இறைவாக்கு

யோவான் எழுதிய நற்செய்தி: 15: 9-17

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

பதிலுரைப் பாடல்: 98 

பல்லவி: பிற இனத்தார் முன் ஆண்டவர் தம்  நீதியை  வெளிப்படுத்தினார்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது எனும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளுக்கு ஒப்ப நாமும் எம் அயலவர்களை அன்புசெய்ய முன்வருவோம்.  நாம் மற்றவர்களின் நன்மை கருதி, பிறரின் வாழ்வை வைகறையாக மாற்ற எமது தேவைகளை விண்ணப்பங்களை ஒப்புக்கொடுப்போம். 

1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். இறைவா, உமது திரு அவையை எல்லா கறைகளில் இருந்தும் காத்தருளும். உமது அன்புப் பணி என்றும் தொடரவும் தூய ஆவியால் அதைக் காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று,... 

2. எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம். இறைவா, குடும்பமாக இணைந்து வாழ்வது பற்றி ஆழமாக கற்பித்திருக்கின்றீர். இன்று எமது குடும்பங்களை ஆசீர்வதியும். எமது குடும்பத்தில் பிரிவுகள் இன்றி ஒன்றிப்பையும், பிளவுகள் இன்றி பாசத்தையும், வேறுபாடுகள் இன்றி சமத்துவத்தையும், சந்தேகம் இன்றி புரிந்துணர்வையும், கோபம் இன்றி அன்பையும், நாம் அதன் கனிகளாக விதைத்திட வரமருளவேண்டுமென்று,...

3. மனதில் அமைதி தேடி அலையும் உள்ளங்களுக்காக மன்றாடுவோம். இறைவா, பல்வேறு புறக்காரணிகளால் பாதிப்புற்று மன அழுத்தத்தாலும், சொல்லொன்னா துயரத்தாலும், துன்பத்தாலும் வேதனையுற்று தினமும் வாடும் அனைவருக்கும் வாழ்வின் புதிய வழியைக் காட்டியருளும். வாழ்வது நான் அல்ல, எனில் இயேசுவே வாழ்கின்றார் என்று அவரில் பற்றிக்கொண்டு, அனைத்தையும் தாங்கும் மனத்தையும், துன்புறுத்துவோருக்காக செபிக்கும் பண்பையும் எமக்கு தந்தருள வேண்டுமென்று,...

4. எமக்காக மன்றாடுவோம். இறைவா, எமது வாழ்வை ஆசீர்வதித்தருளும். எமது எண்ணங்கள் சீரானவையாக அமைவதாக. எமது தீர்மானங்கள் ஒழுக்கம் நிறைந்தவையாக அமைவதாக. எமது தீர்ப்புக்கள் நீதியானவையாக அமைவதாக. இதனால் நாம் அமைக்கும் குடும்பமும், சமூகமும், எமது பங்கும் சீரான, முதன்மையான புனிதம் நிறைந்த உலகை கட்டியெழுப்ப அருள்புரிய வேண்டுமென்று, ...

விருப்பமானால்

5. அன்னையின் பரிந்துரைக்காக மன்றாடுவோம். இறைவா, உமது நன்மையால் எமது பங்கிற்கும் மறைமாவட்டத்திற்கும் உமது அன்னையாம் மடு அன்னையை அளித்ததற்காக நன்றி கூறுகின்றோம். அத்தாயின் வருகையால் எமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நன்மைத்தனங்களும் ஆசீர்வாதங்களும் கிடைக்கச் செய்தருளும். அவளின் பரிந்துரை என்றும் எமக்காக இருக்கவேண்டுமென்று,...

குரு: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என மொழிந்த இறைவா. உம்மிடம் முழு நம்பிக்கையோடு எமது தேவைகளை ஒப்புக்கொடுக்கின்றோம். எம்மைச் சுற்றியிருக்கும் அனைவருமே எமது அயலான்கள், நண்பர்கள் என உணர்ந்து அவர்கள் அனைவருக்காகவும் ஒப்புக்கொடுத்த இவ்வேண்டல்கள் பயன் தருவதாக. எங்கள்.  

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியின் காணிக்கைகளோடு எங்கள் வேண்டல்கள் உம்மை நோக்கி எழுவனவாக் இவ்வாறு நாங்கள் உமது மேன்மையால் தூய்மையாக்கப்பட்டு உமது பேரிரக்கத்தின் அருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:15-16 
நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன், அல்லேலூயா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
Communauté Internationale Des Missionnaires Oblats,
60, Cours Mirabeau, 
13100, Aix-en-Provence,
France. 
+94 77 232 3266,
+33 61 331 3213

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...