Saturday, 18 May 2024

தூய ஆவி ஞாயிறு - பெந்தக்கோஸ்து பெருவிழா - 19/05/2024


திருப்பலி முன்னுரை 

தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இறை அன்பில் நிலைத்திருந்து, நாளும் பொழுதும் அவர் புகழ்பாடவும், அவர் அருள்தனை பெற்று, தூய உள்ளத்தினராய் அவரோடு வாழவும், இறைவரம் வேண்டி, வந்திருக்கும் என் அன்பு உறவுகளே! உங்கள் அனைவரையும் இக்கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றோம். இன்று பெந்தக்கோஸ்து ஞாயிறு தினமாகும். தூய ஆவியின் வருகைதான் எமது திரு அவையின் பிறந்ததினமாகும். இன்றைய நாளை நாம் பெருமகிழ்வுடன் வரவேற்போம். 

திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய தூய ஆவி, இன்று உலகமெல்லாம் வியாபித்து, திரு அவைக்கும் இவ்வுலக மாந்தருக்கும் தேவையான அருளையும், கொடைகளையும் கொடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். திரு அருட்கொடைகளை எமக்கு அளித்து, அதன் வழி, உலகை புனிதப்படுத்தியும், அபிஷேகித்தும், இன்றும் என்றும் எமக்கு வல்லமை அளித்துக்கொண்டிருக்கின்றார். நாம் பலராயினும், பல மொழியினராயினும், நாம் நம்பும் தூய ஆவி ஒன்றே, அவர் அருளும் வல்லமையும், கொடைகளும் ஒன்றே. தூய ஆவியைப் பெற்றே, திருத்தூரத்கள் துணிந்து சென்றனர், தூய ஆவியினாலே பல தீமைகளை வென்றனர், பல தீயவர்களை துணிந்து எதிர்த்தனர். 

இன்று தூய ஆவியைப் பெற்ற இறைமக்களாக இங்கே ஒன்று கூடியிருக்கின்றோம். நாம் தூயோராய் வாழ்ந்து, இறை நம்பிக்கையின் தூண்களாய் மிளிர்ந்து, திரு அவையின் புனிதம் காத்து வாழ்ந்திட மன்றாடுவோம். அக்கினியின் வல்லமை எல்லார் மேலும் பொழியப்பட்டு புது உலகம் படைத்திட மன்றாடுவோம், நாம் செல்லும் பாதைகள் தெளிவற்றதாயினும், பொருளற்றதாயினும், பண்பற்றதாயினும், உறவற்றதாயினும், இயேசு ஒருவருக்கே சான்றுபகரும் பணியில், உயிருள்ள ஆற்றல் தரும் தூய ஆவி எமக்கு துணை நிற்க மன்றாடுவோம். உலகெங்கும் போரிடும் படைகளுக்கு ஆயுதங்கள் பலமாயினும், எமது நம்பிக்கையின் வாழ்வுப் போராட்டத்திற்கு துணை நிற்கும் தூய ஆவி எம்மை தாங்கி, வழி நடத்த இப்பலி வழியாக வரங்கேட்டு மன்றாடுவோம். 

விருப்பமானால் இதை முன்னுரையோடு இணைத்துக்கொள்ளலாம் ...

எமது திருத்தந்தை 2025ம் ஆண்டை ஜுபிலி ஆண்டாக பிரகடணப்படுத்தியுள்ளார். இவ்வாண்டு எமது கிறிஸ்தவ வாழ்வுக்கும், கத்தோலிக்க திரு அவைக்கும், ஏன் இவ்வுலகிற்குமே கொடுக்கப்படும் ஒரு சவாலாகும். மாறுபட்ட விசுவாச விழுமியக் கொள்கைகள் மத்தியில், போதை கலாசாரம் மற்றும் பொய்மையான வாழ்க்கை மத்தியிலும்,  இயற்கைக்கு எதிரான மனித சிந்தனைகள் மத்தியிலும், அரசியல் சுயலாபங்களுக்காக நடத்தப்படும் போர்கள் மத்தியிலும், வேலையற்ற, அமைதி, நீதி தேடி அலையும் நிலமை மத்தியிலும், நாடு விட்டு நாடு செல்லும் புலம்பெயர் அகதிகள் மத்தியிலும், தொலைத்தொடர்பு சாதனங்களின் வன்முறையான மனிதப்பண்பு படுகொலை மத்தியிலும், இந்த ஜுபிலி ஆண்டு ஓர் அழகிய பாடத்தை இவ்வுலகிற்கு கற்றுத்தர இருக்கின்றது. இவைகள் மாற்றங்காண திருத்தந்தை எடுக்கும் இவ்வழகிய முயற்சியை வரவேற்று அதற்காக இப்பலியின் வழியாக மன்றாடுவோம். 


இறைமக்கள் மன்றாட்டு

குரு. இறை இயேசுவில் என் அன்பு பிள்ளைகளே! இன்று நாம் பெரு மகிழ்வோடு இத் தூய ஆவியின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் அருளினால் நாம் அவர் பிள்ளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, சீடர்களாக அழைக்கப்பட்டுள்ளோம். அவர் தூண்டுதலால், நாம் அவரின் உரிமைப் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுள்ளோம். எனவே, நாம் அவரிடம் எமது விண்ணப்பங்கள் வழியாக இறைவரம் கேட்டு மன்றாடுவோம். 

1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். தூய ஆவியால் பிறந்திருக்கும் எமது திரு அவை இன்று மகிழ்கின்றாள். இது கடந்துவந்த பல பேதகங்கள் மத்தியிலும், போர்கள் மத்தியிலும், பல அரசியல் கெடுபிடிகள் மத்தியிலும், அழிவுகள் மத்தியிலும் இன்றும் அதன் புனிதம், மகிமை குன்றா, தொடர்ந்தும் வழிநடத்தி வரும் இறை ஆவிக்கு நன்றி கூறுகின்றோம். தொடர்ந்தும், இவ் இறைபணி இத்திரு அவையில் வளர்ச்சிகாணவும், அதற்காக பலர் தம்மை அர்ப்பணிக்கவும் வரம்வேண்டி, ...

2. எமது கிறிஸ்தவ வாழ்வுக்காக மன்றாடுவோம். தூய ஆவியால் புதுப்படைப்பாக பிறந்துள்ள நாம், அவர் ஞானம் நிறைந்த வார்த்தைகளால் தூண்டப்பெற்று, அமைதியும் மகிழ்ச்சியும் தரும் அவர் உடனிருப்பால் ஆறுதல்பெற்று, வாழ்வின் அதிசயங்கள் தரும் பாடங்களாக அவர் கொடைகள் மாற்றம் பெற்று, தெய்வபயம் என்றும் எப்பொழுது எமக்குள் ஊற்றெடுத்து இறைவனையே பற்றிக்கொண்டு அவரை விட்டு விலகிடா மனம் தர வேண்டுமென்று, ... 

3. எமது பங்கிற்காக மன்றாடுவோம்.  படைப்பிலே மூவொரு கடவுளாய் ஒன்றித்து செயற்பட்டது போல, உலகம் முடிவுவரை எந்நாளும் உங்களுடன் இருப்பேன் என்று உறுதிமொழி அளித்து தூய ஆவியை பொழிந்தது போல, எமது பங்கிலும் உமது வல்லமை பெருகட்டும். பிளவுகள் அகன்று, தவறுகள் களைந்து, வேறுபாடுகளும், பாகுபாடுகளும் இல்லாதொழிந்து, பகைமையை தகர்த்தெறிந்து புதிய வழி காணும் மக்களாக எமை மாற்றும். நாம் திருமுழுக்கிலே கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாக இருந்து தொடர்ந்தும் செயற்பட அருள்புரியவேண்டுமென்று, ... 

4. ஜுபிலி ஆண்டுக்காக மன்றாடுவோம்.  திருத்தந்தையோடு இணைந்து, ஜுபிபி ஆண்டை முன்னோக்கி செல்லும் எமது திரு அவை, குறிப்பாக எமது மறைமாவட்டம் முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை ஆசீர்வதியும். ஏழைகள் இனங்காணப்படவும், அடிமைகள் தகர்த்தேறியப்படவும், அமைதியற்ற சூழல் மாற்றம் பெறவும், வன்முறைகள் ஒழியவும், சமத்துவம் எங்கும் எப்பொழுதும் வியாபித்திருக்கவும், தூய ஆவியின் துணை எம் அனைவருக்கும் கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

குரு: எல்லாம் வல்ல இறைவா, நீர் வாக்களித்தபடியே உமது ஆவியை எமக்கு அளித்து எம்மை உமது சுவிகார பிள்ளைகளாக, அரச, குருத்துவ திருக்கூட்டமாக மாற்றினீரே. உமக்கு நாம் நன்றி கூறுகின்றோம். நாம் எப்பொழுதும் தூய ஆவியால் வரம்பெற்று, அவர் தரும் வார்த்தைக்கு அடிபணிந்து செயற்படுவோமாக. எமது உள்ளத்தில் இருப்பவை, எமக்கு முன் வைக்கப்படும் தேவைகள் அனைத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீரே அவற்றை ஏற்று, உமது உல்லமையால் எம்மை நிறைத்தருள்வீராக. எங்கள்.

Fr. S. James Suren OMI

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...