திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் என் அன்பார்ந்த இறை உள்ளங்களே. கடந்துசென்ற காலங்களில், எம்மை கடந்துசென்ற ஆயிரம் ஆயிரம் உறவுகள், தமது தியாகத்தால், மொழி, இனப் பற்றால், போர் கொண்ட காலங்களில், எம்மை விட்டு மரித்துப் போன எமது தியாக உள்ளங்களுக்காக செபித்து, பலி ஒப்புக்கொடுக்க கூடிவந்துள்ளோம்.
இரத்தம் தோய்ந்த நாள் அது, இதயத் துடிப்பின்றி சென்ற நாள் அது. வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை, வெறுங்கையாய் வீசி எறியப்பட்ட நாள் அது. பசியும், பாசமும் மாறி மாறி பாடம் தந்த நாள் அது. பார்த்தவர்கள் முன்னால் சிதறிப்போன நாள் அது. இவர்கள், இவைகள் எங்கள் இதயத்தில் இன்னும் ஆழமாய் தேங்கிக் கிடக்கின்றன.
'என் அன்பில் நிலைத்திருங்கள்.' யோவா: 15:9 எனும் இயேசுவின் அழகிய வார்த்தை இன்று எமக்கு அழகிய, ஆழமான இறையியல் அனுபவத்தைத் தருகின்றது. நாம் உறவுகளை இழந்திருக்காலாம் ஆனால் அன்பை இழக்கவில்லை, நாம் உரிமையை இழந்திருக்கலாம் ஆனால் தனிச் சுதந்திரத்தையும் தைரியத்தையும் இழக்கவில்லை, சொத்துக்கள், உடமைகளை இழந்திருக்கலாம், ஆனால் இறை நம்பிக்கையை இழக்கவில்லை. இன்று தியாக உள்ளங்களாக, உறவுகளாக, சொந்தங்களாக மரித்துப் போன அனைவருக்காகவும் இத் திருப்பலி வழியாக மன்றாடுவோம். இறைவன் இவர்கள் ஆன்மாவை ஏற்று, புனிதர்களின் வரிசையில் இடமளிப்பாராக. இவர்களின் இழப்பால் துயருறும் அனைத்து சொந்தங்களும் ஆறுதலும், நம்பிக்கையும் அடைவார்களாக. இறந்த இவர்கள் அனைவரும்; கொண்டிருந்த தூர நோக்கு, எமது வாழ்வுக்கான வழியாகவும், அச்சாரமாகவும் திகழ்வதாக. இன்றும் பல்வேறு அரசியல் நெருக்கீடுகளால் துயருறும் எமது மக்கள், தாங்கள் விரும்பும் அமைதியையும், மகிழ்வையும், நீதியோடு கூடிய சம உரிமை உணர்வையும் அனுபவிப்பார்களாக. காற்றில் இயங்கும் கடல் அலைபோல, எம்மை இயக்கும் இயேசுவின் அன்பு எமக்குள் கிடக்கும் காயங்களுக்கு குணமளிப்பதாக, பிறர் மனம் தேடும் உள்ளங்களை உருவாக்குவதாக, நம்பிக்கை தளராமல், அமைதி தொலைத்திடாமல், அநுதினம் கரங்கள் கோர்த்து இலக்கை அடையும் வரம் கேட்போம். இதற்கான வரங்களை கேட்டு இப்பலியிலே தொடர்ந்தும் மன்றாடுவோம்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: அன்பார்ந்தவர்களே! இன்று நாம் அனைவரும், எமது சொந்தங்கள், உறவுகள், எமது உரிமை வாழ்வுக்கு துணைநின்றவர்கள், தூய நோக்கத்திற்காக உயிர் நீத்தவர்கள் அனைவருக்காகவும் செபித்துக்கொண்டிருக்கின்றோம். நன்மைத்தனங்களின் ஊற்றாகிய இறைவன் நாம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து வேண்டுதல்களையும் ஏற்றுக்கொள்வார் எனும் நம்பிக்கையில், எமது தேவைகளை அவர் பாதம் சமர்ப்பிப்போம்.
1. அன்பின் ஆண்டவரே, எமது திரு அவையிலே பணிபுரியும் அனைத்து திரு நிலைப் பணியாளர்களும் உமது பாதையில் தொடர்ந்து நடந்திடவும், தூய வழியில் உம் மக்களை நடாத்திடவும், தியாகமும், வாஞ்சையும் கொண்டு பணியாற்றிடவும் தேவையான அருளை பொழிந்திட வேண்டுமென்று ...
2. திரு அவையில் உம் மக்களுக்காக பணிபுரிந்து, நீதிக்காக குரல்கொடுத்து, உரிமைக்காக, உறவுக்காக வாழ்ந்து மரித்த அனைத்து குருக்கள் துறவிகளும், உமதண்டை வந்துசேரவும்;, அவர்கள் வழி அனைவரும் நடந்திடவும் அருள்புரிய வேண்டுமென்று ...
3. அன்பின் ஆண்டவரே, எமது இலங்கை திரு நாட்டில் நடைபெற்ற யுத்தத்திலே மரித்துப் போன எமது மக்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களை உமது சாந்நிதானத்தில் ஏற்றருளும். இவர்களின் பாவங்களை அல்ல மாறாக இவார்களின் தியாகத்தையும், உரிமைக்காக இவர்கள் சிந்திய இரத்த துளிகளையும் கண்ணோக்கி, நித்திய அமைதியை அளித்தருள வேண்டுமென்று...
4. நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் என மொழிந்த இறைவா! கடந்த போரிலே பாதிப்புற்று, தமது அங்கங்களை இழந்தவர்கள், கணவன், மனைவி, பிள்ளைகளை இழந்து தவிப்பவர்கள் அனைவரும் ஆறுதல் பெறவும், இவர்களின் துயரங்கள் துடைக்கும் கரங்கள் ஆசீர்பெறவும் வேண்டுமென்று ...
5. வல்லமையின் இறைவா, நீதிக்காக, தமது உரிமைக்காக குரல்கொடுக்கும் அனைத்து முயற்சிகளும் கைகூடவும், மனிதம் வளரவும், உரிமைகள் பாதுகாக்கப்படவும், நீதி செழித்தோங்கவும், இதற்காக பாடுபடும் அனைத்து உள்ளங்களும் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுமென்று ...
குரு: வல்லமையுள்ள இறைவா! இன்று நாம் அனைவரும் எமது உள்ளத்தில் பொதிந்துகிடக்கும் அனைத்து தேவைகளையும் உமது பாதம் கண்ணீரோடு ஒப்புக்கொடுக்கின்றோம். இவற்றை நீர் ஏற்றுக்கொள்வீராக. எமது நாட்டின் நல் வாழ்வுக்காக, எமக்கு முன் இரத்தம் சிந்தி மரித்தவர்கள் தங்கள் வாழ்வில் காட்டிய அனைத்து முன்மாதிரிகைகளையும் நாம் ஏற்று நடத்தச் செய்தருளும். நாம் இன்னும் அதிகமாக அன்பையும், நீதியையும், பிறரன்பையும், சம உரிமையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளச் செய்தருளும். எமது தேவைகளை ஏற்று அவற்றை நிறைவுசெய்வீராக. எங்கள்.
இறைவார்த்தை (விருப்பமானால்)
முதலாம் இறைவார்த்தை - 1 கொரிந்தியர் 13: 1-13
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.
இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில், இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க்காண்கிறோம்;
ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
திருப்பாடல் : 9:1-2, 8-9, 11, 16
பல்லவி: ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை அறிவியுங்கள்;
ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.
உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.
சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்; ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்; பொல்லார் செய்த செயலில் அவர்களே சிக்கிக்கொண்டனர்.
நற்செய்தி வாழ்த்தொலி
யோவான்: 15:12-13
'நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.
நற்செய்தி இறைவார்த்தை
யோவான்: 15: 7-9, 16:19-24
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். ''இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால், நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.
No comments:
Post a Comment